![actress meera mithun case; The court adjourned the hearing again](http://image.nakkheeran.in/cdn/farfuture/_U78xGbGUFUf3cKqu2llkQDEmw9HqBhcD9xkSk49LCE/1666189716/sites/default/files/inline-images/297_6.jpg)
மாடல் அழகியும், நடிகையுமான மீரா மிதுன் சில மாதங்களுக்கு முன்பு பட்டியலினத்தவர் குறித்து அவதூறாகப் பேசி வீடியோ வெளியிட்டார். அது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மீரா மிதுன் மீது காவல்துறையில் புகார் அளித்திருந்தனர். இந்த வழக்கு தொடர்பாக மீரா மிதுனும் அவரது நண்பர் சாம் அபிஷேக்கும் கைது செய்யப்பட்டு பின்பு நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.
பின்பு இந்த வழக்கு கடந்த 6ஆம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது மீரா மிதுன் ஆஜராகாததால் அவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்பு அடுத்த கட்ட விசாரணையில், நீதிமன்ற உத்தரவின்படி மீரா மிதுனை வேளச்சேரி மற்றும் சேத்துப்பட்டில் தேடியும் கிடைக்கவில்லை. விரைவில் மீரா மிதுனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைக்கப்பட்டது.
பின்பு இந்த வழக்கு கடந்த மாதம் 28ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகை மீரா மிதுன் தலைமறைவாகி அடிக்கடி தங்குமிடத்தை மாற்றி வருவதால் அவரை கைது செய்ய முடியவில்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் மீரா மிதுன் தலைமறைவான நிலையில் அவரது செல்போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டதாகவும் காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. 2 மாதங்களுக்கு மேலாக பிடிவாரண்ட் நிலுவையில் உள்ள நிலையில் கைது செய்யாததால் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்திருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் இன்று (19.10.2022) சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகை மீராமிதுன் தொடர்ந்து தலைமறைவாக உள்ளார் எனவும் அவரது குடும்பத்தினரை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை அடுத்த மாதம் 16ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.