Skip to main content

தனுஷ் - நயன்தாரா வழக்கில் உயர்நீதிமன்றம் எடுத்த அதிரடி முடிவு

Published on 22/01/2025 | Edited on 22/01/2025
dhanush nayanthara case update

விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதியின் திருமண ஆவணப்படம் நயன்தாரா; பியாண்ட் தி ஃபேரி டேல்’(Nayanthara: Beyond The Fairy Tale) என்ற பெயரில் கடந்த ஆண்டு நவம்பரில் நெட் ஃபிளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் வெளியானது. முன்னதாக இந்த ஆவணப்படத்தின் ட்ரைலர் வெளியானபோது, அதில் நானும் ரௌடி தான் படத்தின் மூன்று நிமிட படப்பிடிப்பு காட்சிகள் இருந்தது. இதற்கு அப்படத்தின் தயாரிப்பாளர் தனுஷ், ரூ.10 கோடி கேட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். 

இதையடுத்து அந்த நோட்டீஸுக்கு எதிர்வினையாக நயன்தாரா அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் தனுஷை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். மேலும் அவரது கணவர் விக்னேஷ் சிவன், அந்த மூன்று நிமிட படப்பிடிப்பு வீடியோவை இலவசமாகப் பாருங்கள் என்று தனது இஸ்டாகிராமில் ஸ்டோரி வைத்திருந்தார். அதைத்தொடர்ந்து வெளியாகியிருந்த அந்த ஆவணப்படத்தில் நானும் ரௌடி தான் படத்தின் படப்பிடிப்பு தள காட்சிகள் 20 வினாடிக்கு மேலாக இடம் பெற்றிருந்தது.

அதன் பின்பு தனுஷின் வொண்டர்பார் நிறுவனம், அனுமதியின்றி நானும் ரௌடி தான் படத்தின் படப்பிடிப்பு தள காட்சிகளை பயன்படுத்தியதாக நயன்தாராவுக்கு எதிராக சென்னை உயர்நீதி மன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். மேலும் அந்த மனுவில் எதிர் மனுதாரராக நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஆகியோரை சேர்த்து, நெட் ஃபிளிக்ஸ் நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டது. பின்பு வழக்கு தாக்கல் செய்ய நீதிமன்றம் அனுமதி கொடுத்ததோடு, எதிர் மனுதாரர்கள் பதிலளிக்க வேண்டுமென உத்தரவிட்டது. இதையடுத்து நடந்த விசாரணையில் எதிர் மனுதாரர்களின் பதிலுக்கு தனுஷ் தரப்பு பதிலளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. 

இதனிடையே தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் தொடர்ந்த வழக்கை ரத்து செய்யக்கோரி நெட் ஃபிலிக்ஸ் நிறுவனம் மனு தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது நெட் ஃபிலிக்ஸ், தரப்பில் காப்புரிமைச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடர முடியாது என்று வாதிடப்பட்டது. மேலும் தனுஷின் அலுவலகம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளதால் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியாது காஞ்சிபுரத்திலோ அல்லது நெட்ஃபிலிக்ஸ் நிறுவன அலுவலகம் அமைந்துள்ள மும்பையிலோதான் தொடர முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டது. பின்பு தனுஷ் தரப்பு, படத்தின் ஒப்பந்தம் கையெழுத்தானது சென்னையில் இருக்கும் அலுவலகத்தில்தான் என வாதிட்டது. பின்பு இரு தரப்பினரும் தங்களது வாதங்களை முன் வைத்தனர். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்து உத்தரவிட்டார்.    

சார்ந்த செய்திகள்