முதல் பெண் துப்பறிவாளர் மாலதி, தான் துப்பறிந்த வழக்குகளில் உள்ள சுவாரசியமான விஷயங்களை நம்மோடு பகிர்ந்து கொண்டு வருகிறார். அந்த வகையில், ஒரு சம்பவத்தைப் பற்றியும், அதில் நடந்தவற்றையும் விவரிக்கிறார்.
ஒரு பெண் எனக்கு கால் செய்து தன்னுடைய தங்கச்சியைக் கண்காணிக்கச் சொன்னார். உங்களுடைய கணவருக்கும் தங்கச்சிக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகப்படுகிறீர்களா? என்று கேட்டதற்கு, அதெல்லாம் இல்லை இது என்னுடைய மகளைப் பற்றியது என்றார். சரி என்ன நடந்தது என்று கேட்டபோது, இந்த பெண் கணவருடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தன்னுடைய அம்மா வீட்டில் குழந்தையுடன் வாழ்ந்து வந்துள்ளார். அதனால் அந்த பெண்ணின் குழந்தை சித்தியுடன் சிறு வயதிலிருந்து வளர்ந்திருக்கிறார்.
கண்காணிக்கச் சொன்ன பெண் வேலையின் நிமித்தம் குழந்தையை சரிவர கவனிக்க முடியாமல் தங்கையிடமே குழந்தையை அதிக நேரம் விட்டுவிட்டுச் சென்றுள்ளார். இதனால் குழந்தையும் சித்தி பாசத்தில் வளர்ந்துள்ளது. சித்தியின் அறையில் தூங்குவது, சித்தியுடனே இருப்பது என அம்மாவை மறக்கும் அளவிற்கு சித்தி உடனான பந்தம் அந்த குழந்தைக்கு அதிகரித்துள்ளது. சித்திக்கு 38 வயதில் திருமணம் ஆன பின்பு அந்த பெண் குழந்தை கல்லூரி படிக்கும் அளவிற்கு பெரியவளாகி விடுகிறார். அந்த வயதிலும் தம் அம்மா பேச்சு கேட்காமல் சித்தியிடமே அந்த பெண் அதிக நேரம் செலவழித்திருக்கிறார்.
அதற்கேற்ப சித்தியும் தனது அக்காவிடம் மகளை வீட்டுக்கு அனுப்பி வை என்னுடனே இருக்கட்டும், நேரம் கிடைக்கும்போது மகளை வெளியில் அழைத்துச் செல்வோம் நீ உன்னுடைய வேலையைக் கவனி என அக்காவிடம் சொல்லிவிட்டு மகளை தன்னுடன் வைத்துப் பார்த்து வந்திருக்கிறார். அதே போல் மகளும் சித்திக்கு எதாவது தேவைப்படுகிறது என்றால் மட்டுமே அம்மாவிடம் பேசுவார். அந்தளவிற்கு சித்தி மீது மகள் பாசமாக இருந்துள்ளார். இப்படி இருக்கும்போது ஒரு முறை சித்தப்பாவுக்கு மசாஜ் செய்யச் சொல்லி சித்தி அக்கா மகளிடம் சொல்ல அதை வீட்டிலிருந்த பாட்டி கவனித்து தனது மூத்த மகளிடம் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தால் ஏற்பட்ட கோபம் ஒருபுறம் இருக்க ஏன் மகள் தன்னிடம் வராமல் சித்தியிடமே இருக்கிறார்? என்ற சந்தேகம் அம்மாவுக்கு எழுந்துள்ளது. அதனால்தான் மகளின் அம்மா என்னிடம் வந்து நடந்ததைக் கூறினார்.
அதன் பின்பு என்னுடைய குழுவை வைத்து மகளையும் சித்தியையும் தொடர்ந்து கண்காணித்து வந்தோம். அதில், சில அதிர்ச்சியான விஷயங்கள் தெரிய வந்தது. பின்பு கண்காணிக்கச் சொன்ன அந்த அம்மாவை அழைத்து உங்களுடைய மகளும், தங்கச்சியும் லெஸ்பியன் உறவு வைத்திருக்கின்றனர். அதோடு மட்டுமில்லாமல் உங்கள் தங்கச்சி கணவரும் இதில் சம்பந்தப்பட்டுள்ளார். மூன்று பேரும் சேர்ந்துதான் சில தவறுகளைச் செய்கின்றனர் என்று சொன்னேன். இந்த விஷயம் தெரிந்த பின்னர் அந்த அம்மாவால் இதை ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை. பின்பு நான் அந்த அம்மாவிடம் இதற்கு மேல் உங்கள் மகளைத் தங்கச்சியிடம் விடுவது சரியில்லை நீங்களே வளர்க்கத் தேவையான முயற்சி செய்யுங்கள் என ஆலோசனை கொடுத்து அனுப்பி வைத்தேன் என்றார்.