பாஷ்துன் இனக்குழுவில் திருமணங்கள் பொதுவாக பெற்றோரால் நிச்சயிக்கப்பட்டே நடக்கும். ஆனால், மலாலாவின் பெற்றோர் காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள். இருவருமே, ஸ்வாத் சமவெளியின் மேல்புறம் உள்ள சாங்லாவின் தொலைதூர கிராமங்களில் இருந்து வந்தவர்கள். மலாலாவின் தாய் டோர் பெகாய் தனது அத்தை வீட்டுக்கு அடிக்கடி வருவாள். அந்த வீடு ஜியாவுதீன் யூஸஃப்ஸையின் சித்தப்பா வீடு. பெகாய் வரும்போதெல்லாம் அவளை காதலுடன் கவனிப்பார் யூஸஃப்ஸை. அவளும் அவரை விரும்புவதை அவளுடைய பார்வையில் தெரிந்துகொண்டார். யூஸப்ஸையை பார்ப்பதற்காகவே பெகாய் தனது அத்தை வீட்டுக்கு வந்தாள்.
யூஸப்ஸை அவளுக்கு தனது கவிதைகளை கொடுத்தார். அவளுக்கு படிக்கத் தெரியாது என்பதை மறந்து தனது கவிதைகளை கொடுத்தார். இப்படி காதலிப்பது அவர்களுடைய வழக்கத்தில் இல்லை. இருந்தாலும் காதலித்தார்கள்.
“எனக்கு படிக்கத் தெரியாவிட்டாலும் அவருடைய மனது புரிந்தது” என்றாள் பெகாய்.
“அவளுடைய அழகு என்னை பாடாய் படுத்தியது” என்றார் ஜியாவுதீன்.
இருவரும் காதலித்தாலும், அவர்களுடைய தந்தையருக்கு இது பிடிக்கவில்லை. ஆனால், பெகாயைத்தான் திருமணம் செய்வேன் என்று ஜியாவுதீன் பகிரங்கமாக அறிவித்தார். அதையடுத்து அவருடையை அப்பா தனது மகனின் விருப்பத்தை ஏற்றார். அவருக்காக பெண் கேட்டு உள்ளூர் வழக்கப்படி முடிதிருத்துகிறவரை பெகாயின் அப்பாவிடம் அனுப்பினார். ஆனால், பெகாயின் அப்பா மாலிக் ஜான்ஸெர் கான் மறுத்துவிட்டார். மறுபடியும் தூது அனுப்பும்படி தனது தந்தையை ஜியாவுதீன் கெஞ்சினார். இப்போது வேறு வழியில்லாமல் பெகாயை திருமணம் செய்துகொடுக்க அவர் சம்மதித்தார்.
மலாலாவின் தந்தை மாநிறமாக இருப்பார். தாய் பெகாய் வெள்ளையாய் இருப்பார். தனது நிறம் குறித்து ஜியாவுதீன் வருத்தப்படுவார். ஆனால், பெகாயின் காதல் அவருக்குள் தன்னம்பிக்கையை வளர்த்தது. முன்பெல்லாம், எருமைப் பாலை வாங்கி தனது உடலில் பூசுவதை ஜியாவுதீன் வழக்கமாகக் கொண்டிருந்தார். பெகாயை திருமணம் செய்தபிறகு அந்தப் பழக்கத்தை விட்டுவிட்டார்.
மலாலாவின் அம்மா பெயர் டார் பெகாய் என்பதற்கு கருப்பு கூந்தல் என்று அர்த்தம். டார் பெகாயின் அப்பா ஆப்கன் ரேடியோ கேட்கும் பழக்கம் உள்ளவர். ஒருநாள் ரேடியோவில் கேட்ட டார் பெகாய் என்ற பெயரையே தனது மகளுக்குச் சூட்டினார். ஆனால், பெகாயின் கூந்தல் என்னவோ பிரவுன் கலரில்தான் இருந்தது. வெள்ளை நிற அல்லி இதழ் போல தோலுடன், பச்சைநிற கண்களுடன் பார்ப்பவரை ஈர்க்கும் வகையில் இருப்பார் பெகாய்.
