Skip to main content

சாம்பவி சங்கர் எழுதும் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் தொடர்! ‘மாயப் புறா’ #11

Published on 07/03/2022 | Edited on 07/03/2022

 

maayapura part 11

 

மாயப் புறா - முந்தைய பகுதிகள்

 

சங்கவியைத் தன் பக்கம் கைகளால் வளைத்து, அவள் கழுத்தில் அசோக் தாலி கட்டியதும், மண்டபத்தில் உள்ளவர்கள் அதிர்ச்சியில் எழுந்து நின்றார்கள்.  ஒரு தாயின் பிரசவ வேதனையை எப்படி வார்த்தைகளால் சொல்ல முடியாதோ? அப்படி வார்த்தைகளால் சொல்ல முடியாத மனநிலை அசோக்கிற்கு இருந்தது. மகிழ்ச்சி-பெருமிதம்-வலி-என எல்லாம் கலந்த கலவை உணர்ச்சி அது.

 

அவனுக்குத் தான் செய்தது சரியான செயல் என்ற நம்பிக்கை இருந்தது.

 

மானைத் துரத்தித் துரத்தி வேட்டையாடும் புலிக்கும், பசி என்ற அதன் பக்கத்து நியாயம் ஒன்று இருக்கத்தான் செய்கிறது. இது மனப்பசிக்கான வேட்டை. உன்னத வேட்டை. உயிரின் வேட்டை. ஒவ்வொரு விலங்கினமும் தன் தேவைக்காக ஏதோ ஒன்றை அழிக்கத் தான் செய்கிறது. மனிதரும் அப்படித்தான். என்ன ஒரு வித்தியாசம் அங்கு உயிர்கள் அழிகின்றன. மனிதனிடம் உணர்வுகள் அழிகின்றன. ஒவ்வொரு செயலுக்கும் அவரவர் தரப்பு நியாயங்கள் இருக்கத்தான் செய்கின்றன. பிறர் உயிரை கொன்றவனைக்  கூட அவன் தரப்பு நியாயம் என்ன என்று விசாரிக்க நீதிமன்றங்கள் உள்ளன. ஆனால் அனைவருக்கும்  மிகச் சிறந்த நீதிபதியாக அவரவர் மனசாட்சியே ஆகிறது.  

 

இதுவரை மங்களகரமாகக் கொட்டிய கெட்டிமேளம் நின்றது. மேடைகளில் சலசலத்து நின்றிருந்த பெண்கள் அதிர்ந்து உறைந்து மெளனத்தில் உறைந்தனர். மந்திரம் ஓதிய புரோகிதரின் வாயிலிருந்து வந்த சொற்கள், விக்கித்து நின்றன.

 

இன்னும் அசோக், இறுக்கி வளைத்த பிடி விலகாமல் இருக்க, தன் கழுத்தில் தொங்கிய தாலியைப் பார்த்தபடி தனக்கு என்ன நடந்தது என்பதை உணர்ந்தும் உணர முடியாத மனநிலையில் செய்வதறியாது நின்றாள் சங்கவி.

"ஒரு பெண் வாழ்நாளில் என்றும் மறக்க முடியாத... நினைக்கும் போதெல்லாம் மனம் நெகிழ்த்தும் நொடிகள்....  எளிதில் வந்து சென்றன. அவள் நரம்புகள் எல்லாம் வீணையாகி ரத்தமெல்லாம் குற்றால நீர்வீழ்ச்சி ஆகிப் பொங்கிப் புதுவெள்ளம் ஆகும் நிகழ்வு. 

 

கழுத்தில் ஏறும் தாலிக்கொடியும் வயிற்றில் வளரும் தொப்புள் கொடியும்  உயரிய உணர்வுப் பின்னணி கொண்டவை ஆகும். அப்படிப்பட்ட நிகழ்வு கண்ணிமைக்கும் நேரத்தில் சங்கவிக்கு நடந்தது. உலகே தட்டாமாலை ஆடுவது போல உணர்ந்து உணர்வற்று நின்றாள்.

 

அண்டங்கள் இயங்க மறுத்து அமைதியானது  போன்ற அந்த ஒரு நொடியை... அசோக்கின் கன்னத்தில் "பளீரென்று" விழுந்த அந்த ஒரு அறை, கலைத்து அதிரவைத்தது. 

 

தங்கம்தான் கோபத்தில் உக்கிரமாகி இருந்தாள். தான் தாலாட்டிப் பாலூட்டிய செல்ல மகனிடம், தன் கரங்களின்  வலிமையை அவன்  கன்னத்தில் இறக்கினாள். அடுத்து தன் கோபத்தை எல்லாம் தன் கரங்களில் இறக்கிக்கொண்டு சங்கவியின் கன்னம் நோக்கி அவள் நீட்ட, அந்தக் கைகளை வழி மறித்தான் அசோக். ஓங்கிய அவள் கரங்கள் அசோக்கின் இறுகிய பிடியால், வான வில்லாக வளைந்து அந்தரத்தில் நின்றது.

