குடும்ப நல வழக்குகள் பலவற்றை கையாண்டது குறித்த அனுபவங்களை ‘வழக்கு எண்’ என்ற தொடரின் வழியே தொடர்ச்சியாக வழக்கறிஞர் சாந்தகுமாரி நம்மிடையே பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் ஒரு வழக்கைப் பற்றி பார்ப்போம்.
சாதனா என்ற பெண்ணுடைய வழக்கு இது. சென்னையைச் சேர்ந்த சாதனா பெரியாரிய கருத்துக்களாலும் திராவிட சிந்தனைகளாலும் ஈர்க்கப்பட்டவள். சாதனாவுக்கு ஈரோட்டைச் சேர்ந்த ஒரு பையனுக்கு திருமணம் செய்து வைக்க அவளது பெற்றோர் முடிவெடுத்து தனது மகள் பெரியாரைப் பின்பற்றுபவள் என்று மாப்பிள்ளை வீட்டாரிடம் சொல்லியிருக்கின்றனர். அதற்கு மாப்பிள்ளை வீட்டார் எங்களுக்கும் அவரை பிடிக்கும் என்று சொல்லி ஒரு வழியாக சாதனாவுக்கும் அந்த பையனுக்கும் திருமணத்திற்குச் சம்மதம் தெரிவிக்கின்றனர். அதோடு சாதனாவுக்கு எவ்வளவு நகை போடுவீர்கள் என்று மாப்பிள்ளை வீட்டார் கேட்க, செய்ய வேண்டியதைச் செய்வோம் என்று சாதனா பெற்றோர் கூறியிருக்கின்றனர். ஒரு வழியாக அந்த பையனுடன் சாதனாவுக்கு திருமணம் நடக்கிறது.
திருமணம் முடித்த கையோடு சாதனா கணவன் வீட்டிற்குச் செல்கிறாள். அங்கு சென்றதும் மாமியார் கையில் வீடு கட்டுப்பட்டு இருப்பது சாதனாவுக்குத் தெரிய வருகிறது. ஒரு நாள் சாதனா, பயங்கர பசியில் அவளே சாப்பாடு போட்டு சாப்பிடத் தொடங்கி இருக்கிறாள். இதைப் பார்த்த அந்த மாமியார், முதலில் ஆண்களுக்குப் பரிமாறிய பிறகுதான் பெண்கள் சாப்பிட வேண்டும் என்று சொல்லித் திட்டியிருக்கிறார். புது வீடு என்பதால் மாமியார் சொன்னதைக் கேட்டுக்கொண்டு சாதனா அமைதியாக இருந்திருக்கிறாள். சில நாட்கள் கழித்து சாதனாவின் மாமியார் அவளிடம், என்னமா நகை இன்னும் உங்கள் வீட்டிலிருந்து தரவில்லையா? என்று கேட்டிருக்கிறார். இதை சாதனா தன் அப்பாவிடம் கூற அவர் சம்மந்தி வீட்டாரிடம், நகை எல்லாம் இருக்கிறது அதைக் கொடுக்க சூழ்நிலை அமையவில்லை என்று கூறியிருக்கிறார். இதற்கு சாதனாவின் மாமியா, நகை எப்போது தருவீர்களோ அப்போது மகளை இங்கு அழைத்து வாருங்கள் அதுவரை நீங்களே அழைத்துச் செல்லுங்கள் என்று கூறியிருக்கிறார். அதன் பிறகு மகளுக்கும் மருமகனுக்கும் சேர்ந்து மொத்தமாக 71 பவுன் நகையை சாதனாவின் அப்பா கொடுத்திருக்கிறார். பிறகு அந்த நகைகளை தன்னுடைய லாக்கரில் சாதனாவின் மாமியா வைத்து விடுகிறார்.
அதன் பிறகு ஒரு வாரம் கழித்து சாதனா, பூப்புனித நீராட்டு விழாவுக்குச் செல்வதற்காக மாமியாரிடம் நகைகளை கேட்டிருக்கிறாள். அதற்கு அந்த மாமியார், நகைகள் போடுவதைப் பற்றி தான் முடிவெடுப்பதாகவும் அதிக நகைகள் போட்டுச் சென்றாள் திருடுபோக வாய்ப்பிருப்பதாகவும் கூறி, சாதனா போட்டிருக்கும் செயினோடு நிகழ்ச்சிக்குப் போகச் சொல்லியிருக்கிறார். இதற்கு சாதனா அது தன்னுடைய நகை என்று பதிலளித்திருக்கிறார். உடனே அவளின் மாமியா சரி அப்படியே எடுத்துக்கொண்டு சென்னைக்கு சென்றுவிடு என்று கோபமாகத் திட்டியிருக்கிறார். சாதனா பொறுமையாக இருந்திருக்கிறாள். இதற்கிடையில் சாதனா, தன் கணவருக்கு சொரியாசிஸ் வியாதி இருப்பதை மாமியாரிடம் தெரிவித்திருக்கிறாள். அதற்கு மாமியா, வேப்பிளை போட்டுத் தான் உன் கணவர் குளிக்கிறார் இருந்தாலும் கொஞ்ச நாள் பக்கத்தில் போகாமல் இரு அவளிடம் கூறியிருக்கிறார். இதை சாதனாவின் கணவரும் கேட்டுக்கொண்டு அமைதியாக இருந்துள்ளார். ஆனால் மாமியார், சாதனா வந்த நாளிலிருந்து அவளையும் தன் மகனையும் ஒன்று சேரவிடாமல் எதாவது சொல்லித் தடுத்திருக்கிறார்.
