![aparna das joined in vijay 68](http://image.nakkheeran.in/cdn/farfuture/OrLzlR0Y5brPONtv5QW_87qSMn3tuqfy7obuAyoMXH4/1692965586/sites/default/files/inline-images/165_34.jpg)
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'லியோ'. இப்படத்தில் கதாநாயகியாக திரிஷா நடிக்க பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலி கான், பிரியா ஆனந்த், இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் மேனன் என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனர். இப்படம் வருகிற அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
படத்தின் முதல் பாடல், 'நா ரெடி...', மற்றும் சஞ்சய் தத், அர்ஜுன் உள்ளிட்டோரின் கதாபாத்திர முன்னோட்ட வீடியோக்கள் அவரவர்களது பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது. இசை வெளியீட்டு விழா செப்டம்பரில் நடக்கவுள்ளதாக முன்பு லோகேஷ் கனகராஜ் தெரிவித்த நிலையில், விரைவில் அதன் அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்தை முடித்துவிட்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏ.ஜி.எஸ் தயாரிப்பில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் விஜய் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு 'சிஎஸ்கே' என தலைப்பு வைக்கப்பட்டதாகவும், கதாநாயகியாக ஜோதிகாவிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் முன்பு தகவல் வெளியானது. அண்மையில் படப்பிடிப்பு செப்டம்பரில் நடக்கவுள்ளதாகவும் படப்பிடிப்பு அக்டோபரில் ஆரம்பிக்கவுள்ளதாகவும் பரவலாகப் பேசப்பட்டது.
இதையடுத்து அண்மையில் விஜய் இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளதாகவும் அதில் ஒரு விஜய்க்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில் நடிகை அபர்ணா தாஸ் இப்படத்தில் இணைந்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. அவர் ஜெய்க்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. நடிகை அபர்ணா தாஸ், விஜய்யின் பீஸ்ட் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பின்பு கவினின் 'டாடா' படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானார்.
இதனிடையே பிரபு தேவாவும் மாதவனும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக ஒரு தகவல் உலா வந்து கொண்டிருக்கிறது. இப்படி தொடர்ந்து தகவல்கள் வந்து கொண்டிருப்பதால் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ள நிலையில் லியோ பட வெளியீட்டிற்கு பிறகு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.