சின்னதிரையில் தொகுப்பாளராக ஆரம்பித்து பெரிய திரையில் நடிகராக வலம் வருகிற, சமீபத்தில் டி3 படத்தின் மூலம் கவனம் ஈர்த்த நடிகர் ப்ரஜினுடன் ஒரு ஜாலியான பேட்டி...
கடந்த 20 வருடங்களாக என்னுடைய உழைப்பு தொடர்ந்துகொண்டே இருக்கிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு நான் நடித்துள்ள தமிழ் படம் டி3. அதற்கு மக்களின் அங்கீகாரம் கிடைத்தது மகிழ்ச்சியான விஷயம். சாதாரண குடும்பத்தில் இருந்து வந்த எனக்கு எந்த சினிமா பின்புலமும் கிடையாது. ஒரு டிவி ஆங்கராக என்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி அதன் பிறகு சினிமாவில் நடிக்க ஆரம்பித்தேன். கொஞ்சம் கொஞ்சமாக நானே என்னைச் செதுக்கினேன்.
இயக்குநர் மோகன்.ஜியும் நானும் நீண்ட கால நண்பர்கள். அவருடைய பழைய வண்ணாரப்பேட்டை படத்தில் நான் நடித்தேன். அந்தப் படம் இப்போது வெளிவந்திருந்தால் பெரிதாக பேசப்பட்டிருக்கும். திரௌபதி படத்தில் ஹீரோவாக நடிக்க முதலில் அவர் என்னைத்தான் அணுகினார். அந்தக் கதையில் எனக்கு சில கேள்விகள் இருந்தது. அப்போது என்னால் அதில் நடிக்க முடியவில்லை. ஆனால், அவர் வெற்றிபெற்றுக் காட்டினார். படத்துக்கு பப்ளிசிட்டி செய்வது குறித்து மோகன் அதிகம் சிந்திப்பார்.
தொழில்நுட்ப வளர்ச்சியால் இன்று அனைவருக்கும் அனைத்து தகவல்களும் இன்டர்நெட் மூலம் கிடைக்கின்றன. எனவே சினிமா மூலம் தான் போதை குறித்து இளைஞர்களுக்கு அதிகம் தெரிகிறது என்பதில் உண்மையில்லை. திரைப்படங்கள் மூலம் முடிந்த வரை போதைக்கு எதிரான விழிப்புணர்வைத் தான் நாங்கள் ஏற்படுத்துகிறோம். நல்லவர்கள் நிச்சயம் சினிமா காட்சிகள் மூலம் கெட்டுப்போக மாட்டார்கள். சினிமாவில் என்னுடைய உழைப்பு சரியாகத்தான் இருக்கிறது. ஆனால் வெற்றி தாமதமாகிறது.
நான் எப்போதுமே பாசிட்டிவான சிந்தனை கொண்டவன். விஜய் சேதுபதி இன்று இந்த நிலையில் இருப்பதற்குக் காரணம் சின்னச் சின்ன ரோல்களில் நடித்து விடாமுயற்சியோடு சினிமா உலகில் அவர் நின்றது தான். மற்றவர்கள் வெற்றி பெறுவது குறித்து எப்போதும் எனக்கு மகிழ்ச்சி தான். சில நல்ல படங்களை ஆரம்பக்காலத்தில் நான் மிஸ் செய்திருக்கிறேன். திருமணத்துக்குப் பிறகு சினிமாவில் நான் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்தபோது என் மனைவியுடைய முழு ஒத்துழைப்பு எனக்கு இருந்தது.
நான் சினிமா வாய்ப்பு தேடிக்கொண்டிருந்தபோது குடும்பத்தை நிர்வகித்தது என்னுடைய மனைவிதான். சில ஆண்டுகளுக்கு முன் எனக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தனர். மகிழ்ச்சியான குடும்பம். என்னைப் பொறுத்தவரை சினிமா, சின்னதிரை என்று அனைத்து வாய்ப்புகளையும் ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் தான் இருக்கிறேன். பிரச்சனைகளைக் கண்டு துவளாமல் போராடிக்கொண்டே இருந்தால் வெற்றி நிச்சயம் என்பது என் நம்பிக்கை.