இந்திய இராணுவத்தில் நான்கு ஆண்டுகள் மட்டும் பணிபுரியும் வகையில் புதிய ஆள் சேர்க்கும் முறையான ‘அக்னிபத்’ திட்டத்திற்கு ஒன்றிய அரசு சமீபத்தில் அனுமதி அளித்தது. இந்த அறிவிப்பு வெளியான நாள் முதல் தொடர்ந்து பீகார், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் பெரும் போராட்டம் வெடித்துள்ளது. பல இடங்களில் ரயில்களுக்கு தீ வைக்கும் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது. தொடர்ந்து எதிர்ப்புகள் கிளம்பி வரும் நிலையில் கங்கனா உள்ளிட்ட சில பிரபலங்கள் இத்திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் தற்போது இயக்குநர் பேரரசும் அக்னிபாத் திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாகப் பேசிய அவர், "அக்னிபாத் திட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் ரயிலைக் கொளுத்துகிறார்கள். இவர்களுக்கு எங்கிருந்து இந்த தைரியம் வந்தது. இந்த மாதிரியான இளைஞர்கள் ராணுவத்திற்குச் சென்று எப்படி நாட்டை காப்பாற்றுவார்கள். இந்த மாதிரியான செயல்கள் மூலம் பொறுக்கிகளை அக்னிபாத் திட்டம் அடையாளம் காட்டியுள்ளது. பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் விளைவிக்கும் அவர்கள் தேசத் துரோகிகள். இது அயோக்கியத்தனமான வன்முறை. அக்னிபத் திட்டத்தில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் என அனைவருக்கும் வாய்ப்பு உண்டு. விருப்பம் இருந்தால் செல்லுங்கள், இல்லை என்றால் விட்டுவிடுங்கள்" என்று கூறியுள்ளார்.