கதவைத் திறந்தால் அதன் இடுக்கில் ஒளிந்திருந்த கரப்பான் பூச்சி எவ்வளவு வேகம்கொண்டு ஓடுமோ, அந்த அளவிற்கு சுறுசுறுப்பான 15 வயது நிரம்பிய பையன் அவன். அவனை வலுக்கட்டாயமாகப் பிடித்து உட்கார வைத்து இருந்தனர். எதிரே மருத்துவர் அமர்ந்திருந்தார். மருத்துவர் என்ன சொல்ல இருக்கிறாரோ என்ற பதற்றத்துடன் அவன் பெற்றோர் அருகே அமர்ந்திருந்தனர். உங்கள் குழந்தைக்கு இதயத்துடிப்பு சீராக இல்லை. இது அரிதாக நடக்கக்கூடியது. ஒன்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். அறுவை சிகிச்சை செய்தால் உறுதியாகக் குணமாவான் என்பதற்கு உத்திரவாதம் இல்லை, மரணம் கூட நேரலாம் என்றார் மருத்துவர்.
அந்தச் சிறுவனின் பெற்றோர் பதறினர். இல்லையென்றால் இன்னொரு வழி இருக்கிறது. வாழ்க்கையில் கடைசி வரை வேகமாக ஓடுவதோ, விளையாடுவதோ கூடாது என்றார். பெற்றோருக்கு இரண்டாவது கூறியது எளிமையானதாகவும், நம்பிக்கை அளிக்கக் கூடியதாகவும் இருந்தது. ஆனால் அந்தச் சிறுவனுக்கு முதலில் கூறியது தான் பிடித்திருந்தது. என்னால் கால்பந்து விளையாடுவதை நிறுத்த முடியாது. அறுவை சிகிச்சை செய்யலாம் என்று தயாராகினான். அந்தச் சிறுவன், இந்நூற்றாண்டில் கால்பந்து உலகு கண்ட மகத்தான ஆளுமைகளில் ஒருவரான கிறிஸ்டியானோ ரொனால்டோ.
போர்ச்சுக்கல் நாட்டில் உள்ள மேடிரா தீவில் தோட்ட வேலைகளில் ஈடுபடும் கூலித் தொழிலாளிக்கு மகனாகப் பிறந்தவர் ரொனால்டோ. தந்தையின் வருமானம் அன்றைய பொழுதில் வயிற்றைக் கழுவ சரியாக இருக்கும். சில நாட்களில் அதற்கே சிக்கல் ஏற்படும் நிலையும் உண்டாகும். பின்னாட்களில், அவர் தந்தைக்கு கால்பந்து கிளப்பில் உதவியாளராக வேலை கிடைக்கிறது. அந்த கிளப்பிற்கு சொந்தமான மைதானத்தைப் பராமரிப்பது, அந்த கிளப் அணிக்காக விளையாடும் வீரர்களுக்கு உதவியாளராகச் செயல்படுவதுதான் அவரது வேலை. தந்தையோடு அவ்வப்போது கிளப் மைதானத்திற்குச் செல்லும் ரொனால்டோவிற்கு கால்பந்து மீது ஈர்ப்பு ஏற்படுகிறது. தெருக்களில் காலி பாட்டில்களை எட்டி உதைத்து விளையாடித் திரிகிறான். ஒரு கட்டத்தில் ஈர்ப்பு ஆர்வமாக மாற, வீட்டில் உள்ள பழைய துணிகளை ஒன்று சேர்த்து பந்தாக உருட்டி உதைத்து விளையாடுகிறான்.
ரொனால்டோ அப்பா, தன்னுடைய மகனுக்காக கிளப்பில் பேசி விளையாட அனுமதி வாங்குகிறார். வீட்டில் கிடந்த ஒரு கிழிந்த ஷூவை மாட்டிக்கொண்டு முதல் முறையாக மைதானத்தில் கால் வைக்கிறார். ரொனால்டோ ஆட்டத்திறன் அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்த, அவர் மீது பொறாமை கொண்ட சிலர் அவனை சீண்ட ஆரம்பிக்கின்றனர். ரொனால்டோவின் தந்தை அவர்களுக்கு உதவியாளர் என்பதால், ரொனால்டோவை 'எடுபிடியின் மகன்' என்கிற தொனியில் ஏளனம் செய்ய ஆரம்பிக்கின்றனர். அவருக்குச் சரியாக 11 வயது இருக்கும் போதே அவருக்குள் உள்ள கால்பந்து வீரனை அங்கிருந்த அனைவரும் அடையாளம் கண்டுவிட்டனர். 12 வயதில் பிரபல எஸ்.சி.பி கிளப் அணிக்காக விளையாட வாய்ப்பு கிடைக்கிறது. அதில், பங்கெடுப்பதற்காக வீட்டை விட்டு வெளியேறுகிறார். 14 வயதில், தன்னைக் கேலி செய்த பள்ளி ஆசிரியர் மீது நாற்காலியை எறிந்ததற்காக பள்ளியில் இருந்து நீக்கப்படுகிறார். அதன்பின் கால்பந்து மட்டும்தான் அவரது வாழ்க்கை என்றானது.
