Skip to main content

“இப்போ வெளிச்சமாதானே இருக்கு, இருட்டு பத்தி ஏன் யோசிக்குற?”-இந்தப் படத்தின் கதை #1

Published on 19/09/2019 | Edited on 19/08/2021

 

கரைந்துகொண்டிருக்கும் ஒளிக்கீற்றை ரசித்தபடி அறையின் ஜன்னலோரத்தில் உறைந்திருந்தது எனது மாலை நேரம். நாள்முழுவதும் வீட்டில் நிலைகொண்டிருந்த நிசப்தம் மெல்ல கலைந்து சிறுவர்களின் உற்சாக கூச்சல் கவனத்தை ஈர்க்க தொடங்கியது. வயலை உழுது, வரப்புக்கட்டி அங்கொன்றும் இங்கொன்றுமாய் முளைக்க வைத்திருக்கும் சிமெண்ட் செடிகளில் ஒன்றுதான் எங்கள் வீடு. ஊருக்கு வெளியே புதிதாக உருவாகும் நகர் என்பதால், பெரும்பாலும் வீட்டின் முன்பக்கம் 200மீ தொலைவிலுள்ள, தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் விரைந்துகொண்டிருக்கும் தனியார் பேருந்துகளையும், பின்பக்கம் சமதொலைவிலுள்ள கீழத்தெரு சிறுவர்களையும் அன்றி எங்கள் அமைதியை கலைக்கிற புறக்காரணி வேரேதுமில்லை. அவ்வப்போது தொல்லையாக தெரிந்தாலும், நீங்கள் தனித்து வசிக்கவில்லை என தைரியம் சொல்வதும் இவைதான். 

 

Story behind this photo!


 

“கீழத்தெரு வாய்க்கால தண்ணி வந்துருச்சு போல, முன்னாடியெல்லாம் வருஷத்துல ரெண்டு மூணு மாசம்தான் தண்ணி இல்லாம இருக்கும். இப்பொ ரெண்டு வருஷம் கழிச்சு அதிசயமா இந்த கம்மாய்க்கு தண்ணி வந்துருக்கு” என துவங்கி அம்மா அவளின் சிறுவயது கதைகளை பேசிக்கொண்டிருந்தாள். என் சிந்தனை எப்போதோ வாய்க்கால் கரைக்கு சென்றுவிட்டது. “நல்லாதா இருக்கும், ஃபோட்டோ எடுக்கலாம். ஆனா, இப்பவே 5 மணி ஆகிட்டு, நான் கேமரா எடுத்துக்கிட்டு போறதுக்குள்ள இருட்ட ஆரம்பிச்சுடும், ஃபோட்டோஸ் ஏதும் நல்லா வராது...” உட்கார்ந்த இடத்திலிருந்தே நான் சொதப்பிய ஃபோட்டோக்களை கற்பனையில் பார்த்துக்கொண்டிருந்தேன். அண்ணன் குறுக்கிட்டான் “இந்நேரம் நீ கேமரா எடுத்துக்கிட்டு கெளம்பியிருப்பியே! ஏன் உட்காந்துருக்க?” “இல்லண்ணா...இருட்டிட்டா  சரியா ஃபோட்டோ எடுக்க முடியாது.” “இப்போ வெளிச்சமாதானே இருக்கு, இருட்ட பத்தி ஏன் யோசிக்குற?”  அடுத்த 5 நிமிடத்தில் நான் வாய்க்கால் கரையில் இருந்தேன். என்னைப் பார்த்தவுடன் குளித்துக்கொண்டிருந்த சிறுவர்கள் “அக்கா வந்துட்டாங்க”என கூச்சல் போட்டு மிக எளிமையாய் அவர்களின் உற்சாகத்தை எனக்குள் கடத்திவிட்டனர். அங்கிருந்த பெரும்பாலான சிறுவர்களுக்கு என்னைத் தெரியும். இதற்கு முன் பலமுறை நான் கீழத்தெருவிற்கு சென்று அவர்கள் விளையாடுவதை  என் கேமரா வழியே ரசித்திருக்கிறேன்.  முன்பே பழகிய தோழியென்ற உரிமையோடு என்மீது தண்ணீரை வாரியடித்தனர். எங்கள் குளியலறையில் வருகின்ற குளோரின் கலந்த நீர் அல்ல அது. அந்த நீரில் பூரிப்பு கலந்திருந்தது, பிரம்மகிரியில் துவங்கி பல தடைகளைத் தாண்டி, சுமார் 800 கி.மீ கடந்து... இது நிலத்தில் மட்டுமே, மேகமாய் எத்தனையோ! மழைத்துளியாய் எத்தனையோ! சுருங்க சொன்னால் வாழ்நாள் சாதனைக்கான விருதுபெற்றவை அந்த நீர் துளிகள். 
 

