சென்னை மாம்பலத்தை சேர்ந்த பாடகர் குரு குகன், பல்வேறு இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாடி வருகிறார். இந்த நிலையில் இவர் மீது பரங்கிமலை பகுதியைச் சேர்ந்த பெண் மென் பொறியாளர் ஒருவர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், தன்னை திருமணம் செய்து கொள்வதாக சொல்லி ஏமாற்றி விட்டதாக குறிப்பிட்டு அவர் மீது நடவடிக்கை எடுக்க சொல்லி கேட்டுக் கொண்டுள்ளார்.
பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அந்த பெண், “குரு குகன் சமூக வலைதளங்களில் பிரபலமானவர். கடந்த மே மாதம் இசை நிகழ்ச்சி ஒன்றில் என்னிடம் வந்து பிடித்திருப்பதாக சொல்லி திருமணமும் செய்து கொள்வதாக சொன்னார். நானும் என் வீட்டில் வந்து பெற்றோரிடம் பேசுங்கள் என்று சொன்னேன். பின்பு அவர் என்ன சமூகத்தை சேர்ந்தவர் என்று சொன்னார். நானும் என்னுடைய சமூகத்தை சொல்லி, அது எங்களுக்கு பிரச்சனை இல்லை என்றேன். அவரும் சாதி பிரச்சனை எனக்கு இல்லை என சொன்னார். அதோடு வீட்டில் ஒத்துக்கொள்ளவில்லை என்றாலும் உனக்காக நான் வெளியே வந்து கல்யாணம் செய்து கொள்கிறேன் என்றார்.
அதன் பிறகு நாம் கல்யாணம் தான பண்ணிக்கப் போறோம் என சொல்லி என்னுடன் நெருங்கி பழகினார். நான் கர்ப்பமானேன். அதே சமயம் ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கலாம் என் முடிவெடுத்து அதற்கு முயன்ற போது, உன்னை கல்யாணம் செய்து கொள்ள முடியாது என சொன்னார். அதோடு கட்டாய கரு கலைப்பு செய்தார். பின்பு எதுக்கு கரு கலைப்பு என கேட்ட போது, கரு கலைப்பு செய்தால்தான் நான் உன்னை கல்யாணம் செய்து கொள்வேன் என சொன்னார். அவருடைய பெற்றோரிடம் பேசிய போது, சாதியை பற்றி பேசி, உங்க சாதி ஆட்களிடம் தண்ணி கூட நாங்க குடிக்கமாட்டோம் என்றார். குகனிடம் அவர்கள் கல்யாணம் செய்து கொள்ள சம்மதமா என கேட்ட போது அவர் சரி என்றுதான் சொன்னார்.
அதற்கு முன்பாக குகனுடைய போனை வாங்கி வைத்துவிட்டு அவரது பெற்றோர் பிளாக் மெயில் செய்திருக்கிறார்கள். அதுக்குப் பிறகு அவரையும் அவரது குடும்பத்தாரையும் எங்களால் நெருங்கவே முடியவில்லை. வீடு பூட்டியிருக்கிறது. போனும் எடுக்க மாட்டுகிறார்கள். இதற்கிடையில் எங்க அப்பாவிடம் கூட போனில் ரெஜிஸ்டர் மேரேஜுக்கு செர்டிஃபிக்கேட் எடுத்து வருவதாக குகன் பேசினார். அதன் பிறகு அவர் என்ன ஆனார் என்பதே தெரியவில்லை” என கண்ணீருடன் பேசினார். இவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் குரு குகன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.