தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் சென்னை ஃபார்முலா 4 ரேசிங் சர்க்யூட் போட்டி மற்றும் இந்தியன் ரேஸிங் லீக் கார் பந்தயம் நாளை (31.08.2024) மதியம் 12.30 மணிக்கு தொடங்கி அடுத்தநாள் நாள் (01.09.2024) இரவு 10 மணி வரை நடைபெறவுள்ளது. 3.5 கீலோமீட்டர் சர்க்யூட்டில் நடக்கவுள்ள இந்த ரேசிங் நிகழ்வு தீவு திடல், போர் நினைவு சின்னம், நேப்பியர் பாலம், சுவாமி சிவானந்தா சாலை மற்றும் மவுண்ட் ரோடு ஆகிய இடங்களை சுற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தெற்காசியாவிலேயே இரவு ஃபார்முலா 4 ஸ்ட்ரீட் ரேசிங் நடத்தும் முதல் நகரமாக சென்னை திகழவுள்ளது. இப்பந்தயத்தை பார்க்க பார்வையாளர்களுக்கு 5 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக இந்த ரேசிங் நடத்த தடை விதிக்கக்கோரி தமிழக பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்த நிலையில் அதை நேற்று தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.
இதையடுத்து இன்று காலை ஃபார்முலா 4 கார் ரேசிங்-க்காக சிறப்பு பாடல் வெளியிடப்பட்டுள்ளது. அந்த பாடலை அருண்ராஜகாமராஜ் எழுதியிருக்க யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இதனிடையே ஃபார்முலா 4 ரேசிங் போட்டி தொடர்பாக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் எக்ஸ் வலைதளப் பக்கம் வாயிலாக வாழ்த்து தெரிவித்திருந்தார். இதையடுத்து கார்த்தி, கமல்ஹாசன் ஏ.ஆர்.ரஹ்மான், சிவகார்த்திகேயன் ஆகியோர் அவர்களது எக்ஸ் பக்கம் வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதன்படி கார்த்தியின் பதிவில், “எப்4 ஸ்ட்ரீட் பந்தயம் தரும் த்ரில்லான அனுபவத்தை நம் சென்னை பெறவுள்ளது. இந்த விளையாட்டுக்கு தைரியம், திறமை, இளமை தேவை. இது நமது துடிப்பான மெட்ராஸூக்கு சரியான பொருத்தம். உதயநிதி ஸ்டாலினுக்கு பாராட்டுகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து கமல்ஹாசனின் பதிவில், “ஃபார்முலா 4 கார் ரேசிங் மூலம் தமிழ்நாட்டை இந்தியாவின் விளையாட்டுத் தலைநகராகவும், கிழக்கின் டிட்ராயிட் நகரமாக மாற்றியதற்காக வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து ஏ.ஆர்.ரஹ்மான் பதிவில், “சிறப்புக்குரிய ஃபார்முலா 4 கார் ரேசிங்கை சென்னையில் கொண்டு வந்து இந்தியர்களுக்கு உற்சாகத்தை சேர்த்ததற்காக உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்துகள்” என்று கூறியுள்ளார். அதன் பின் சிவகார்த்திகேயன் பதிவில், “ஃபார்முலா 4 கார் ரேசிங்கை சென்னைக்கு கொண்டு வந்ததற்கும் இந்த முன்னெடுப்பு வெற்றி பெறுவதற்கும் வாழ்த்துகள்” என்ற கூறியுள்ளார்.