Skip to main content

பணமோசடி வழக்கில் பவர்ஸ்டார் சீனிவாசன் சிக்கியது எப்படி? - ஏசி ராஜாராம் பகிரும் தடயம்: 12

Published on 01/11/2023 | Edited on 01/11/2023

 

rtrd-ac-rajaram-thadayam-12

 

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உதவி ஆணையராக இருந்த போது நடந்த வழக்கு. தன்னையே சூப்பர் ஸ்டார் போல் பாவித்துக் கொண்டு அப்படியே நடந்து கொண்ட பவர் ஸ்டார் சீனிவாசன் வழக்கு இது.

 

பவர் ஸ்டார் சீனிவாசனை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் நடத்திய விழாவுக்கு அழைத்திருந்தனர். அந்த சமயத்தில் சீனிவாசன் தயாரித்த படமும், நடித்த படமும் நன்றாக ஓடியதாக சொல்லப்பட்டது. இவர் நிகழ்ச்சிக்கு வருகிறார் என்றால் இவரோட கார் முன்னே 5 ஆட்டோவும், பின்னே 5 ஆட்டோவும், அதில் ஆட்களும் இருந்து கொண்டு தலைவர் வாழ்க என்று கத்திக் கொண்டே வருவார்கள். ஆங்காங்கே பவுன்சர்கள் நிற்பார்கள். நிகழ்ச்சி முடிந்து அனைத்து காவலர்களையும் பார்த்து நன்றி தெரிவித்து விட்டு போனார். நானும் இவ்ளோ நல்ல மனுசனா இருக்காரே என்று கூட நினைத்தேன்.

 

சில நாட்கள் கழித்து கமிஷனர் ஆபிசிலிருந்து சீனிவாசன் மீது ஒருவர் வழக்கு கொடுத்திருக்கிறார். விசாரியுங்கள் என்று சொன்னார்கள். இவரது வீடு விருகம்பாக்கத்தில் இருந்தது. அங்கே போனபோது காவல்துறை வருகிறது என்று தெரிந்து வீட்டில் இல்லாமல் எஸ்கேப் ஆகிவிட்டார். வீட்டில் மனைவியும் அவரது பெண் குழந்தையும் இருந்தார்கள். தொடர்ச்சியாக நான்கு நாட்களாக விசாரித்தால் வீட்டில் இல்லை, சூட்டிங் போயிருக்கிறார் என்றே சொல்லி வந்தார்கள். லயோலா கல்லூரி விழாவிற்கு வருவதாக தகவல் வந்து அங்கே நாம் காவல்துறை சீருடையில் போகாமல் ஆட்டோ டிரைவர்கள் போல மாறுவேடமிட்டு காத்திருந்தோம். அதே போல் வந்தவரை வளைத்து பிடித்தோம். 

 

யார் என்று பதறியவரிடம் காவல்துறை என்றதும் அமைதியாகி விட்டார். பிறகு தவறையும் உடனடியாக ஒப்புக்கொண்டார். அதாவது நூறுகோடி ரூபாய் கடன் வாங்கி தருவதாக அதற்கு கமிசனாக ஒரு கோடி ரூபாய் வாங்கி இருக்கிறார். கைது செய்து காவல்நிலையம் அழைத்து வந்தால் இவருக்காக 5 வழக்கறிஞர்கள் வந்து நிற்கிறார்கள். அத்தோடு பத்திரிக்கையாளர்களும் திரண்டு விட்டார்கள். ஒரு கோடியை கொடுத்து ஏமாந்தவர் மட்டுமல்லாமல், கோவாவிலிருந்து இருவர் வந்து நாங்களும் லட்சக்கணக்கில் பணம் கொடுத்திருக்கிறோம் என்று புகார் தருகிறார்கள்.

 

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விசாரிக்க வெளியே எடுத்தோம். மூன்று நாட்களாகியும் எதுவுமே சொல்லவில்லை. பணத்தை ஏற்பாடு செய்கிறோம் என்று தான் சொல்கிறாரே தவிர செய்யவில்லை. கீழ்ப்பாக்கம் பழைய காவல்நிலையத்தில் வைத்தே விசாரித்தோம். அங்கே கொசுக்கடி தாங்க முடியாத அளவிற்கு இருக்கும். சீனிவாசன் தரப்பு வழக்கறிஞர்கள் ஸ்டார் ஓட்டலில் ரூம் போட்டு விசாரியுங்கள் நாங்கள் பணம் செலுத்துகிறோம் என்றார்கள். ஆனால் தொடர்ச்சியாக கொசுக்கடி தாங்க முடியாமல் அவரது சார்பில் 90 லட்ச ரூபாய் கொண்டு வந்து தரப்பட்டது.

 

இந்த பண மோசடி சம்பந்தமாக ஒரு மாத காலம் சிறை தண்டனை அனுபவித்தார். மேலும் 15 நபர்கள் சீனிவாசனிடம் பணம் கொடுத்து ஏமாந்ததாக புகார் கொடுத்து அந்த வழக்கு இன்னும் விசாரிக்கப்பட்டு வருகிறது. பண மோசடி வழக்கில் சிக்கிய பிறகு அவரது புகழும், வயதும் மங்க ஆரம்பித்தது. அதற்கு பிறகு அவர் படங்கள் எதுவும் எடுத்ததாக தெரியவில்லை.