என் கண்களை விட கேமரா லென்ஸ் அழகையும் அர்த்தங்களையும் அதிகப்படுத்திக் காட்டுவதுண்டு. சிறுவர்கள் நீச்சலடிக்கும் அந்த காட்சியை எனது கேமரா “வெகுநாட்களாய் தரையில் தாகத்தில் தவித்திருந்த மீன்கள், நீரில் விழுந்து உயிர் பெறுகின்றன” என்பதாய் காட்டியது. நானும் நிழற்படவெளியில் நீந்த துவங்கினேன். வாய்க்கால் முழுவதும் சிறுவர்கள் நிரம்பியிருக்க, கரையில் ஒரு சிறுமி சுற்றும் முற்றும் பார்த்தவாறு தயங்கி நின்றாள். அங்கு அவளை தவிர வேறு பெண்கள் இல்லை. ஒருவேளை இந்த சிறுவர்களெல்லாம் குளித்துவிட்டு வீட்டிற்கு செல்லும்போது “உடம்புக்கு எதாவது சீக்கு வந்தா யாரு பாக்குறது” எனவும், 12 வயது மதிக்கத்தக்க அந்த சிறுமி வீட்டிற்கு செல்லும்போது “ஆம்பள பயலுககூட உனக்கென்ன கும்மாளம் வேண்டிகெடக்கு” எனவும் கண்டிக்கப்பட வாய்ப்பிருக்கும் சமூகத்தில் அவள் தயங்குவதில் ஆச்சரியமில்லை. ஆனால், அது இயல்பானதல்ல. இயல்பு என்னவென்றால், ஓடும் நீருக்கும் உடல்நலக் குறைவிற்கும் ஆண்பெண் வேறுபாடு தெரியாதென்பதும், வாய்க்காலில் கும்மாளம்போட நீச்சல் தெரிந்தால் போதும் என்பதுமே. நான் அங்கேயே இருப்பதை பார்த்த அவள் தயக்கத்திலிருந்து சற்று விடுபட்டாள். யாரும் கவனிக்காத நேரத்தில் நீருக்குள் துள்ளிக் குதித்து நீந்த துவங்கினாள்.  
 