பெகாயின் குடும்பத்தில் ஆண்களும் பெண்களும் செல்வாக்கானவர்களாக இருந்தார்கள். பெகாயின் பாட்டி கணவனை இழந்து குழந்தைகளை கஷ்டப்பட்டு வளர்த்தவர். பெகாயின் அப்பா ஜான்ஸெர் கான்தான் மூத்தவர். அவருடைய 25 வயதில் பழங்குடியினருக்குள் ஏற்பட்ட பகை காரணமாக பிடித்துச் சென்றுவிட்டனர். அவரை விடுவிப்பதற்காக அடர்ந்த வனத்துக்குள் 40 மைல்கள் நடந்தே சென்று, குழு தலைவனிடம் முறையிட்டு மகனை மீட்டு வந்தார்.
பெகாய் எழுதப்படிக்கத் தெரியாதவர் என்றாலும், ஜியாவுதீன் எல்லாவற்றையும் அவருடன் பகிர்ந்துகொள்வார். அன்றைய தினத்தில் நடந்த நல்லது கெட்டது எல்லாவற்றையும் மனைவியிடம் சொல்வார். பல சமயங்களில் கணவரை சீண்டும் வகையில் கிண்டல் செய்யும் பெகாய், நல்ல நண்பராய் யோசனைகள் சொல்வார். ஜியாவுதீனும் அதை ஏற்றுக்கொள்வார். பாஷ்துன் இனக்குழுவைச் சேர்ந்த பல ஆண்கள் மனைவியிடம் இப்படி இயல்பாக இருக்க மாட்டார்கள். தனது பிரச்சனைகளை பெண்களிடம் பகிர்வதால் அவர்கள் பலகீனம் தெரிந்துவிடும் என்று நினைக்கிறவர்களாக இருந்தார்கள். அந்த இனக்குழுவில் ஜியாவுதீன் தம்பதி உள்ளிட்ட சிலர் மட்டுமே சந்தோஷமாக சிரித்துப் பேசி மகிழ்ச்சியாக இருந்தனர்.
பாஷ்துன் இனக்குழுவில் யூஸஃப்ஸை பிரிவினர்தான் மிகப் பெரியவர்கள். பாகிஸ்தானிலும் ஆப்கானிஸ்தானிலும் விரிந்து பரவியிருக்கிறார்கள். 16 ஆம் நூற்றாண்டில்தான் இவர்களுடைய முன்னோர், காபூலில் இருந்து ஸ்வாத் சமவெளிக்கு வந்தார்கள். இந்தப் பகுதியை ஆட்சி செய்த தைமூரிய பேரரசர் ஒருவரின் பதவியை சொந்த பழங்குடியினரே பறித்துக் கொண்டனர். அவருக்கு உதவியாக பாஷ்துன்கள் வந்தார்கள். இழந்த பதவியை பெற்றுக் கொடுத்தார்கள். அவர்களை பேரரசர் மரியாதையான பதவியில் அமர்த்தினார். அமைச்சரவையிலும், ராணுவத்திலும் உயர் பொறுப்புகளை யூஸஃப்ஸைகள் வகித்தனர்.
ஆனால், “யூஸஃப்ஸைகள் பலமிக்கவர்களாக ஆகிக்கொண்டிருக்கிறார்கள். இது நீடித்தால் அவர்கள் விரைவில் உங்களை பதவியிலிருந்து விரட்டிவிட்டு ஆட்சியை கைப்பற்றிவிடுவார்கள்” என்று பேரரசரின் உறவினர்கள் தூபம் போட்டுக்கொண்டே இருந்தார்கள். இது பேரரசருக்குள் அச்சத்தை ஏற்படுத்தியது.
“எனது அரசாங்கத்தில் தலைமைப் பொறுப்பில் இருப்போர் அனைவருக்கும் அரண்மனையில் விருந்து கொடுக்கப் போகிறேன். எல்லோரும் தவறாமல் வர வேண்டும்” என்று பேரரசர் அழைப்பு விடுத்தார்.