"நான் வறுமை நிறைந்த குடும்பத்தில் பிறந்தவன். என் வீட்டில் எந்த வசதி வாய்ப்பும் கிடையாது. மற்றவர்கள் வீட்டில் நடப்பதைப் போல கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் கூட எங்கள் வீட்டில் பெரிய அளவில் இருக்கவில்லை. என் அப்பா அவர் வேலை பார்த்த மைதானத்திற்கு என்னை அழைத்துச் செல்வார். அதுவரை தெருக்களில் விளையாடிக் கொண்டிருந்த எனக்கு, அங்குள்ளவர்கள் விளையாடுவதைப் பார்க்கும் போது கால்பந்து விளையாட்டின் மீது ஆர்வம் அதிகமானது. மற்றவர்கள் கண்டுபிடிக்கும் முன்னரே எனக்குள் இருந்த திறமையை நான் கண்டுபிடித்துவிட்டேன். மற்றவர்களை விட நான் மிகவும் ஒல்லியாகவும், சிறியவனாகவும் இருந்ததை அனைவரும் குறையாகக் கருதினார்கள். மற்றவர்களை விட நாம் பின் தங்கியிருப்பது குறையல்ல. அவர்களை விட நாம் கடினமாக உழைத்தால் அதை நிவர்த்தி செய்துவிடலாம் என்று எனக்குள் ஆறுதல் சொல்லிக்கொண்டேன்.
அதைச் செய்யவும் தொடங்கினேன். என் கனவுக்காக கடினமாக உழைக்கவும், அதற்காக தியாகம் செய்யவும் மட்டும் தான் எனக்குத் தெரியும். 12 வயது சிறுவனாக நான் இருக்கும் போதே எனது லட்சியத்திற்காக வீட்டை விட்டு வெளியேறினேன். என் வாழ்க்கையில் அது மிகவும் கடினமான காலம். ஆனால் அதை நான் விரும்பி ஏற்றுக்கொண்டேன். அதன்பின் என் வாழ்க்கையில் அனைத்தும் நன்றாகச் சென்றுகொண்டிருந்தன. துரதிர்ஷ்டவசமாக 15 வயதில், இதயத்தில் அறுவை சிகிச்சை செய்துகொள்வதா அல்லது கால்பந்தைக் கைவிடுவதா என்று முடிவெடுக்க வேண்டிய துயர்மிகு நிலைக்கு ஆளானேன். துணிந்து முடிவெடுத்தேன். இன்று உங்கள் முன் நிற்கிறேன்...".
இன்று உலக அளவில் அதிக ரசிகர்களைக் கொண்ட கால்பந்து வீரர் என்ற பெருமையும் ரொனால்டோவிற்கு உண்டு. பணம், புகழ்ச்சி எதையும் தேடி ரொனால்டோ சென்றதில்லை. "வாழ்க்கையில் புதுமை வேண்டும். தினந்தோறும் சவால்கள் நிறைந்ததாக இருக்க வேண்டும். சவால்கள் நிறைந்த வாழ்க்கைதான் நாம் யார் என்பதை நமக்கு உணர்த்தும்" என அடிக்கடி நேர்காணலில் கூறுவார். அவரது கடின உழைப்பும், தனித்துவமாகக் களமாடும் முறையும் அவருக்கான அங்கீகாரத்தை அவர் காலடியில் கொண்டு வந்து குவித்தன.
ரொனால்டோ களத்தில் மணிக்கு 33 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடும் திறமை வாய்ந்தவர். கோல் போடுவதற்காக புவியீர்ப்பு விசை கோட்பாட்டை பொய்யாக்கும் வண்ணம் அந்தரத்தில் அவர் எகிறிக் குதிப்பதையெல்லாம் இதுவரை பிற வீரர்கள் முயற்சித்தது கூட கிடையாது. கால்பந்து விளையாட்டில் உயர்ந்த விருதாகக் கருதப்படும் 'தங்கக் காலணி' விருதை இதுவரை நான்கு முறை வென்றுள்ளார். உலக அளவில் சமூக வலைதளங்களில் ஆதிக்கம் செலுத்தக் கூடியவர்கள் பட்டியலில் ரொனால்டோ முக்கியமானவர். இன்று அவர் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில், ஒரு நிறுவனத்தை விளம்பரப்படுத்தி ஒரு பதிவு போடுகிறார் என்றால் அதன் மூலம் அவர் ஈட்டும் வருவாய் $9,75,000 அமெரிக்க டாலராகும். இந்திய மதிப்பில் 7 கோடிக்கும் அதிகமாகும். மூன்று வேளை உணவிற்கே வழி இல்லாத குடும்பத்தில் பிறந்து, இன்று வெறும் ஒரு பதிவு போடுவதன் மூலம் விரல் சொடுக்கிடும் நேரத்தில் 7 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வருமானம் ஈட்டுகிறார் என்றால் அதற்கு, கனவினை நோக்கிய துல்லியமான உழைப்பினைத் தவிர வேறெந்த காரணமும் இருந்து விட முடியாது.
முதல் முறை மைதானத்தில் களமிறங்கும் போது, கிழிந்த ஷூவோடு இறங்கி, எடுபிடியின் மகன் என்ற வசை மற்றும் இழிசொல்லைக் கடந்து, இதய அறுவை சிகிச்சையில் வென்று, இன்று உலகம் கொண்டாடும் ஆளுமையாக உருவெடுத்திருக்கிறார் என்றால் அவரது வாழ்க்கையில் நமக்கு எவ்வளவு படிப்பினைகள் இருக்கிறது என்று பாருங்கள்! கனவினை நோக்கித் தொடர்ந்து ஓடுவோம்...