தான் சந்தித்த பல்வேறு கவுன்சிலிங் பற்றியும், பல வகையான மனிதர்களுக்கு அவர் கொடுத்த கவுன்சிலிங் குறித்தும் ‘மனங்களும் மனிதர்களும்’ தொடரின் வழியாக ஜெய் ஜென் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார். அந்த வகையில், ஷேர் மார்க்கெட்டில் பணத்தை கட்டி தற்கொலை செய்து கொண்டவரின் மனைவிக்கு கொடுத்த கவுன்சிலிங் பற்றி விளக்குகிறார்.
ஒரு பெண் என்னிடம் கவுன்சிலிங்கிற்காக வந்தார். கணவர் ஷேர் மார்க்கெட்டில் பணத்தை கட்டி லாஸ் ஆனதால் தற்கொலை செய்துகொண்டார் என்றே ஆரம்பித்தார். நல்ல குடும்பம், போதுமான வருமானம், இரண்டு குழந்தைகள் என நன்றாக தான் போய் கொண்டிருந்தது. ஆனால், சீக்கிரமே பணக்காரனாக ஆக வேண்டும் என்ற ஆசையால், கணவன் இருக்கிற பணத்தையெல்லாம் ஷேர் மார்க்கெட்டில் போட்டு லாஸ் ஆகியிருக்கிறார். அதன் பிறகு மனைவியினுடைய நகை, வீட்டினுடைய சொத்து, என எல்லாவற்றையும் அடமானம் வைத்து அவை அனைத்தும் லாஸ் ஆகி கிட்டத்தட்ட அந்த குடும்பம் ஒன்றும் இல்லை என்ற இடத்திற்கு வந்து ஒரு கட்டத்தில் கணவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சமயத்தில் அந்த பெண்ணும், இரண்டு பிள்ளைகளும் என்னிடம் கவுன்சிலிங்கிற்காக வந்தனர். மகளுக்கு திருமண செலவு மற்றும் பையனின் படிப்பு செலவு இதையெல்லாம் எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் வந்தனர்.
இதுவரை போனது போகட்டும், இனிமேல் காலத்திற்கு அழியாத சில நம்பிக்கையான நிறுவனங்களில் கடைசியாக ஒரு 10,000 ரூபாய் இன்வெஸ்ட் செய்யுங்கள். அந்த நிறுவனத்தின் பற்றிய செய்தியை தினசரி பார்க்க வேண்டும். ஒருவேளை அந்த நிறுவனத்தை பற்றிய செய்திகள் தவறாக இருந்தால் அன்றைக்கு அதை விற்றுவிட்டு வேறு ஒரு நிறுவனத்தில் பணத்தை இன்வெஸ்ட் செய்யுங்கள். நீங்கள் இன்வெஸ்ட் செய்த பணத்தை இல்லை என்று நினைத்து ஒரு 20 வருடங்கள் வரை அந்த பணத்தை தொடாமல் இருங்கள் என்றேன். இந்த சம்பவம் நடந்து கிட்டத்தட்ட 8 வருடம் ஆகிவிட்டது. அவர் இன்வெஸ்ட் செய்த பணம், தற்போது 1 லட்சம் வரை உயர்ந்திருக்கிறது.
இந்த குறிப்பிட்ட காலத்தில், அந்த பெண்ணின் பெற்றோர் உதவியால் அந்த பெண் நிறையவே சம்பாரித்து மகன், மகளுக்கு திருமணம் செய்துவிட்டு தற்போது நன்றாக இருக்கிறார். இதற்கிடையில், எவ்வளவோ பணம் போய்விட்டது. ஆனால், குறிப்பிட்ட பணத்தை ஒரு இடத்தில் போட்டு அது வளர்கிறது என்று அமைதியாக இருக்கும் போது கிடைக்கிற நம்பிக்கை ரொம்பவே சந்தோஷமாக இருக்கிறது. இந்த விஷயம் ஏன் கணவருக்கு தெரியாமல் போய்விட்டது என்று அந்த பெண் என்னிடம் அடிக்கடி சொல்வார். ஒரு நல்ல நிறுவனம் என்னவென்று பார்த்து அதில் இன்வெஸ்ட் செய்துவிட்டு நேரத்திற்கேற்ப உழைத்தால் ஷேர் மார்க்கெட் என்பது நல்லதாக அமையும். ஆனால், பேராசையால் உழைத்தால் ஷேர் மார்க்கெட் என்பது நரகமாக மாறிவிடும். அதே போல், எல்லா நிறுவனங்களும் ஜெய்ப்பதில்லை, ஆனால் கண்டிப்பாக ஒரு 30 நிறுவனங்கள் காலத்திற்கும் நிழைத்து நிற்கும். அதை கண்டுப்பிடிப்பதற்கான முயற்சியை நாம் தான் எடுக்க வேண்டும்.