எஸ்.பி ஜனநாதன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, ஸ்ருதிஹாசன் நடித்து வரும் படம் லாபம். விஜய்சேதுபதி புரொடக்ஷன்ஸ் 7CS எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் இணைந்து பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கும் இப்படத்தில் நடிகை சாய் தன்ஷிகா முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இதுகுறித்து தன்ஷிகா பகிரும்போது....
![dhanshika](/modules/blazyloading/images/loader.png)
"ஜனநாதன் சாரின் படங்கள் வெறும் கமர்சியல் அம்சத்தோடு நின்று விடாமல் அதைத் தாண்டிய சமூக சிந்தனை அவரது படத்தில் இருக்கும். லாபமும் அப்படியான படம் தான். விவசாயிகளின் வாழ்நிலையை பேசுவதோடு, வெள்ளையர்கள் காலத்தில் இருந்து நம் விவசாய மக்களின் உழைப்பு எப்படியெல்லாம் சுரண்டப்படுகிறது என்பதை அழுத்தமாகப் பேசுகிறது. அன்று விவசாயிகளுக்கு எதிராகப் போடப்பட்ட விதை இன்று வரையிலும் எப்படி வளர்ந்துள்ளது என்பதை மிக அற்புதமாக படம் பேசும். இப்படத்தில் நான் நடிக்க வேண்டும் என்று ஜனநாதன் சார் சொல்லவும், கதையே சொல்ல வேண்டாம் சார் என்றேன். ஏனென்றால் அவர் மீது எனக்கு அத்தகைய நம்பிக்கை. சினிமாவிற்கான அரிச்சுவடியைக் கற்றுக்கொண்டதே அவரிடம் இருந்து தான். பேராண்மை படத்தில் எப்படி ஒரு மாணவி போல அவரிடம் கற்றுக்கொண்டேனோ அதேபோல் இந்த லாபம் படத்திலும் கற்று வருகிறேன்.
பேராண்மைப் படத்தில் நான் நடித்ததிற்கும், இப்படத்தில் நடிப்பதற்கும் இடையில் எனக்குள்ள கான்பிடண்ட் லெவல் கூடி இருப்பதை உணர முடிகிறது. இப்போதெல்லாம் என்னுடைய சினிமா பார்வையை ஸ்பாட்டில் சொல்லும் தைரியம் எனக்குள் வந்திருக்கிறது. அதற்கான காரணம் ஜனநாதன் சார் தரும் உற்சாகம். அவர் நம்மிடையே நிறைய விஷயங்களை ஷேர் பண்ணுவார். அதேபோல் நாம் சொல்லும் விஷயங்களை கவனமாக கேட்பார். சரியாக இருந்தால் அதை கன்சிடர் பண்ணுவார். அவர் இயக்கிய எல்லா படங்களும் எனக்கு விருப்பமான படங்கள். குறிப்பாக ஈ, இயற்கை இரண்டும் மிகவும் பிடிக்கும். இப்படத்தில் விஜய்சேதுபதியை மக்களுக்கு ரொம்ப பிடிக்கும். அவர் ஒவ்வொரு படங்களிலும் தனது வெவ்வேறு பரிணாமங்களை சிறப்பாக வெளிப்படுத்தி வருகிறார். அதை மக்களும் ரசிக்கிறார்கள்.
லாபம் படத்தில் தயாரிப்பாளராகவும் சிறப்பாக நடந்து கொள்கிறார். எனக்கு எது சரின்னு படுகிறதோ அதைச் செய்து வருகிறேன் என்று வெளிப்படையாகச் சொல்லும் நேர்மையாளர் அவர். இப்படத்தில் என் கேரக்டர் மிக முக்கியமானதாக இருக்கும் என்பதை என்னால் யூகிக்க முடிகிறது. காரணம் கதாபாத்திரத்திற்கான முக்கியத்துவத்தை விட கதைக்கான முக்கியத்துவம் கொடுப்பவர் ஜனநாதன் சார். அப்படி கதைக்கு முக்கியத்துவம் உள்ள அவரது படத்தில் நாம் இருந்தால் நிச்சயம் நம் கதாபாத்திரம் முக்கியமானதாகத் தான் இருக்கும். மேலும் இப்போது பெண்கள் முதன்மை பாத்திரம் ஏற்று நடிக்கும் படங்கள் அதிகமாக வருகிறது. மக்களும் அதைக் கொண்டாடி வருகிறார்கள். அது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. லாபம் படத்தை தியேட்டரில் வந்து பார்க்கும் போது உங்கள் மனதில் தோன்றும் வார்த்தை இதுவாகத்தான் இருக்கும். இப்படம் சமூகத்திற்கான 'லாபம்'' என்றார்.