பிரபல பாலிவுட் நடிகை டாப்ஸி மற்றும் இயக்குநர் அனுராக் காஷ்யப் இருவருக்கும் சொந்தமான இடங்கள் என 20-க்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த புதன்கிழமையன்று (03 மார்ச்) வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். சோதனையின் முடிவில் 300 கோடிக்கும் மேல் வரி ஏய்ப்பு நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டாப்ஸி மற்றும் அனுராக் காஷ்யப் இருவருமே அரசுக்கு எதிராக தொடர்ந்து கருத்துத் தெரிவித்து வருவதால், இச்சோதனையானது உள்நோக்கம் கொண்டது எனப் பலரும் கூறி வருகின்றனர். இதை மறுத்துப் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "கடந்த ஆட்சியிலும் இவர்கள் வீட்டில் வருமான வரி சோதனை நடைபெற்றது. அது, தவறாகத் தெரியாதபோது இது மட்டும் ஏன் தவறாகப்படுகிறது" எனக் கேள்வி எழுப்பினார். இந்த நிலையில், நடிகை டாப்ஸி தன்னுடைய வீட்டில் நடந்த வருமான வரி சோதனை குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "என் வீட்டில் நடந்த சோதனையில் மூன்று விஷயங்கள் தீவிரமாகத் தேடப்பட்டன. அவை, பாரிஸில் எனக்கு இருப்பதாகக் கூறப்படும் பங்களாவின் சாவி, எதிர்காலத்தில் என்னைக் குற்றம்சாட்ட அவர்களுக்குத் தேவைப்படும் 5 கோடி ரூபாய்க்கான போலி ரசீது, 2013-ஆம் ஆண்டு என் வீட்டில் நடந்த (நிதியமைச்சர் கூறியபடி) வருமான வரி சோதனையின் நினைவுகள்" எனக் குறிப்பிட்டுள்ளார். நடிகை டாப்ஸியின் கிண்டலான இப்பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.