பிரபல இந்தி நடிகை தீபிகா படுகோனே சில வருடங்களுக்கு முன்பு மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டதாகவும், பின்பு தற்கொலை செய்யும் எண்ணத்திலிருந்து விடுபட்டதாகவும் கூறியிருந்தார். பின்னர் மன அழுத்தத்தால் மனநல பாதிப்பால் எவரும் தற்கொலையில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில் 'லைவ் லவ் லாப்' (Live Love Laugh) என்ற அமைப்பை கடந்த 2015ஆம் ஆண்டு தொடங்கினார்.
பெங்களூர் மற்றும் ஒடிசா நகரங்களில் செயல்பட்டு வந்த இந்த அமைப்பு தற்போது தமிழ்நாட்டிலும் தொடங்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் ஈக்காட்டில் உள்ள வசந்தம் மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு சங்கத்துடன் தனது அமைப்பான 'லைவ் லவ் லாப்' அமைப்பையும் இணைத்துள்ளார். இதற்காக திருவள்ளூர், ஈக்காட்டிற்கு நேரில் சென்று அங்கு மனநலம் பாதித்தவர்களை பராமரிக்கும் அமைப்புகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். பின்பு அவர்களின் தேவைகளுக்காக தனது சார்பில் உதவிகள் செய்வதாக உறுதியளித்துள்ளார்.
இது தொடர்பாக ஒரு ஆங்கில ஊடகத்திற்கு தீபிகா படுகோனே அளித்துள்ள பேட்டியில், "இது மிகவும் முக்கியமானது. எனது தனிப்பட்ட வாழக்கையில் கூட, பராமரிப்பாளரின் பங்கு மிகவும் முக்கியமாக இருந்தது. அதனால் தான் என் அம்மா இந்த அமைப்பில் இருக்கிறார். மேலும் என் சகோதரி பல ஆண்டுகளாக இதில் மிகவும் ஆர்வமாக பணியாற்றி வருகிறார். எனவே, பராமரிப்பாளர்களின் கதைகளைக் கேட்கும்போது, அதுவும் எவ்வளவு முக்கியம் என்பதை நான் புரிந்துகொள்கிறேன், மேலும் மனநோயை அனுபவிக்கும் நபரின் உணர்ச்சி நல்வாழ்வைப் போலவே பராமரிப்பாளரின் உணர்ச்சி நல்வாழ்வும் முக்கியம்" என பேசியுள்ளார்.