
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைமையில் பல்வேறு சங்கங்கள் இணைந்து, கடந்த ஆண்டு ஜூலையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். இக்கூட்டத்தில் பல்வேறு அதிரடி தீர்மானங்களை நிறைவேற்றினர். அதில் ஒன்றாக தனுஷ் பல தயாரிப்பாளர்களிடம் முன்பணம் பெற்றிருக்கும் சூழ்நிலையில் இனிவரும் காலங்களில் தயாரிப்பாளர்கள், தனுஷ் நடிக்கும் புதிய திரைப்படங்களின் பணிகளைத் துவங்குவதற்கு முன்பாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தைக் கலந்தாலோசிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தனர்.
இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக கடந்த ஆண்டு அக்டோபரில் தயாரிப்பாளர்கள் சங்க கட்டிடத்தில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைமையில் நடப்பு தயாரிப்பாளர் மற்றும் பெப்சி ஆகிய சங்கங்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தனுஷ் இரண்டு படங்களுக்கு முன்பணம் பெற்றுக் கொண்டு கால்ஷீட் தரவில்லை என்ற புகார் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. பின்பு இறுதியாக இரண்டு தயாரிப்பாளர்களில் ஒரு தயாரிப்பாளருக்கு கால்ஷீட் தருவதாகவும் மற்றொரு தயாரிப்பாளருக்கு வட்டியுடன் பணத்தை திருப்பி தருவதாகவும் தனுஷ் தரப்பில் ஒப்புதல் வழங்கப்பட்டது. இதையடுத்து அவரின் படங்களுக்கு தயாரிப்பாளர் சங்கம் ஒத்துழைப்பு கொடுக்க முடிவெடுத்தது.

இந்த நிலையில் தனுஷ் மீது புகார் கொடுத்த தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஃபை ஸ்டார் கிரியேஷன்ஸ் தற்போது ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி மீது சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். இது தொடர்பாக ஃபை ஸ்டார் கிரியேஷன்ஸ் சார்பில் அறிக்கை வெளியிட்ட அந்நிறுவனத்தின் பங்குதாரர் கலைச்செல்வி, “06.09.2024 அன்று திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எங்கள் நிறுவனத்தின் பங்குதாரர் என்ற முறையில் நான் கலந்து கொண்டு கனுஷ் எங்களிடம் ஆறு வருடங்களுக்கு முன், முன்பணம் பெற்றுக்கொண்டு இன்று வரை கால்ஷீட் தரவில்லை என்றும் அதனால் நாங்கள் அனுபவிக்கும் மனவேதனைகளையும் பதிவுசெய்தேன். அதனை புரிந்துகொண்ட எங்கள் தயாரிப்பாளர்கள் சங்கம் தனுஷ், எங்கள் நிறுவனத்திற்கு படம் நடித்து தரவேண்டும்(முன்பணம் பெற்ற அடிப்படையில் தயாரிப்பாளர்களுக்கு கால்ஷீட் தரவேண்டும்) என்று பேசிக் கொண்டு இருக்கும்போதே தாங்கள் குறுக்கிட்டு, டான் பிக்சர்ஸ் ஆகாஷின் ‘இட்லி கடை’ படப்பிடிப்பு நடக்கவேண்டும், ‘மேலிடத்து உத்தரவு’ என்று கூறியதை மறந்தீரோ?
மேலும் அக்டோபர் 30ம் தேதிக்குள் எங்கள் நிறுவனத்திற்கு நியாயம் வாங்கித் தருவதாக தாங்கள் எங்கள் சங்கத்தில் உறுதியளித்தீர்கள். நாங்கள் புதிதாக படம் தயாரிக்கவில்லை, ஏற்கனவே தனுஷ் நடித்த பொல்லாதவன். ஆடுகளம் படங்களை தயாரித்த நிறுவனம் என்று தங்களுக்கு நினைவு கூறுகிறேன். நீதி வழங்கத்தானே சங்கங்கள் உள்ளன? தங்களின் அரசியல் குறுக்கீட்டால் இன்று வரை எங்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை. வட்டிக்கு பணம் வாங்கி படமெடுக்கும் தயாரிப்பாளர்களின் வலியை எப்போது உணர்வீர்கள், தயாரிப்பாளர்களின் நலன் காக்க எங்கள் சங்கம் எடுக்கும் முயற்சிகளில் அரசியல் கலக்காமல் ஒத்துழைப்பு தருமாறு வேண்டிக்கொள்கிறேன். அன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் என்ன முடிவு எடுத்தோம் என்று வெளியே நின்றிருக்கும் பத்திரிகையாளர்களிடம் கூற வேண்டாம். அக்டோபர் 30ம் தேதிக்குள் நியாயம் கிடைக்கும் என்று என்னிடம் கூறிவிட்டு இன்று கதிரேசன் பிரச்சினை செய்கிறார் என்று சொல்வது தங்களின் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியை காட்டுகிறது. தயாரிப்பாளரின் நியாயம் அறியாமல் எப்படி உங்களால் இப்படி பொதுத்தளத்தில் மனசாட்சியின்றி பேச முடிகிறது...
மதிப்பிற்குரிய தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகம் சுவனத்திற்கு அன்று எங்கள் நிறுவனம் வைத்த கோரிக்கை தங்களிடமே நடிகர்களிடம் வட்டி பெறும் நோக்கத்தில் எந்த தயாரிப்பாளரும் முன்பணம் தருவதில்லை. தாங்கள் எடுக்கும் முடிவு அனைத்து தயாரிப்பாளர்களின் நலன் கருதியே, எங்களது வலியை உணர்ந்து விரைவில் நியாயம் பெற்றுத் தருமாறு தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.