குழந்தை வளர்ப்பில் பெற்றோர்களுக்குத்தான் நிறைய விசயங்களை கற்றுக் கொடுக்க வேண்டியிருக்கிறது பெற்றோருக்கு தேவையான கவுன்சிலிங் குறித்தும், அடிக்கடி குழந்தைகளிடம் கோவத்தை காட்டக் கூடாது என்பது குறித்தும் குழந்தை வளர்ப்பு ஆலோசகர் ஆஷா பாக்யராஜ் விவரிக்கிறார்
குழந்தை பிறப்பு குறித்து இங்கு நிறைய எதிர்பார்ப்பு இருக்கிறது. ஆனால் குழந்தை பிறந்த பிறகு நேரமின்மையைக் காரணம் காட்டி குழந்தையை பெற்றோர் ஒழுங்காக கவனிப்பதில்லை. பெற்றோருக்கான கவுன்சிலிங் என்று ஒன்று இருக்கிறது. ஆனால் கவுன்சிலிங் என்றாலே மனநலம் சம்பந்தப்பட்ட பிரச்சனைக்கு மட்டும்தான் என்கிற தவறான எண்ணம் பலருக்கு இருக்கிறது. குழந்தை வளர்ப்பு குறித்து முழுமையாக அறிந்துகொள்ள குழந்தை வளர்ப்பு ஆலோசகரை அணுக வேண்டும்.
கோபத்தைக் கட்டுப்படுத்துவது என்பது குழந்தை வளர்ப்பில் மிகவும் முக்கியம். அதுகுறித்து நான் பல வீடியோக்களை வெளியிட்டிருக்கிறேன். அந்த வீடியோக்களைப் பார்த்துவிட்டு ஒருவர் என்னிடம் பேசினார். மனைவியை இழந்த அவர், தன்னுடைய மூன்று வயது குழந்தையிடம் அதிக கோபம் காட்டியதாகவும், இந்த வீடியோக்களைப் பார்த்த பிறகு குழந்தை வளர்ப்பு குறித்து புரிந்துகொண்டதாகவும் கூறினார். தங்களுக்கு கோபம் வந்தால் சம்பந்தமே இல்லாமல் அதைக் குழந்தைகளிடம் காட்டும் தன்மை பல பெற்றோரிடம் இருக்கிறது.
சிறு குழந்தைகளுக்குக் கூட இப்போது அதிக கோபம் வருகிறது. இதில் பெற்றோரின் தவறும் இருக்கிறது. குழந்தைகளுக்கு அதிக செல்லம் கொடுப்பதும் தவறு, தங்களுடைய கட்டுப்பாட்டில் அவர்கள் இருப்பதால் அதிகமாக அதிகாரம் செலுத்துவதும் தவறு. ஒவ்வொரு காலகட்டத்திலும் குழந்தைகளை ஒவ்வொரு வகையில் டீல் செய்ய வேண்டும். கண்டிக்க வேண்டிய நேரத்தில் கண்டிக்க வேண்டும், பாராட்ட வேண்டிய நேரத்தில் பாராட்ட வேண்டும். எல்லாமே அளவோடு இருக்க வேண்டும்.