சுமார் ஆயிரம் பேர் விருந்தில் பங்கேற்றனர். யூஸஃப்ஸைகள் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக பேரரசரின் ஆட்கள் அவர்களை கொன்றார்கள். 600க்கு மேற்பட்ட முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டனர். இரண்டே பேர் மட்டும் தப்பினார்கள். அவர்கள் பெஷாவருக்கு சென்று தங்கள் இனக்குழுவினருடன் இணைந்தனர். சில காலம் கழித்து மீண்டும் ஸ்வாத் வந்தார்கள். அந்தப் பகுதியில் வாழும் இதர பழங்குடியினரின் ஆதரவைப் பெற்று, ஆப்கானிஸ்தான் செல்ல திட்டமிட்டனர். ஆனால், ஸ்வாத்தின் அழகில் மயங்கினார்கள். மற்ற பழங்குடியினக் குழுக்களை ஸ்வாத்திலிருந்து விரட்டிவிட்டு, பாஷ்துன்கள் அந்தப் பகுதியை ஆக்கிரமித்தார்கள்.
ஸ்வாத் சமவெளியின் நிலத்தை பாஷ்துன்களுக்குள் பிரித்துக் கொண்டார்கள். ஆட்சியாளர்கள் யாரும் இல்லாமல் கிராமத் தலைவர்களே நிர்வாகம் செய்தார்கள். அவர்களுக்கு ஆதரவாக நூற்றுக்கணக்கான ஆயுதமேந்திய ஆட்கள் இருந்தார்கள். பக்கத்து கிராமங்களுடன் ஏற்படும் பிரச்சனைகளை தீர்க்கவும், மற்ற கிராமங்களை கொள்ளையடிக்கவும் அவர்களை பயன்படுத்தினார்கள்.
ஸ்வாத் சமவெளியில் ஆட்சியாளர்கள் யாரும் இல்லாததால் அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டன. கிராமத் தலைவர்களுக்கு இடையிலும், அவர்களுடைய குடும்பத்திற்குள்ளும்கூட இந்த மோதல்கள் சகஜமாகிவிட்டது. பாஷ்துன்கள் அனைவரும் துப்பாக்கி வைத்திருப்பதை கவுரமாக கருதினார்கள். 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதியில் தங்களை பிரிட்டிஷார் அடிமைப் படுத்திவிடுவார்கள் என்ற அச்சம் ஏற்பட்டது. ஸ்வாத் சமவெளியின் முக்கிய நிலப்பகுதிகளை பிரிட்டிஷார் விலைக்கு வாங்கிக் கொண்டிருந்தார்கள்.
இதையடுத்து, தங்களுக்கென்று ஒரு தலைவர் தேவை என்பதை யூஸஃப்ஸைகள் உணர்ந்தார்கள். இரண்டு தலைவர்கள் நியமிக்கப்பட்டு அவர்கள் உதவாக்கரைகளாக ஆனார்கள். பிறகு 1917 ஆம் ஆண்டு மியாங்குல் அப்துல் வதூத் என்பவரை தங்கள் மன்னராக்கினார்கள். அவரை பாதுஷா ஸாஹிப் என்று அன்போடு அழைத்தார்கள். முற்றிலும் கல்வி அறிவு இல்லாத அவர், சமவெளியில் அமைதியை ஏற்படுத்துவதில் வெற்றிபெற்றார். பாஷ்துன் ஒருவரிடம் இருந்து துப்பாக்கியை பறிப்பது அவருடைய உயிரைப் பறிப்பதற்கு சமம் என்று ஸாஹிப் கருதினார். எனவே, பாஷ்துன்களை துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதி கொடுத்தார். அவர்களைக் கொண்டு பலமிக்க ராணுவத்தை கட்டினார். 1926 ஆம் ஆண்டு பாதுஷா ஸாஹிப்பை ஸ்வாத் சமவெளியின் ஆட்சியாளராக பிரிட்டிஷார் அங்கீகாரம் கொடுத்தார்கள்.
