பிரபல பஞ்சாபிய பாடகரான அமர் சிங் சம்கிலா வாழ்க்கை வரலாற்றை பற்றி தமிழ்நாடு காவல்துறையின் முதல் பெண் இயக்குநர், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி விளக்குகிறார்.
அமர் சிங் சம்கிலா என்ற பஞ்சாபிய பாடகரின் வாழ்க்கையைப் பற்றி பார்க்க போகிறோம். இவர் பாடிய ‘துகுயே ஏ தகுவா’ வரிக்கு பஞ்சாபிய மொழியில் சிற்றுழியும் ஒரு மண் எடுப்பும் என்ற அர்த்தம் உண்டு. இவரது பாடலும், இவர் பாடிய விதமும் பஞ்சாபியர் அத்தனை பேரிடமும் சென்று யார் இவர் என்று திரும்பி பார்க்கும் வகையில் இருந்தது. அதன் பின், அடுத்த 10 ஆண்டுகளில் அமர் சிங்கின் யுகம் தான். பஞ்சாபியர்களின் வீரம் மிகச்சிறந்ததாக ஒருபுறம் சொல்லப்பட்டாலும் மறுபுறம் அவர்களது கலைகள் மிகச் சிறந்தவைகளாக பேசப்படும். பஞ்சாப்பில் பல வகையான பாடல்கள் உண்டு. குறிப்பாக, நாட்டார் பாடல்களில் அமர் சிங் கரை கண்டவர்.
லூதியானா பக்கத்தில் இருக்ககூடிய துங்குரி என்ற சிறிய கிராமத்தில் மிகவும் வறுமையான குடும்பத்தில் கடைசி குழந்தையாக பிறக்கிறார் அமர் சிங் சம்கிலா. இவரது அம்மா கத்தா கெள மற்றும் அப்பா ஹரிஷி, இவருக்கு துனி ராம் என்று பெயர் வைக்கிறார்கள். பெரிய அளவில் படிப்பு வராததால் வீட்டில் உள்ள எருமை மாடுகளை மேய்த்து வருகிறார் அமர் சிங். இவர், சமார் என்ற சொல்லக்கூடிய பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர். இவர், ஒரு சீக்கியராக இருந்த சமார் இனத்தைச் சேர்ந்த ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்துள்ளார். அமர் சிங்குக்கு சிறு வயதிலேயே குருமயில்ச்சி கவுர் என்ற பெண்ணுடன் திருமணம் நடக்கிறது. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகளும் இருக்கின்றனர். அமர் சிங்குக்கு இயல்பாகவே இசையின் மீது பெரிய அளவில் நாட்டம் இருந்திருக்கிறது. அதனால், பிரபல மேடை பாடகரான சுரிந்தர் ஷர்தாவிடம் 15 வயதிலேயே அமர் சிங் பாடல் எழுத வாய்ப்பு கேட்கிறார். அதன்படி, இவர் எழுதிக்கொடுத்த அந்த பாடலை அந்த பாடகர் மேடையில் பாடியபோது மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கிறது. அதன்பின், அந்த பாடகருக்கு தொடர்ந்து பாடல் எழுதி கொடுக்கிறார். மேலும், தனக்கு பாட்டு பாடவும் தெரியும் என்று சுரிந்தர் ஷர்தாவிடம் சொல்லி, அவரது சில நிகழ்ச்சிகளில் அமர் சிங் பாடவும் செய்கிறார். ஆனால், அதற்கு சுரிந்தர் இவருக்கு கொடுக்கக்கூடிய சன்மானம் மிகவும் குறைவாக தான் இருக்கிறது. எலெக்ட்ரீசியனாக வேலை பார்க்க வேண்டும் என்று கனவோடு இருந்த அமர் சிங் அதற்கும் முயற்சி செய்கிறார். அது கிடைக்காததால், அந்த கனவை விடுகிறார்.