நான்  கேமராவை வெளியில் எடுத்ததுமுதல் அந்த சிறுவர்களுக்கு ஃபோட்டோவிற்கு போஸ் கொடுப்பதிலேயே கவனமிருந்தது. கேமராவைப் பார்த்து கத்தியபடி குதிப்பதும், ஒருவர் மேல் ஒருவர் ஏறி நிர்ப்பதும், ஒருவரையொருவர் தூக்கிப்போடுவதுமாய் சாகசங்கள் நடந்துகொண்டிருந்தது. இப்போது அவர்களின் உற்சாகத்திற்கு காரணம் வாய்க்காலில் தண்ணீர் வந்ததாக இல்லாமல் நான் ஃபோட்டோ  எடுக்கிறேன் என்பதாயிருந்தது. ஆனால், என் கேமரா லென்ஸ் பெரும்பாலும் அந்த சிறுமியையே நோட்டம் விட்டது. அவள் இப்போது நீர்வாழ் உயிரியைப்போல் மாறிக்கொண்டிருந்தாள். ஊரிலிருந்து ஒதுக்குப்புறமாக உள்ள கீழத்தெருவின் நடுவில் நீலப் படுதாவால் மூடப்பட்டிருக்கும் அவள் வீட்டையும், அதன் அடுப்படியில் அமர்ந்து அரிசியில் கல்பொறுக்கும் அம்மா, அடுப்புக்கு சுள்ளிகள் வேண்டுமென காத்திருப்பாள் என்பதையும் மறந்து நீருக்கடியிலுள்ள  அதிசய உலகை தேடிக்கொண்டிருந்தாள். என் கேமராவும் அவளையே பின்தொடர நான் திகைத்து நின்றேன். அங்குள்ள எல்லோரையும்விட அவளுக்கு நன்றாக நீந்த தெரிந்திருந்தது. மெதுவான அசைவுடன் அங்கும் இங்கும் சுழன்றும், மல்லாந்து படுத்தவாறு படகுபோல் நீந்தியும், குப்புற படுத்து அசைவின்றி மிதந்தும், டால்ஃபின்கள் போல் துள்ளிக் குதித்தும், நீருக்குள் பின்புறமாக பல்டியடித்தும் அசத்தினாள். ஆனால், இவை எதையும் யாரும் பார்க்கவேண்டுமென அவள் செய்யவில்லை, யாரேனும் பார்க்கிறார்களா என்ற கவலையும் இருந்ததாக தெரியவில்லை. மடியில் தவழ்ந்து, தோளில் ஏறி, முதுகில் சறுக்கி, காலைப் பிடித்து கீழே தள்ளி, நெஞ்சில் அமர்ந்து, கட்டியனைத்து, முத்தமிட்டு தன் தந்தையின் ஸ்பரிசங்களை வாய்க்கால் தண்ணீரில் அனுபவித்தாள் . 
 

திருவல்லிக்கேணியிலுள்ள மரூஃப் சாகிப் தெருவின் ஒரு முச்சந்தியில் நான் எடுத்த முதல் புகைப்படம் நினைவிற்கு வந்தது. அதற்கு முன்தினம்தான் அண்ணன் எனக்கு கேமரா வாங்கிக்கொடுத்திருந்தான். அன்றிரவு உணவுக்குப்பின் என் அண்ணன் “நீ எந்த மாதிரி ஃபோட்டோஸ் எடுக்க போற? என கேட்டான். “எனக்கு ஸ்ட்ரீட் லைஃப் ஃபோட்டோஸ் எடுக்கதான் ஆசை. ஆனா, பசங்களா இருந்தா வெளிய சுத்தலாம், ரோடுல எப்டிவேணாலும் நின்னு ஃபோட்டோ எடுக்கலாம். எனக்கு அதெல்லாம் முடியுமான்னு தெரியல. சொ, வீட்டுக்குள்ளயே ஃபேஷன் ஃபோட்டோகிராஃபி, செல்ஃப் போட்ரைட் அப்டிலாம் ட்ரை பண்ணபோறேன்” என நான் பேசும்போதே என் தயக்கத்தை அவன் புரிந்துகொண்டான். மறுநாள் காலையில் வாலாஜா சாலைக்கு அழைத்துச்சென்று “போ, உனக்கு எப்டி தோணுதோ அப்டி ஃபோட்டோ எடு. மத்தவங்க உன்ன எப்டி பாக்குறாங்கன்னு கவலபடாத. நல்லா சுத்திட்டு வா. நான் இங்கயே வெயிட் பண்ற” என்றான். நான் புரிந்தும் புரியாதவளாய் எல்லீஸ் ரோட்டின் வழியே நடக்க ஆரம்பித்தேன். ஆரம்பத்தில் பிறர் கண்களின் வழியே நான் என்னைப் பார்க்கவே தோன்றியது. அதில் நான் பெண்ணாக, அழகானப் பெண்ணாக, சின்னப் பெண்ணாக இருக்கிற பிம்பங்கள் மட்டுமே தெரிந்தன. கேமராவை உயர்த்தி அதன் லென்ஸ்வழியே  உலகைப் பார்க்கும்போது நான் என்னை ஃபோட்டோகிராஃபராக உணர்ந்தேன். அவ்வாறு கேமரா வழியே பார்த்த உலகில் கால் கடுக்க சுற்றித்திரிந்தேன், கண்டதையெல்லாம் படம் பிடித்தேன். பல தெருக்கள் சுற்றி மீண்டும் அண்ணனிடம் வந்து சேரும்போது இந்த தெருக்கள் இன்னும் நீளாதா என தோன்றிய நினைவுகளை அசைபோட்டவாறு வாய்க்கால் கரையில் ஒரு கல் மீது அமர்ந்தேன். 
 