அவர்தான் இந்தப் பகுதியில் முதல் டெலிபோன் அமைப்பையும், முதல் தொடக்கப்பள்ளியையும் உருவாக்கினார். நிலத்தை வாங்கவும் விற்கவும் வசதியாக சட்டத்தை அறிமுகப்படுத்தினார். இந்நிலையில்தான் இந்தியா பிரிவினை காரணமாக பாகிஸ்தான் உதயமானது. 1949ல் அரசுப் பொறுப்பை தனது மூத்த மகன் மியாங்குல் அப்துல் ஹக் ஜெஹன்ஸேப்பிடம் ஒப்படைத்தார்.
பெஷாவரில் உள்ள பிரிட்டிஷ் பள்ளியில் படித்த இவர், ஸ்வாத் சமவெளியை வளமிக்கதாக மாற்றினார். இவருடைய நிர்வாக காலம் பொற்காலமாக கருதப்படுகிறது. பள்ளிகளைக் கட்டுவதில் ஆர்வம் காட்டினார். மருத்துவமனைகளையும், சாலைகளையும் அதிகமாக ஏற்படுத்தினார். ஆனால், ஆட்சியாளருக்கு எதிராக பேசுவோர் ஸ்வாத் சமவெளியை விட்டு வெளியேற்றப்பட்டார்கள்.
மலாலாவின் அப்பா 1969 ஆம் ஆண்டு பிறந்தார். அதே ஆண்டுதான், ஸ்வாத் சமவெளியின் ஆட்சியாளர் தனது அதிகாரத்தை கைவிட்டு, பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணத்துடன் இணைய முடிவு செய்தார். சில ஆண்டுகளில் இந்த மாகாணம் கைபெர் பக்துன்க்வா என்று அழைக்கப்பட்டது. எனவே, மலாலா, பாகிஸ்தானில், பாகிஸ்தானியாகத்தான் பிறந்தாள். மலாலாவின் நகரம் ஹிந்துகுஷ் மலையின் நிழலில் அமைந்திருந்தது. நகரவாசிகள் அந்த மலைக்குப் போய் மலையாடுகளையும், காட்டுக் கோழிகளையும் வேட்டையாடி வருவார்கள்.
மலாலாவின் வீடு ஹிந்துகுஷ் மலைகளைப் பார்த்தபடி அமைந்திருந்தது. அந்த வீடு ஒற்றை மாடியுடன் கட்டப்பட்ட கான்கிரீட் வீடு. வீட்டின் பக்கத்து சுவரில் படிக்கட்டுகள் வழியே மாடிக்கு போகலாம். கிரிக்கெட் விளையாடும் அளவுக்கு மொட்டை மாடி இருந்தது. அதுதான் மலாலாவுக்கும் நண்பர்களுக்கும் விளையாட்டு மைதானம். மாலை நேரத்தில் மலாலாவின் தந்தை ஜியாவுதீனும் அவருடைய நண்பர்களும் மொட்டை மாடியில் அமர்ந்து டீ குடித்தபடியே விவாதிப்பார்கள். மொட்டை மாடி கூரையில் சில சமயம் மலாலா அமர்ந்திருப்பாள். பக்கத்து வீடுகளிலும் தனது வீட்டிலும் சமையலறைகளில் இருந்து வெளியேறும் புகையை ரசித்தபடி இருப்பாள்.
ஸ்வாத் சமவெளி முழுவதும் பழ மரங்கள் நிறைந்திருக்கும். மலாலாவின் வீட்டுத் தோட்டத்திலும் திராட்சை, கொய்யா உள்ளிட்டவை வளர்ந்திருக்கும். வீட்டு முன் பிளம்ஸ் மரம் ஒன்று இருந்தது. பறவைகள் அந்த பழங்களைக் கொத்துவதற்கு முன் பறித்துவிட மலாலாவும் அவளுடைய அம்மாவும் விரும்புவார்கள். பெரும்பாலும் பறவைகள் முந்திவிடும். மலாலாவின் தாய் பெகாய் பறவைகளுடன் பேசுவது வேடிக்கையாக இருக்கும். வீட்டின் பின்புறம் ஒரு வராண்டா இருக்கிறது. அங்கேதான் பெண்கள் கூடுவார்கள். ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மலாலாவின் வீட்டுக்கு அடிக்கடி வருவார்கள். பெகாய் எப்போதுமே கூடுதலாக உணவு சமைப்பார். சிலசமயம் உணவு மீந்துவிட்டால் அதை பறவைகளுக்கு வைப்பார். “தோட்டத்தில் ஒரு புறாவை கொல்லாதீர்கள்… ஒரு புறாவைக் கொன்றால் மற்றொரு புறா உங்கள் தோட்டத்துக்கு வராது” என்று பெகாய் ஒரு பாடலை அடிக்கடி பாடுவார்.