சாதனா அதை பெரிதாக நினைக்காமல் இருந்தாலும்கூட தாம்பத்திய உறவைப் பற்றி அவ்வப்போது தனது அம்மாவிடம், கணவர் நெருங்கி வராதது குறித்து பேசியிருக்கிறாள். இதையடுத்து சாதனாவின் அம்மா, பத்து நாளைக்கு மாப்பிள்ளையையும் மகளும் சென்னையில் வந்து இருக்கட்டும் என்று சம்மந்தியிடம் கூறியிருக்கிறார். பின்பு சென்னை வந்த மாப்பிள்ளைக்குத் தடபுடலான விருந்து வைத்து நன்றாகக் கவனிக்க தொடங்கியிருக்கின்றனர். பிறகு சாதனாவின் அப்பா, அண்ணா நகரிலுள்ள ஒரு மருத்துவரிடம் மாப்பிள்ளையை அழைத்துச் சென்று அவருக்கு இருக்கும் வியாதிக்குச் சிகிச்சை பெறச் சொல்லியிருக்கிறார். அதேபோல் மாப்பிள்ளையும் சிகிச்சை பெற்றிருக்கிறார். அதன் பிறகு குழந்தை பெறுவதற்கான சில ஆலோசனைகளை மகளிடமும் மாப்பிள்ளையிடமும் சொல்லி ஈரோட்டுக்கு அனுப்பி வைக்கின்றனர்.
ஈரோட்டுக்கு இருவரும் வந்ததும் சாதனாவின் மாமியா, துக்க வீட்டிற்குச் செல்வதாகக் கூறி இருவரையும் தனியாக வீட்டில் விட்டுவிட்டுச் சென்றிருக்கிறார். அந்த நாள் இரவு சாதனாவும் அவரது கணவரும் ஒன்றாக இருக்க வாய்ப்பிருந்தால் இருவரும் தாம்பத்திய உறவை தொடங்கியிருக்கின்றனர். ஒரு மாதத்திற்குப் பிறகு சாதனா கர்ப்பமாக இருப்பது அவளின் மாமியார்க்குத் தெரிய வருகிறது. சில காலங்களுக்குப் பிறகு சாதனாவுக்கு குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தையை சிசரியன் செய்து டாக்டர்கள் எடுத்ததால் தலை கொஞ்சம் நேராக இல்லாமல் இருந்திருக்கிறது. அந்த குழந்தையின் தலையை சூடான தண்ணீரை வைத்து தட்டி சரி செய்வதாக மாமியா குழந்தையை அழ வைத்திருக்கிறார். இதையடுத்து அந்த குழந்தைக்கு மருத்துவர்கள் பரிந்துரைபடி ஒரு ஹெல்மட் அணிவித்து கொஞ்சம் கொஞ்சமாகத் தலையை சரி செய்திருக்கின்றனர். இதற்கிடையில் மாமியார், மருமகள் சண்டை முற்றிப்போக உன் அம்மா வீட்டிலிருந்து போ சென்று சாதனாவை துரத்திவிடுகின்றனர். இதற்கு சாதனாவின் கணவரும் எதுவும் சொல்லாமல் தனது அம்மா பேச்சை மீறாமல் இருந்திருக்கிறார்.
இந்த சூழலில் சாதனா என்னைப் பார்த்து தன் கணவருடன் வாழ வேண்டும் என்று தனது விருப்பத்தைக் கூறினாள். அதன்படி இருவரும் சேர்ந்து வாழ்வதற்காகச் சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். வழக்கு நடந்த சமயத்தில் சாதனா தன் கணவரைக் கட்டிப்பிடித்து அழ ஆரம்பித்தாள். அவரும் மனம் உருகினார். ஆனால் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் இருந்தார். பின்பு எப்படியாவது தன்னிடம் கணவரை வரவழைத்துவிடுங்கள் அவர் மனம் மாறுவார் என்று சாதனா என்னிடம் கேட்டாள். பின்பு சாதனாவுக்கும் அவளது குழந்தைக்கும் மெயின்டனன்ஸ் கேட்டு மனு போட்டோம். அதற்கான நோட்டீஸை பார்த்த சாதனாவின் மாமியார் பயந்துவிட்டார். அதன் பிறகு நகைகளைத் திருப்பி தர வேண்டும் என்று வழக்கு போட்டோம். அதன் பிறகு வழக்கு ரொம்ப நாள் போனது. பிறகு நீதிபதி மாதம் ரூ.15,000 பணத்தை சாதனாவுக்குத் தர வேண்டும் என்று அவளின் கணவருக்கு உத்தரவிட்டார். அந்த பணம் போதாத காரணத்தினால் உயர்நீதிமன்றத்திற்குச் சென்று ரூ.20,000 கொடுக்க வேண்டும் என்றோம். வழக்கு நடந்து கொண்டிருந்த சமயத்தில் சாதனாவுக்கும் அவளின் கணவருக்கும் பழக வாய்ப்பிருந்தது. சாதனா நீதிமன்றத்திற்கு வரும்போது கணவருக்கு சாப்பாடு கொண்டு வருவாள். இருவரும் நன்றாகப் பழகினார்கள். இதைப் பார்த்த நீதிபதி இருவரையும் மீடியேசனுக்கு அனுப்பினார். அங்கு இருவரும் சேர்ந்து வாழ்வதாகச் சம்மதம் தெரிவித்தனர் இந்த வழக்கும் முடிவுக்கு வந்தது.