Skip to main content

கேன்ஸ் 2024; வரலாற்று சாதனை படைத்த இந்தியா - வாழ்த்திய பிரதமர் மோடி, ராகுல் காந்தி

Published on 27/05/2024 | Edited on 27/05/2024
cannes 2024 india make a history

உலகப் புகழ் பெற்ற 'கேன்ஸ் திரைப்பட விழா' பிரான்ஸ் நாட்டில் உள்ள கான் நகரில் 1946 முதல் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்தாண்டுக்கான கேன்ஸ் விழா கடந்த மே 14 முதல் மே 25 ஆம் தேவி வரை மொத்தம் 11 நாள் நடைபெற்றது. இதில்  வழக்கம் போல் பல்வேறு பிரிவுகளில் படங்கள் திரையிட்டு விருதுகளும் வழங்கப்பட்டன. 

அந்த வகையில் 7 இந்தியப் படங்கள் திரையிடப்பட்டது. இதில் மலையாளப் படமான ‘ஆல் வீ இமேஜின் அஸ் லைட்’ (All We Imagine as Light) மே 24 ஆம் தேதி திரையிடப்பட்டது. தொடர்ந்து 5 நிமிடங்களுக்கு மேல் இப்படத்திற்கு ரசிகர்கள் எழுந்து நின்று கைதட்டினர். அதோடு தங்கப்பனை விருதுக்கு இப்படம் போட்டியிட்ட நிலையில் இந்தியா சார்பில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு தங்கப்பனை விருதுக்குப் போட்டியிட்ட முதல் திரைப்படம் என்ற பெயரை பெற்றது. ஆனால் விருது வாங்கவில்லை. இருப்பினும் அந்த விருதுக்கு அடுத்த உயரிய விருதாக பார்க்கப்படும்  ‘கிராண்ட் பிரிக்ஸ்’ விருது இந்த படத்துக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டது. இந்த விருதை வென்ற முதல் இந்திய திரைப்பட இயக்குநர் என்ற பெருமையை இப்படத்தின் இயக்குநர் பாயல் கபாடியா பெற்று வரலாற்று சாதனை படைத்தார். 

cannes 2024 india make a history

இதனிடையே கொல்கத்தாவைச் சேர்ந்த அனசுயா சென்குப்தா, நடித்த 'தி ஷேம்லெஸ்' படமும் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. அந்த 7 திரைப்படங்களில் இதுவும் இன்று. இப்படத்திற்காக அனசுயா சென்குப்தா ‘அன் செர்டெய்ன் ரிகார்ட்’ பிரிவின் கீழ் சிறந்த நடிகைக்கான விருதை வென்றார். இதன் மூலம் இந்தப் பிரிவில் விருது பெற்ற முதல் இந்திய நடிகை என்ற பெருமையை அனசுயா சென்குப்தா பெற்று சாதனை படைத்தார். 

cannes 2024 india make a history

அடுத்ததாக 1976ல் வெளியான இந்தியாவின் முதல் கிரவுட் ஃப்ண்ட் திரைப்படமான ‘மந்தன்’ திரைப்படம் புதுப்பொலிவுடன் (Restored version) கேன்ஸ் கிளாசிக்ஸ் என்ற பிரிவின் கீழ் திரையிடப்பட்டது. ஐந்து நிமிட ரசிகர்களின் கைதட்டல் இப்படத்திற்கு கிடைத்தது. அடுத்ததாக மேலும் ஒளிப்பதிவாளர்களைக் கௌரவிக்கும் விதமாகக் கொடுக்கப்படும் பியர் ஆசிங்யு (Pierre Angénieux) விருது, இந்தாண்டு சந்தோஷ் சிவனுக்கு வழங்கப்பட்டது. திரைத்துறையில் அவரது பங்களிப்பை பாராட்டி அந்த விருது வழங்கப்பட்டது. இதற்கிடையே இந்த விழாவில் புனேவைச் சேர்ந்த பிலிம் அண்ட் டெலிவிஷன் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா மாணவர்கள் தயாரித்த 'சன்பிளவர்ஸ்' என்ற குறும்படம் லா சினிஃப் என்ற பிரிவில் விருது வென்றது. 

cannes 2024 india make a history

அடுத்ததாக தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் செயலாளர் ஸ்ரீ சஞ்சய் ஜாஜு, இந்திய கலாச்சாரம், உணவு வகைகள், கைவினைப்பொருட்கள் மற்றும் சினிமாவின் கொண்டாட்டமான பாரத் பர்வாவை முதன்முதலில் தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்வை இந்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் FICCI உடன் இணைந்து NFDC ஏற்பாடு செய்தது. இதன் மூலம் 77வது கேன்ஸ் திரைப்பட விழாவில் பலரது கவனம் பெற்று முக்கிய பங்கு வகித்தது இந்தியா சினிமா. இதனால் பலரும் தங்களது பாராட்டுக்களை விருது வென்ற படக்குழுவினருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். 

அந்த வகையில் பிரதமர் மோடி, தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில், “77வது கான் சர்வதேச திரைப்பட விழாவில் பாயல் கபாடியாவின் ‘ஆல் வீ இமேஜின் அஸ் லைட்' படைப்பு கிராண்ட் பிரிக்ஸ் விருது வென்ற வரலாற்று சாதனைக்காக இந்தியா பெருமை கொள்கிறது. இந்திய திரைப்படக் கல்லூரியின் முன்னாள் மாணவரின் திறமை உலக அரங்கில் பிரகாசிக்கிறது. இந்திய படைப்பாற்றலின் பார்வையை உலகுக்கு பறைசாற்றுகிறது. இந்த மதிப்புமிக்க பாராட்டு அவரது திறமைகளை கவுரவிப்பதோடு மட்டுமல்லாமல், புதிய தலைமுறை இந்திய திரைப்பட தயாரிப்பாளர்களுக்கும் ஊக்கம் அளிக்கும்” என குறிப்பிட்டுள்ளார். 

மேலும் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, “77வது கான் சர்வதேச திரைப்பட விழாவில் பிரகாசிக்கும் இந்திய நட்சத்திரங்கள். மதிப்புமிக்க கிராண்ட் பிரிக்ஸ் விருதை வென்றதற்காக பாயல் கபாடியா மற்றும் 'ஆல் வி இமேஜின் அஸ் லைட்' படத்தின் ஒட்டுமொத்த குழுவுக்கும் எனது வாழ்த்துக்கள்” என அவரது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

சார்ந்த செய்திகள்