மாலாலா பிறந்தபோது அவளுடைய தந்தை மிகவும் ஏழையாக இருந்தார். அந்தச் சமயத்தில்தான் அவரும் அவருடைய நண்பரும் சேர்ந்து முதல் பள்ளியை தொடங்கினார்கள். பள்ளிக்கு எதிரே சாதாரணமான இரண்டு அறைகள் கொண்ட வீட்டில் குடியிருந்தார்கள். மலாலாவும் அவளுடைய அப்பா அம்மாவும் ஒரு அறையில் படுப்பார்கள். இன்னொரு அறை விருந்தினர்கள் தங்குவதற்காக பயன்படும். அந்த வீட்டில் குளியல் அறையோ, சமையல் அறையோ கிடையாது. விறகு அடுப்பில்தான் பெகாய் சமைப்பார். பள்ளியில் இருந்த ஒரு குழாயில்தான் துணிகளை துவைப்பார். சின்ன வீடாக இருந்தாலும் வீடு நிறைய ஆட்கள் இருப்பார்கள். கிராமங்களில் இருந்து வருகிறவர்களுக்கு தங்க இடம் கொடுப்பது பாஷ்துன் கலாச்சாரம்.
மலாலா பிறந்து இரண்டு ஆண்டுகள் கழித்து ஒரு ஆண் குழந்தை பிறந்தது. குஷால் என்று அவனுக்கு பெயர் சூட்டினார்கள். அவனும் வீட்டில்தான் பிறந்தான். அப்போதும் மருத்துவமனைக்கு பணம் கட்டும் அளவுக்கு வசதி இல்லை. குஷால் என்பது ஒரு போர்வீரனின் பெயர். அவன் ஒரு கவிஞனும்கூட. மலாலாவின் தாய் பெகாய்க்கு ஆண் குழந்தை பிறந்த சந்தோஷத்தை மறைக்கத் தெரியவில்லை. அவள் மறைக்கவும் விரும்பவில்லை. அவர்கள் இனக்குழுவில் ஆண் குழந்தைக்கு அவ்வளவு முக்கியத்துவம் இருந்தது. அவன் விரும்பியதெல்லாம் செய்ய பெகாய் தயாராக இருந்தாள். அவனுக்காக புதிய தொட்டில் ஒன்றை வாங்க விரும்பினாள். ஆனால், ஜியாவுதீன் மறுத்துவிட்டார். மலாலா இந்தத் தொட்டிலில்தானே தூங்கினாள். இவன் தூங்க மாட்டானா? என்று கேட்டார். அடுத்து ஐந்து ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒரு ஆண்குழந்தை பிறந்தது. அவனுக்கு அடல் என்று பெயர் வைத்தார்கள்.
அவனுடன் குழந்தைகள் போதும் என்றார் ஜியாவுதீன். ஸ்வாத் சமவெளி இனக்குழுக்களுக்கு இதுதான் மிகச்சிறிய குடும்பம். பொதுவாக ஒவ்வொரு குடும்பத்திலும் ஏழு அல்லது எட்டுக் குழந்தைகள் சராசரியாக இருக்கும். மலாலாவும் குஷாலும்தான் சேர்ந்து விளையாடுவது வழக்கம். அவன்தான் இரண்டு ஆண்டுகள் இளையவன். இருவரும் விளையாடும்போது சண்டைகள் வரும். அவன் அம்மாவிடமும், அவள் அப்பாவிடமும் அழுதபடி ஓடுவார்கள்.
