தனுஸ்ரீ தத்தா, இந்தியில் பல படங்களில் நடித்து பிரபலமானவர். இவர் தமிழில் விஷாலின் 'தீராத விளையாட்டு பிள்ளை' படத்தில் ஜோதி என்ற கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானார். பின்பு 2010-ஆம் ஆண்டிற்கு பிறகு நடிப்பில் கவனம் செலுத்தாமல் இருந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து வரும் தனுஸ்ரீ தத்தா சில நாட்களுக்கு முன்பு தனது சமூக வலைதளப் பக்கத்தில் தான் மிகவும் துன்புறுத்தப்பட்டு மோசமாகக் குறிவைக்கப்படுவதாகப் பரபரப்பைக் கிளப்பினார்.
இந்நிலையில் தனுஸ்ரீ தத்தா தற்போது மீண்டும் ஒரு பதிவை பகிர்ந்து பரப்பை உண்டாக்கியுள்ளார். இது தொடர்பாக தனுஸ்ரீ தத்தா வெளியிட்டுள்ள பதிவில், "எனக்கு ஏதேனும் நேர்ந்தால், (metoo) மீடூ விவகாரத்தில் நான் குற்றம் சாட்டப்பட்ட நானா படேகர், அவரது வழக்கறிஞர்கள் மற்றும் பாலிவுட் மாஃபியா நண்பர்கள் இவர்கள் அனைவரும் தான் காரணம். பாலிவுட் மாஃபியா என்றால் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரண வழக்கில் அனைவரின் பெயர்களும் அடிக்கடி வந்த அதே நபர்கள் தான். அவர்களின் திரைப்படங்களைப் பார்க்காதீர்கள், அவற்றை முற்றிலுமாகப் புறக்கணித்துவிடுங்கள். கொடூரமாகப் பழிவாங்கும் எண்ணத்துடன் பின்தொடராதீர்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், "என்னைப் பற்றி போலிச் செய்திகளைப் பரப்பிய அனைத்து தொழில்துறை நபர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டமும் நீதியும் என்னைத் தவறவிட்டிருக்கலாம் ஆனால் இந்த மாபெரும் தேசத்தின் மக்கள் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது" எனக் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே கடந்த 2018-ஆம் ஆண்டு தனுஸ்ரீ தத்தா ஒரு பேட்டியில், தான் 2009-ஆம் ஆண்டு நடந்த படப்பிடிப்பின் போது பாலிவுட் நடிகர் நானா படேகரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன் எனப் குற்றம் சாட்டியிருந்தார். பின்பு போதிய ஆதாரங்கள் இல்லாததால் அந்த வழக்கு முடித்துவைக்கப்பட்டது. நானா படேகர், தமிழில் ரஜினி நடிப்பில் வெளியான 'காலா' படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.