1983ஆம் ஆண்டு கபில் தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, உலகக் கோப்பை போட்டியை முதன்முறையாக வென்றது. இந்த நிகழ்வை மையப்படுத்தி பாலிவுட்டில் '83' என்ற தலைப்பில் பயோபிக் உருவாகி வருகிறது. இதில் கபில்தேவாக ரன்வீர் சிங், தமிழக வீரர் ஸ்ரீகாந்தாக தமிழ் நடிகர் ஜீவா நடிக்கின்றனர்.
கடந்த மே மாதமே இப்படம் திரையரங்கில் வெளியாகுவதாக இருந்தது. கரோனா அச்சுறுத்தல் காரணமாக படம் வெளியிடமுடியாமல் ஒத்திவைக்கப்பட்டது.
தற்போது திரையரங்குகளை திறக்க நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், '83' படம் திரையரங்கில் வெளியாகுமா அல்லது ஓடிடியில் வெளியாகுமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
'83' படத்தை ரிலையன்ஸ் உள்ளிட்ட நான்கு பெரிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. கிறிஸ்துமஸ் வார இறுதியில் இப்படம் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. ஆனால், திரையரங்கில் வெளியாகக் கடுமையான நிபந்தனைகளை தயாரிப்பாளர்கள் விதித்துள்ளனர்.
அதில், “ 'விர்ச்சுவல் ப்ரிண்ட் ஃபீஸ்' எனப்படும் திரையிடலுக்கான கட்டணத்தை திரையரங்குகள் கேட்கக் கூடாது.
மொத்த அளவில் 50 சதவீத டிக்கெட்டுகளை மட்டுமே விற்க வேண்டும் என்பதால் '83' திரைப்படத்துக்கு அதிகப்படியான திரைகளை ஒதுக்க வேண்டும்.
'83' திரைப்படம் திரையரங்கில் வெளியான 4 வாரங்களுக்குப் பிறகு ஓ.டி.டி வெளியீட்டுக்குத் திரையரங்குகள் சம்மதிக்க வேண்டும்.
முதல் இரண்டு வாரங்களில் படத்தைப் பார்க்க ரசிகர்கள் வரவில்லையென்றால், படத்தை உடனடியாக ஓடிடியில் வெளியிட ஆட்சேபனை இல்லை எனத் திரையரங்க உரிமையாளர்கள் ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டும்” என்று நிபந்தனைகளை விதித்துள்ளனர். மேலும், இது தொடர்பான பேச்சுவார்த்தையை திரையரங்கு உரிமையாளர்களிடம் இன்னும் தயாரிப்பாளர்கள் தொடங்கவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.