"அம்மா... நான் செஞ்சது உங்க பார்வையில் தப்புதான். என்னை அடித்தே கொல்லுங்க . ஏத்துக்கறேன். பாவம் சங்கவிக்கு ஒன்னும் தெரியாதும் மா" என்று வார்த்தைகளால் கெஞ்சினான். 

"உன்னை எல்லாம் சும்மா விடக்கூடாது. நம்பிக்கைத் துரோகி" என்று அசோக்கின் சட்டையைப் பிடித்து இழுத்து கன்னத்திலும் முதுகிலும் மாறி மாறி அடித்தார் மாமனாராக இருந்த கண்ணுசாமி. 

"மாமா நான் சொல்றதைக் கேளுங்க "என்று கைகளால் தடுத்துக்கொண்டே விளக்கம் கூற முயன்றான் அசோக். அதைக் காதில் வாங்காமல், தன் பெண் வாழ்க்கை பாழாய்ப் போனதே... இப்படி ஒரு  நல்ல மாப்பிள்ளை கை நழுவிவிட்டானே’ என்ற, ஆதங்கம்தான் அவரை ரெளத்திரமாக்கி இருந்தது. ஆத்திரம் தீராமல் மீண்டும் மீண்டும் அசோக்கை அடித்தார்.

 

தான் பெற்ற ரத்தம் அடி  வாங்குவதைப் பார்க்கும்போது எப்பேர்பட்ட கோழையாக இருந்தாலும் வீரம் வரும். செல்வத்தின் ரத்தம் 100 டிகிரி ஆனது. சட்டென்று கண்ணுசாமியைப்  பிடித்து விலக்கி "என் மவன் பண்ணது தப்புதான். அதுக்காக அவனை அடிக்க நீ யாரு?"என்று ஆவேசமாக கண்ணுசாமி மீது பாய்ந்தார்  செல்வம்.

”நான்   யாரா ? ஏன் கேட்க மாட்ட?  பம்மிக்கிட்டு  வந்து என் தங்கச்சியப் பொண்ணு கேட்கும்போது, நான் யாருன்னு தெரியல உனக்கு? சாப்பாட்டுக்கு வக்கத்த  உனக்கு, என் தங்கச்சியையும் கொடுத்து, காணி நிலத்தையும்  சீராக் கொடுத்து, நல்லது கெட்டதுக்கெல்லாம் சீரு..வாரு..செய்த இந்த இளிச்சவாயனைப்  பார்த்து கேட்கற.. நான் யாருன்னு? நல்லா இருக்குய்யா உன் நியாயம். நம்பிக்கை துரோகம் பண்ண நீ... பெத்த புள்ளைய கண்டிக்க துப்பு இல்ல? என் சட்டையை பிடிக்கிற... நீ எல்லாம்.."- என்று சுற்றி  நின்று கவனிக்கும் கூட்டத்தை மறந்து ஆத்திரத்தில் சத்தம் போட்டார்  கண்ணுசாமி.

 

அதற்குள் அங்கு வந்த சிலர் ”ஏன்பா ஒற்றுமையாக இருந்த மாமா மச்சான் அடிச்சுக்கலாமா? எதுவா இருந்தாலும் பேசித் தீர்த்துக்கலாம்." என்று வெள்ளை புறாவைப் பறக்க விட்டனர்.

 

மாப்பிள்ளை மணிக்கு கோபம் கொப்பளித்தது. சடங்கு முடியாமல் மணவறையை விட்டு எழுந்திருக்க கூடாது என்ற தவிப்பில் அமர்ந்திருந்தான். மணியின் மாமனார் "முதலில் நடக்க வேண்டிய சடங்குகள் நடக்கட்டும் பிறகு மற்ற விஷயங்களை பேசுவோம்” என்று குரல் கொடுத்ததும் ஐயர் மந்திரம் ஓத, மாலை மாற்றி, அம்மி மிதித்து அருந்ததி பார்க்கும் வைபவங்கள் தொடர்ந்தன.  அசோக்கும் சங்கவியும் மணவறையின் ஒரு மூலையில் நின்று கொண்டிருந்தனர். பதட்டம் பதட்டமாய்...

 

சடங்குகள் முடிந்து, மாப்பிள்ளையும் பெண்ணும் பாலும் பழமும் சாப்பிட அறைக்கு போனதும், "ஏன்டி உன்ன நம்பி தானே என் பொண்ணை அனுப்பினேன். இப்படி தலைகுனிய வச்சுட்டியே" என்று அலமேலுவை அடித்தார் பெருமாள். 