குடும்ப வறுமையை குறைக்க லூதியானா பகுதிக்கு சென்று துணிக்கடை ஒன்றில் வேலைக்கு சேர்கிறார். வேலை செய்து மிச்சம் இருக்கக்கூடிய நேரத்தில் ஆர்மோனியம், தும்ரி, டோல்கி என்ற இசைக்கருவி போன்ற கருவிகள் மூலம் இசையை கற்றுக்கொண்டு மேடையில் தொடர்ந்து பாட ஆரம்பிக்கிறார். இப்போது, சுரிந்தர் ஷர்தாவிடம் அமர் சிங்குக்கு கூடுதல் வருமானம் கிடைக்கிறது. மேடையில், தான் பாடும் போது மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைப்பதால் தன்னுடைய 18 வயதில் தனியாக கச்சேரிகளை ஆரம்பித்து பாட ஆரம்பிக்கிறார். மனைவி, மகள்கள் என இருப்பதால் வருமானத்தை அதிகரிக்க தன்னுடன் கூட சேர்ந்து பாட ஒரு பெண் பாடகரை தேட ஆரம்பிக்கிறார். அதன்படி, அமோன் ஜித் கவுர் என்ற பாடகியை கண்டுபிடிக்கிறார். அமோன் ஜித் கவுருக்கு ஏற்கெனவே சிறுவயதிலேயே திருமணம் ஆகிவிடுகிறது. மனைவி மேடை ஏறி பாடுவதை பிடிக்காத கணவரை விட்டு அமோன் ஜித் கவுர் இசையை தேர்ந்தெடுத்து அவரை விவகாரத்து பெற்று தனியாக வந்து முழு நேர பாடகியாக மாறிவிடுகிறார். இந்த சமயத்தில் தான் அமர் சிங் சம்கிலாவும், அமோன் ஜித் கவுரும் ஒன்றாக சேர்ந்து மேடை ஏறி பாட ஆரம்பிக்கிறார்கள். அமோன் ஜித்தை இரண்டாவதாக திருமணம் செய்கிறார் அமர் சிங் சம்கிலா. இந்த ஜோடி மக்கள் மனதில் மிக விரைவில் கவர்கிறது. ஏனென்றால், அமர் சிங் பாடும் அத்தனை பாடல்களும் பெண்களை இழிவுப்படுத்தி பாடுவது. குறிப்பாக பெண்கள் மோகப்பொருள் தான், பெண்கள் ஒரு மனிதனுடைய காமத்திற்கு வடிகாலாக இருப்பவர்கள் தான், ஆணாதிக்க சிந்தனை, சிறார் பாலியலை ஆதரிப்பது, இரட்டை அர்த்தம், அப்படியான பார்வை தான் அந்த பாடல்களில் இருக்கும். அப்படி பாடியது தான் ஏழை, எளிய மக்களிடம் அதிகப்படியான வரவேற்பு கிடைத்திருக்கிறது. இன்றைய தேதி வரை இவர் பாடிய பாடல்களை போல் வேறு எந்த பாடலும் அங்கு விற்பனை ஆகவில்லை என்று சொல்லப்படுகிறது.
ஆனால், அதே நேரத்தில் கட்டுப்பாடான குடும்பத்தில் உள்ளவர்கள் இந்த பாடலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். இருப்பினும், ஒரு வருடத்திற்கு 365 நாட்கள் இருக்கிறது என்றால் அமர் சிங்குக்கு 366 நிகழ்ச்சிகள் இருக்கும். அப்படிப்பட்ட வரவேற்பு இவருக்கு அங்கு கிடைத்திருக்கிறது. பாடிய பின், மக்களிடம் பேசுவது, நகைச்சுவை துணுக்களை சொல்வது என அந்த மேடையை கட்டி ஆள்வார். அதனால், அங்கு உள்ள பிரபல பாடகர், நகைச்சுவையாளர் சன்முக் சிங் என்பவர் அமர் சிங்குக்கு, ‘சம்கிலா’ என்று பட்டம் கொடுக்கிறார். சம்காலா என்றால் மேடையை ஒளிரச்செய்பவன் என்று அர்த்தம். பஞ்சாப் மட்டுமல்லாமல, கனடா, அமெரிக்கா, லண்டன், பஹ்ரைன் என பல இடங்களில் இவருக்கு வரவேற்பு கிடைக்கிறது. இப்படி புகழ்பெற்று கொண்டிருக்கும் போது 1988ஆம் ஆண்டு மார்ச் 8 ஆம் தேதி அமர் சிங் சம்கிலாவும், அமன் திக் கவுரும் ஒரு நிகழ்ச்சிகாக மதிய நேரத்தில் அந்த இடத்தில் வருகிறார். காரை விட்டு கீழே இறங்கிய இருவர் மீதும் மூன்று ஸ்கூட்டர் வந்த அடையாளம் தெரியாத ஆட்கள், தாங்கள் கொண்டு வந்திருந்த ஏ கே 47 துப்பாக்கிகளை வைத்து அவர்களை சுட்டுத் தள்ளுகின்றனர். இந்த துப்பாக்கிச்சூட்டில், அமர் சிங், அவருடன் வந்த இரண்டு பேர், அமன் திக்கும் இறந்துவிடுகின்றனர். அதன் பிறகு, இறந்து போன அமன் ஜித்தை பரிசோதித்து பார்க்கையில் அவரது கருவில் ஒரு குழந்தை இருந்ததாக தெரியவந்தது. மக்கள் முன்னிலையில் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்த வழக்கில் இன்றுவரை குற்றவாளிகளை கண்டுபிடிக்கப்படாத வழக்காக இருக்கிறது.
அமர் சிங்குக்கும், அமோன் ஜித் கவுருக்கும் இடையே ஏற்கெனவே பிறந்த ஆண் குழந்தையான ஜெய்மன் ஜம்கிலாவை தனது அம்மா வீட்டில் விட்டுவிடுகிறார் அமோன் ஜித் கவுர். சமூக அடுக்கில் உயர் சாதி என்று சொல்லக்கூடிய ஜார்க் இனத்தில் பிறந்த அமோன் ஜித், பட்டியலின வகுப்பில் இருக்கும் அமர் சிங்குடன் வாழ்கிறார் என்ற கோபம் அமோன் ஜித்தின் பெற்றோருக்கு இருந்ததாகச் சொல்லப்படுகிறது. இதனால் சாதி அதிகார அமைப்பைச் சார்ந்தவர்கள் யாராவது, இவர்கள் இருவரையும் கொலை செய்திருக்கக் கூடும் என்று ஒரு பக்கம் சொல்லப்படுகிறது. அமோன் ஜித்தின் முதல் கணவருக்கு இந்த கொலையில் சம்பந்தம் இருக்கலாம் என்று மறுபக்கம் சொல்லப்படுகிறது. இன்னொரு பக்கம் தொழில்முறை போட்டியால் கூட இந்த கொலை நடந்திருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.