Skip to main content

"மனசு கனமாகவும் சுமையாகவும் இருக்குது" - வீடியோ வெளியிட்ட பாரதிராஜா

Published on 03/05/2023 | Edited on 03/05/2023

 

bharathiraja and ilaiyaraaja about manobala

 

பிரபல திரைப் பிரபலம் மனோபாலா(69) உடல் நலக்குறைவால் காலமானார். கல்லீரல் தொடர்பான பிரச்சனையால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று மறைந்துள்ளார். தமிழ் சினிமாவில் இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முகத்திறைமை கொண்ட நபராகத் திகழ்ந்தவர். கடைசியாக இவர் நடிப்பில் காஜல் அகர்வால் நடிப்பில் உருவான 'கோஸ்டி' படம் வெளியானது. அதன் பிறகு விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் 'லியோ' படத்தில் நடித்து வந்தார்.  

 

இந்தச் சூழலில் இவரது மறைவு திரையுலகத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மனோபாலாவின் உடல் நாளை (04.05.2023) காலை 10.30 மணிக்கு வட பழனியில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது. திரைப் பிரபலங்கள், ரசிகர்கள் மற்றும் பலர் மனோபாலா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இளையராஜா வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், "என்னிடம் மிகுந்த மரியாதை, மதிப்பு வைத்திருந்த நண்பர் நடிகர் டைரக்டர் மனோபாலா காலமான செய்தி கேட்டு மிகவும் துயருற்றேன். மனோபாலா ஆரம்பத்தில் பத்திரிக்கையாளராகவும், பின்னர்  பாரதிராஜாவிடம் உதவியாளராகவும் பணிபுரிந்தார். 

 

அதற்குப் பிறகு தானே சொந்தமாக படங்களை இயக்க ஆரம்பித்தார். எல்லா காலங்களிலும் என்னை சந்தித்து வந்தவர். நான் வீட்டிலிருந்து கிளம்பி  கோடம்பாக்கம் பாலத்தை தாண்டுகிற நேரத்தில், என்னுடைய கார் வரும் நேரத்தை அறிந்து என்னை பார்க்க காத்திருந்த எத்தனையோ இயக்குநர்களில் மனோபாலாவும் ஒருவர். பின் நாட்களில் நடிகரானாலும், படங்களை இயக்கினாலும் என்னிடம் வந்து அப்போது நடக்கும் விஷயங்களை சொல்லுவார். சினிமா உலகத்தில் அதிகமாக என்னுடைய ரெக்கார்டிங் நேரத்தில் நடந்த விஷயங்களை அனைத்தையும் சொல்லி என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்துவார்" என்றார். 

 

பாரதிராஜா வெளியிட்ட வீடியோவில், "என் பாசத்திற்கும் நேசத்திற்கும் உரிய என் உதவியாளராக இருந்து இயக்குநராக மாறிய மனோபாலாவின் மரணம் தாங்க முடியவில்லை. என்னிடம் எத்தனையோ உதவியாளர்கள் இருந்திருக்கிறார்கள். ஆனால் மனோபாலா சிறந்தவர். அவர் இயக்கிய படங்கள் எல்லாம் அன்னை போன்று மென்மையாக இருக்கும். வன்முறைகள் இருக்காது. அவர் இவ்வளவு குறுகிய காலத்தில் போவார் என்று நினச்சு கூட பார்க்கவில்லை. மனசு கனமாகவும் சுமையாகவும் இருக்குது" என்றார். 

 

மேலும் மனோபாலா குறித்து பல்வேறு நிகழ்வுகளை பகிர்ந்த பாரதிராஜா, தற்போது வெளியூரில் இருப்பதாகவும் நாளை காலை அவசரமாக விமானம் மூலம் சென்னை வரவுள்ளதாகவும் தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்