விஜய் தற்போது பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கும் 'வாரிசு' படத்தில் நடித்து வருகிறார். இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் திருநாளை முன்னிட்டு வெளியாகவுள்ளது. தெலுங்கில் 'வாரசுடு' என்ற தலைப்பில் இப்படம் வெளியாகவுள்ள நிலையில் அதற்கு சிக்கல் ஏற்படும் வகையில் தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தது. அதில், அந்த அறிக்கையில், "தெலுங்கு திரைப்படத் துறையைக் காப்பாற்ற வேண்டும் எனும் நோக்கில் சங்கராந்தி(பொங்கல்) மற்றும் தசரா(விஜயதசமி) ஆகிய பண்டிகைகளின் போது, திரையரங்குகளில் நேரடி தெலுங்கு திரைப்படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று தீர்மானம் உள்ளது. எனவே விநியோகஸ்தர்கள் இந்த முடிவைப் பின்பற்றவேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் சிலர் இந்த அறிக்கை தொடர்பாக தனது கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விஜய் படத்திற்கு ஆதரவாக, "தமிழ்த் திரைப்படங்களின் வெளியீட்டுக்கெதிரான முடிவைத் தெலுங்குத் தயாரிப்பாளர் சங்கம் திரும்பப்பெறாவிட்டால், தமிழகத்தில் தெலுங்குத் திரைப்படங்களை வெளியிட விடமாட்டோம்" எனக் கூறியுள்ளார்.
இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த லிங்குசாமி மற்றும் பேரரசுவிடம் இது தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டது. அப்போது லிங்குசாமி கூறுகையில், "இந்த காலம் சினிமாவின் பொற்காலம். பான் இந்தியா என்ற வார்த்தை இப்போது தான் புதிது. ஆனால், சினிமா தொடங்கிய காலகட்டத்திலிருந்தே தமிழில் இருந்து தெலுங்கு உள்ளிட்ட பிற மொழிகளில் படங்கள் வெளியாகிக் கொண்டு தான் இருக்கிறது. ஓடிடி வந்த பிறகு எந்த நடிகர் என்று பாகுபாடு பார்க்காமல் தமிழில் எடுக்கப்பட்ட படங்களை மற்ற மாநிலத்தவர்களும் பார்க்கிறார்கள். இப்படி ஒரு முக்கியமான காலகட்டத்தில் இந்த ஒரு பிரச்சனை வரவே கூடாது. இப்போது தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையால் பிரச்சனை உருவாகினால் அது பெரிதாக பாதிப்பை ஏற்படுத்தும்.
அதாவது 'வாரிசு'க்கு முன், வாரிசுக்கு பின் என்று சொல்லக்கூடிய நிலைமை ஏற்படும். அந்த அளவுக்கு இது பெரிய விஷயமாக மாறும். இரண்டு மொழிகளிலும் சரியான தரமான ஆட்கள் இருக்கிறோம். அவர்கள் கலந்து பேசி சுமூகமான தீர்வு காணவேண்டும். தமிழ்நாட்டில் 'பாகுபலி', 'ஆர்.ஆர்.ஆர்' உள்ளிட்ட படங்கள் பெரிதாக ஓடியது. நம் படங்கள் தெலுங்கில் பெரிதாக ஓடுகிறது. கலை என்பது மொழிகளைத் தாண்டி தான் இருக்கிறது. இந்தப் பிரச்சனையை யாரோ ஒருவர் குறுகிய எண்ணத்தோடு ஏற்படுத்தியிருந்தால் அந்த எண்ணத்தை உடனே மாற்றிக்கொள்ள வேண்டும். அது யாராக இருந்தாலும் சரி. எண்ணம் மாற்றப்படவில்லை என்றால் நான் சொன்னது போல மோசமான நிலைமைக்கு தள்ளப்படும்" என்றார்.
இயக்குநர் பேரரசு பேசுகையில், "இப்படத்தில் என்ன கொடுமைனா இயக்குநர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர் என பல பேர் தெலுங்கை சேர்ந்தவர்கள். ஹீரோ மட்டும் தான் தமிழ் ஹீரோ. அதை வைத்து தான் கார்னர் செய்கிறார்கள். ஆனால் நாம் இங்கு மற்ற மொழி படங்களை கொண்டாடுகிறோம். யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. எந்த பாகுபாடும் இல்லாமல் பெருந்தன்மையோடு நடந்து வருகிறோம். ஆனால், அவர்கள் தெலுங்கு படங்களுக்கு தான் பண்டிகை நாட்களில் முன்னுரிமை கொடுப்போம் எனக் கூறுவது நம்மை அவமானப்படுத்துவது போல் உள்ளது. தயாரிப்பாளர் யாராக இருந்தாலும் அவர் தயாரிப்பாளர். அவருக்கு பாதிப்பு என்று வரும் போது, அது தெலுங்கு தயாரிப்பாளராக இருந்தாலும் சரி. வாரிசு ஒரு தமிழ் படம். இதற்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் குரல் கொடுக்க வேண்டும். அவர்கள் குரல் கொடுக்காவிட்டால் கூட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட நான்கு மொழிகளுக்குப் பொதுவாக இருக்கும் ஒரு அமைப்பு இதில் தலையிட்டு சரி செய்ய வேண்டும்.
இது வெறும் ரிலீஸ் என்று பார்க்க முடியாது. நாங்கள் எல்லா மொழி படங்களையும் ஒன்றாகவே பார்க்கிறோம். நீங்கள் ஏன் தமிழைப் பிரித்து பார்க்கிறீர்கள். இதனால் எங்கள் தமிழ் உணர்வைத் தூண்டுகிறீர்கள். நாம் தான் திராவிடம் திராவிடம் எனச் சொல்லிக்கொண்டு வருகிறோம். தெலுங்கு, மலையாளம், கன்னடம் மக்களை சகோதரர்களாகப் பார்க்கிறோம். ஆனால், ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் திராவிடம் என்ற வார்த்தை இல்லை. அதனால் அவரகள் தமிழர்களை திராவிடர்கள் எனப் பார்ப்பதில்லை. தமிழர்களை தமிழர்களாகத்தான் பார்க்கிறார்கள். இதற்கான ஒரு உதாரணம் தான் இந்த வாரிசு படப் பிரச்சனை. இந்தப் பிரச்சனையை சாதாரணமாக நாம் கடந்து போய்விட முடியாது. இது எங்களுக்கு மானப்பிரச்னை." எனக் காட்டமாகப் பேசினார்.