ஒவ்வொருவராக கரையேற துவங்கினர். எதிர்கரையில் ஒரு பாட்டி கன்றுகுட்டியின் கயிற்றை காலில் மிதித்துக்கொண்டு, மாட்டை வைக்கோலால் அழுத்தி தேய்த்தபடி ஏதோ புலம்பிக்கொண்டிருந்தாள். இடுப்பளவு சேற்றுடன் வந்த சிறுவன், மண்வெட்டியை கழுவி தோளில் மாட்டிக்கொண்டு கரையேறினான். அவனைக்கண்டதும் கன்றுக்குட்டி முண்டியடித்துக்கொண்டு அவன் அருகில் சென்றது, சட்டென அதன் கழுத்து கயிற்றை பிடித்துக்கொண்டு எதுவும் பேசாமல் நடந்தான், பாட்டியும் மாட்டை இழுத்துக்கொண்டு பின்னாலேயே நடந்தாள். அப்படியே சூரிய அஸ்தமனம் துவங்கியது. அவ்வப்போது இவற்றையெல்லாம் எட்டிப்பார்த்த என் கேமரா மீண்டும் அந்த சிறுமியிடம் திரும்பியது. பெரும்பாலும் அங்கு குளித்துக்கொண்டிருந்த அனைவருமே சென்றுவிட்டனர். கரையோரத்தில் மெதுவாக நீந்தியபடி அவள் நீரின் ஓட்டத்தை ரசித்துக்கொண்டிருந்தாள். குளித்தது போதும் என ஓரடி மேலேறி மீண்டும் வாய்க்காலில் குதித்தாள். நீரைவிட்டு வெளியேறி மீண்டும் நிலவாழ் உயிரியாவதில் அவளுக்கு தயக்கம் வந்திருந்தது. கரையைப் பிடித்துக்கொண்டு தனக்குள் ஏதோ பேசிக்கொண்டாள். “யெடியே ரோசா...சிறுக்கி, யெங்கடி இருக்க...” தெருவிலிருந்து அவள் அம்மா பெரம்புடன் வந்துகொண்டிருந்தாள். இதற்குமேல் என்ன தயக்கம்? ஒரே தாவில் கரையேறி ஈர உடம்புடன் சுள்ளிக் கட்டை தோளில் தூக்கிக்கொண்டு எதிர் திசையில் ஓடினாள். இருட்ட துவங்கியது, நான் வீட்டுக்கு வந்து மீண்டும் வெளிச்சம் வரும் என காத்திருக்கிறேன். 

 

அடுத்தப் பகுதி : "நீ இனிமே பக்கத்துல வராத. உன்னாலதான் என் மேலயும் நாறுது - இந்தப் படத்தின் கதை #2

 

Photographer: Alar 
E-mail : alarmelvalliarunagiri@gmail.com