 

வேகமாக ஓடி வந்து பெருமாளின் காலைக் கட்டிக்கொண்டாள் சங்கவி. "அப்பா எங்க மேல எந்த தப்பும் இல்லப் பா" என்று கதறினாள். மூவரும் செய்வதறியாது அழுதுகொண்டு கூனிக்குறுகி நின்றனர்.

 

ஊரில் இருக்கும் அங்காளி பங்காளி எல்லாம் ஒரே குரலில் ”நடந்த கல்யாணத்தை மாற்ற முடியாது. இந்த பொண்ணு யாரு? அத்தை பொண்ணு தானே ... சின்னஞ் சிறுசுங்க ஆசைப்பட்டாங்க.  தாலியும்  கட்டியாச்சு. அவங்களை மன்னித்து விடுங்கள்” என்று சமாதானம் பேசினார்கள்.

"எட்டுத்  தெரு அடைச்சுப் பந்தலிட்டு, ஏழூரு  மேளதாளம் ஒலிக்கவிட்டு, தேசிங்குராஜா வாட்டம் குதிரை ஏறி வந்து, தங்க நகை பூட்டி, வைரக்கல்லு வச்சி, வெள்ளியில் சீர் எடுத்து வந்த ஸ்ரீதேவியை என் பேரனுக்குக் கல்யாணம் கட்டனும்ன்னு நான் கண்ட கனவெல்லாம் கானல் ஆயிடுச்சே”ன்னு தனம்மா பாட்டி ஒப்பாரி வைக்க ஆரம்பித்துவிட்டாள்.

"த.... கிழவி சும்மா இருக்க மாட்ட,  ஊர் பெரிய மனுஷங்க என்ன சொல்றாங்கன்னு கேட்போம்" என்று தன் அம்மாவை அடக்கினார் கண்ணுசாமி.

"ஏம்ப்பா அசோக், நாலு எழுத்து படிச்சவன் நீ , நல்லது கெட்டது தெரிஞ்சவன், இப்படி பண்ணலாமா?”- என்று பெரியப்பா முறைக்காரரான ரங்கசாமி கேட்டார்.

" பெரியப்பா, புவனாவைக் கட்டிக்க மாட்டேன்னு, வீட்ல எவ்வளவோ எடுத்துச் சொல்லிப் பார்த்துட்டேன். புவனாவும் நானும் சின்ன வயசுல இருந்து ஒன்னு மண்ணா  விளையாடி வளர்ந்தவங்க. என்னால புவனாவை பொண்டாட்டியாப் பார்க்க முடியல.. சொத்து போயிடும்னு கல்யாணத்துக்குக் கட்டாயப்படுத்தினா, நான் என்ன பண்ணட்டும்?" என்று அசோக் தன் தரப்பு நியாயத்தைச் சொன்னான்.

"ஏம்மா சங்கவி, இவன் தாலி கட்டப் போறான்னு உனக்குத் தெரியுமா?” என்ற ரங்கசாமிக்கு "தெரியாது மாமா" என்று தலை கவிழ்ந்தபடியே மெதுவாகச் சொன்னாள் சங்கவி.

"ஒரு பெண்ணோட சம்மதம் இல்லாம எப்படி அவ கழுத்துல நீ தாலி கட்டலாம்?"

" பெரியப்பா, அவளுக்கும் என்னைப் புடிச்சிருக்கு. அதை வெளியில் சொல்லப் பயந்துகிட்டு அமைதியா இருக்கா. நான் சங்கவியை விரும்புறேன். கல்யாணம் பண்ணி வைங்க ன்னு கேட்டா, என் அம்மா, அத்தையையும் மாமாவையும் மிரட்டி சங்கவிக்கு வேற இடத்துல கல்யாணம் பண்ணி வச்சிருப்பாங்க. அதனாலதான் இப்படி ஒரு முடிவை எடுத்தேன்.  சங்கவிக்கு என்னைப் பிடிக்கலன்னு சத்தியம் பண்ணிச் சொல்லச் சொல்லுங்கள்" என்று உணர்ச்சி  கொப்பளிக்கக் கேட்டான் அசோக்.

 

அமைதியாக நின்றிருந்த சங்கவியை, அசோக்கின் அக்கா புனிதாவின் குழந்தைகள் நந்தினியும், கதிரும்  ஓடி வந்து கட்டிக் கொண்டனர்.

 

அவர்களை அணைத்தபடி ”இனிமே வாழ்வோ? சாவோ? அது..அசோக் மாமாவுடன் தான்” என்று அழுத்தமாகவும் தீர்க்கமாகவும் சொன்னாள்  சங்கவி.

" நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து வாழ முடிவு பண்ணினால், வீட்டை விட்டு வெளியே போங்க”  என்று ஒரு குரல் அதட்டலாகக் கோபமாக வெளிப்பட்டது.

 

(சிறகுகள் படபடக்கும்)