கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர் என்பவர் அரசியல் தலைவர்கள், தொழில் அதிபர்கள் உள்ளிட்ட பலரை ஏமாற்றி பண மோசடி செய்துள்ளார். அதில் ஒன்றாக, தொழிலதிபரை மிரட்டி 200 கோடி ரூபாய் மோசடி செய்துள்ள வழக்கில் கடந்த 2019 ஆம் ஆண்டு அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு தற்போது டெல்லி சிறையில் உள்ளார். மேலும் சுகேஷ் சந்திரசேகரின் மனைவி லீனா மரியா பால் உள்ளிட்ட 6 பேர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது.
இந்த வழக்கில் நடிகை ஜாக்குலின் ஃபெர்னான்டஸ் மற்றும் நோரா ஃபதேஹி ஆகியோருக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறி இருவர் மீதும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து பல முறை விசாரணை நடத்தியது. சிறையில் இருக்கும் சுகேஷ் சந்திரசேகர் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதாகத் தகவல் வெளியான நிலையில் டெல்லி திகார் ஜெயிலில் டிஜிபி-யாக பணிபுரிந்த சந்தீப் கோயல், சுகேஷ் சந்திரசேகருக்கு உதவியதாக புகார் எழுந்தது. இதையடுத்து அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில் சுகேஷ் சந்திரசேகரிடம் லஞ்சம் வாங்கி சொத்து சேர்த்த புகாரில் டெல்லி சிறைத்துறை அதிகாரிகள் 3 பேரை அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர். டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய 3 அதிகாரிகளையும் 6 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.