இரண்டாவது தம்பி பிறக்கும்போது மலாலாவுக்கு 9 வயது ஆகிவிட்டது. அப்போதே அவள் படிப்பில் கெட்டிக்காரியாக இருந்தாள். புதிய வீடு கட்டிவிட்டார்கள். அந்த வீட்டின் மேல் கூரையில் அமர்ந்தபடி ஹிந்துகுஷ் மலைகளை வேடிக்கை பார்ப்பது மலாலாவுக்கு பிடிக்கும். அந்த மலைகளில் மிக உயரமானது பிரமிட் வடிவிலான இளம் மலைதான். ஸ்வாத் சமவெளி மக்களுக்கு அது புனித மலை. எப்போதும் மேகங்களை கழுத்தில் அணிந்தபடியே காட்சியளிக்கும். வெயில் காலத்தில்கூட பனி படர்ந்திருக்கும். இந்தப் பகுதிக்கு புத்த மதத்தினர் வருவதற்கு முன்னரே, கி.மு. 375ல் மாவீரன் அலெக்ஸாண்டர் வந்ததை மலாலா பள்ளியில் படித்திருக்கிறாள். ஆயிரக்கணக்கான யானைகளுடனும், வீரர்களுடனும் அவன் அணிவகுத்திருக்கிறான். ஆப்கானிஸ்தானிலிருந்து சிந்து நதிக்கரை வரை அவன் படை நடத்தியிருக்கிறான். ஸ்வாத் சமவெளியில் வாழ்ந்த மக்கள் ஹிந்துகுஷ் மலைமீது ஏறித் தப்பினார்கள். மலை உயரமாக இருப்பதால் அலெக்ஸாண்டர் மலை மீது ஏறமாட்டான் என்று நினைத்தார்கள். அவனோ மிகப் பொறுமையாக தனது வெற்றியை மட்டுமே சிந்தித்தான். மிகத் தந்திரமாக அவன் மலையுச்சியை அடைந்தான் என்ற வரலாறை படித்த மலாலா அந்த மலையை வியப்புடன் ரசிப்பாள்.
அவள் வீட்டுக் கூரை அவளுக்கு ஸ்வாத் சமவெளி ஆண்டு முழுவதும் எத்தனை வகை மாற்றத்தைச் சந்திக்கிறது என்று அனுபவபூர்வமாக கற்றுக் கொடுத்தது. மலாலா வீடு இருந்த தெருவில் இருந்த இன்னொரு குடும்பத்தில் மலாலாவின் வயதுள்ள ஸஃபினா என்ற பெண் குழந்தையும், அவளுடைய தம்பிகளின் வயதுக்கு தகுந்த பாபர், பஸித் என்ற இரண்டு சிறுவர்களும் இருந்தார்கள். எல்லோரும் சேர்ந்து தெருவில் கிரிக்கெட் விளையாடுவார்கள். அந்தச் சமயத்தில் மலாலாவுக்குள் இப்படியா நினைவு ஓடும்…
“நானும் ஸஃபினாவும் இன்னும் சில ஆண்டுகள் மட்டுமே இப்படி விளையாட முடியும். பிறகு சமையல் செய்து சகோதரர்களுக்கும், பெற்றோருக்கும் பரிமாற வேண்டியதுதான். ஆண்கள் சுதந்திரமாக ஊரெங்கும் சுற்றி வருவார்கள். பெண் குழந்தைகளோ அம்மாவுடன் அடுப்பறையில் வீட்டு வேலைகளை செய்ய வேண்டும். நிச்சயமாக அந்தமாதிரி நான் இருக்கக்கூடாது”
மலாலா இப்படி சிந்திப்பாள். அவளுடைய சிந்தனைக்கு ஏற்றபடி ஜியாவுதீனும் இருந்தார். “மலாலா எப்போதும் ஒரு பறவையைப் போல சுதந்திரமாக பறக்க வேண்டும்” என்பார். அவருடைய இந்த ஆதரவு இருந்ததால், அலெக்ஸாண்டர் இளம் மலையை வெற்றிகொண்டதைப் போல தானும் சாதிக்க முடியும் என்ற கனவை வளர்த்தாள் மலாலா.