சர்வதேச அளவில் பாடல்கள் மற்றும் பின்னணி இசைக்காக ஹாலிவுட் மியூசிக் இன் மீடியா அவார்ட்ஸ்(Hollywood Music in Media Awards) விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இசை விருதுகளில் உயரிய விருதாக பார்க்கப்படும் இந்த விருது திரைப்படங்கள், விளம்பரங்கள், ஆவணப்படங்கள், சுயாதீன ஆல்பங்கள் என எந்த திரை வடிவில் இருந்தாலும் அவைகளை அங்கீகரிக்கும் விதமாக 2009முதல் ஆண்டுதோறும் கொடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2024ஆண்டிற்கான நாமினேஷன் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில் சிறந்த வெளிநாட்டு படத்துக்கான பின்னணி இசை மற்றும் சிறந்த பாடல் பிரிவில் ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்த ஆடுஜீவிதம் மற்றும் படத்தில் இடம்பெற்ற ‘பெரியோனே ரஹ்மானே’ பாடல் இடம் பெற்றிருந்தது.
இந்த நிலையில் விருது வழங்கும் நிகழ்ச்சி லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள அவலோன் திரையரங்கில் நடைபெற்று முடிந்துள்ளது. இதில் சிறந்த வெளிநாட்டு படத்துக்கான பின்னணி இசை பிரிவில் ஆடுஜீவிதம் படத்திற்காக ஏ.ஆர் ரஹ்மானுக்கு விருது அறிவிக்கப்பட்டது. ஏ.ஆர் ரஹ்மான் சார்பில் ஆடுஜீவிதம் பட இயக்குநர் பிளெஸ்ஸி விருதை பெற்றுக் கொண்டார். இந்து விருது கிடைத்தது தொடர்பாக வீடியோ வெளியிட்டுள்ள ஏ.ஆர் ரஹ்மான், படக்குழுவினருக்கும் படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இறுதியில் அவர் ஆஸ்கர் மேடையில் சொன்ன, அவரது விருப்ப வாசகமான, “எல்லாம் புகழும் இறைவனுக்கே” என்று சொல்லி வீடியோவை முடித்துள்ளார்.
மலையாள இயக்குநர் பிளெஸ்ஸி, இயக்கத்தில் பிருத்விராஜ், அமலாபால் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த மார்ச் மாதம் வெளியான படம் ஆடுஜீவிதம். இப்படம் மலையாள இலக்கியத்தில் மிகவும் பிரபலமான மற்றும் விற்பனையில் சாதனை படைத்த ‘ஆடு ஜீவிதம்’ நாவலை தழுவி எடுக்கப்பட்டது. இந்த நாவல் கேரளத்திலிருந்து குடும்ப வறுமையை தீர்ப்பதற்காக அரேபிய தேசத்திற்கு செல்லும் நஜீப் என்ற நபர், அங்கு ஒருவரால் கடத்தப்பட்டு பாலைவனத்தில் ஆடு மேய்க்கும் தொழிலுக்கு தள்ளப்பட்டு, பின்பு, அவர் எப்படி தப்பித்து கேரளா திரும்பினார் என்பதை விரிவாக எடுத்துரைக்கிறது. இப்படம் 54-ஆவது கேரள திரைப்பட விருதில் 9 விருதுகளை வென்று சாதனை படைத்தது. இதையடுத்து தற்போது உலகளவில் விருதை பெற்றுள்ளது.