![Change in the release date of the Arulnithi movie](http://image.nakkheeran.in/cdn/farfuture/fkN2MyffK8o6hlim76EBSOy0qW6Z6YqoBUsRMmhxXvI/1654864685/sites/default/files/inline-images/61_37.jpg)
தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிப்பதில் அருள்நிதியும் ஒருவர். 'களத்தில் சந்திப்போம்' படத்தைத் தொடர்ந்து 'டைரி', 'டி ப்ளாக்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதனிடையே அறிமுக இயக்குநர் அரவிந்த் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் உருவாகும் 'தேஜாவு' படத்தில் நடித்து முடித்துள்ளார். மதுபாலா, ஸ்ம்ருதி வெங்கட், மைம் கோபி, காளி வெங்கட் உள்ளிட்ட பலரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 'வைட் கார்பெட் ஃபிலிம்ஸ்' மற்றும் 'பிஜி மீடியா ஒர்க்ஸ்' இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் 'தேஜாவு' படத்தின் ரிலீஸ் தேதியைத் தற்போதுப் படக்குழு வெளியிட்டுள்ளது. ஏற்கனவே ஜூன் மாதம் இப்படம் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்திருந்தது. ஆனால் தற்போது ரீலீஸ் தேதியில் மாற்றம் செய்யப்பட்டு வருகிற ஜூலை மாதம் 21-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அதோடு ஒரு புதிய போஸ்டர் ஒன்றையும் படக்குழு வெளியிட்டு படத்தின் ட்ரைலர் விரைவில் வெளியாகும் எனவும் தெரிவித்துள்ளது.