குடும்ப நல வழக்குகள் பலவற்றை கையாண்டது குறித்த அனுபவங்களை ‘வழக்கு எண்’ என்ற தொடரின் வழியே தொடர்ச்சியாக வழக்கறிஞர் சாந்தகுமாரி பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் ஒரு வழக்கைப் பற்றி இன்று பார்ப்போம்.
சுந்தரவள்ளி என்ற பெண்ணின் வழக்கு இது. கார்பரேஷனின் வேலை பார்த்து வந்த இந்த பெண், தான் காதலித்த பையனை கோயிலில் திருமணம் செய்துகொண்டு தாலியை மறைத்து அவள் வீட்டிலேயே இருந்தாள். சுந்தரவள்ளியின் அம்மா தாலியை பார்த்து என்னவென்று கேட்டபோது நடந்ததை அவள் கூற, முதலில் அடித்து துன்புறுத்தியிருக்கின்றனர். அதன் பிறகு அந்த பையனின் வீட்டிற்கு சென்ற அந்த பெண், அங்குள்ள பெரியவர்களை வைத்து பேசி இறுதியாக எல்லோருக்கும் தெரியும்படி இருவருக்கும் திருமணம் நடந்துள்ளது. சுந்தரவள்ளி நல்ல சம்பாத்தியத்துடன் இருக்க அவரது கணவர் எதோ ஒரு தொழிலை செய்துகொண்டு அவ்வப்போது வீட்டில் பணம் கொடுத்து வந்திருக்கிறார். இருவரும் சந்தோஷமாக வாழ்க்கையைத் தொடங்க ஆரம்பித்தனர். சுந்தரவள்ளி தனது முதல் குழந்தையை பெற்றெடுப்பதற்காகத் தனது அம்மா வீட்டிலிருந்து வேலைக்குச் சென்று வந்திருக்கிறாள். இதனிடையே அவளது கணவர் அவரது வீட்டில் வேலை செய்துகொண்டு வந்திருக்கிறார். ஒரு நாள் சுந்தரவள்ளியை பார்க்க வந்த சிலர், உன் கணவர் வேறோரு பெண்ணுடன் தொடர்பிலிருப்பதாகக் கூறியிருக்கின்றனர். இதைக் கேட்டு கோபமடைந்த சுந்தரவள்ளி கணவரின் வீட்டிற்குச் சென்று அவரை விசாரிக்க, அப்படியெல்லாம் ஒன்றுமில்லை என மறுப்பு தெரிவித்திருக்கிறார். பின்பு சில நாட்களாகவே இரவு தாமதமாகக் குடித்துவிட்டு தன் கணவர் வருவதை பார்த்த சுந்தரவள்ளி, தொடர்ந்து இதுபோல செய்தாள் என்னுடன் நீ இருக்க வேண்டாம் என்று கணவரிடம் கூறியிருக்கிறாள். இதையே காரணம் காட்டி முன்பு வந்ததைவிட வீட்டிற்கு மிகவும் தாமதமாக அவளது கணவர் வந்துள்ளார். ஆனாலும் சுந்தரவள்ளி, ஒரு பெண் குழந்தையைப் பெற்று கணவருடனான சின்ன சின்ன சண்டைகளுடன் தொடர்ந்து குடும்பம் நடத்தி இருக்கிறாள்.
அதைத்தொடர்ந்து, சுந்தரவள்ளியின் கணவர் வீட்டிற்கு வரும் கால தாமதம், வாரங்களாகவும் மாதங்களாகவும் மாறியது. தொடர்ந்து இதுபோல நடந்து வர ஒரு கட்டத்தில் சந்தேகப்பட்டு காவல் நிலையத்தில் சுந்தரவள்ளி புகார் கொடுத்திருக்கிறாள். இதையடுத்து அங்குள்ள காவல் ஆய்வாளர் நடந்ததை விசாரிக்க சுந்தரவள்ளி சொன்ன புகாருக்கெல்லாம் அவளது கணவர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் சுந்தரவள்ளியை அழைத்து சில அறிவுரைகளைக் கூறியிருக்கின்றனர். அதற்கு சுந்தரவள்ளி வேலை முடிந்து சீக்கிரம் வீட்டிற்கு வந்து குழந்தையை பார்த்துக்கொள்ள சொல்லுங்கள் என்று போலீசரிடம் கூற போலீசார் அவளது கணவரும் சில அறிவுரைகளைக் கூறி இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர். இதனால் சில நாட்கள் சரியான நேரத்தில் வீட்டிற்கு வந்துள்ளார். பிறகு மீண்டும் பழையபடி தாமதமாக வர, மீண்டும் அதே காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்க சுந்தரவள்ளி போயிருக்கிறாள். அங்குள்ள போலீசார் ஆம்பளைனா அப்படி இப்படி இருக்கத்தான் செய்வார்கள் ஒழுக்கமாக உன் கணவருடன் குடும்பம் நடத்து என்று திட்டி இருக்கின்றனர். இதையடுத்து சுந்தரவள்ளி நேரடியாக கமிஷனரிடன் சென்று போலீசார் சரிவர புகாரை விசாரிக்க மறுக்கிறார்கள் என்று புகார் கொடுத்திருக்கிறாள். கமிஷனரின் தலையீட்டால் சுந்தரவள்ளி புகார் கொடுத்த அதே காவல் நிலையத்தில் அவளது கணவனை அடித்து விசாரித்தபோது, சுந்தரவள்ளி மனம் கேட்காமல் இப்படியெல்லாம் என் கணவரை விசாரிக்க வேண்டாம் என கதற மீண்டும் இருவருக்கும் சமாதானம் கூறி போலீசார் அனுப்பி வைத்தனர்.
பல சந்தேகங்களுக்கும் சண்டைகளுக்கும் இடையில் சுந்தரவள்ளி தன் பெண் குழந்தைக்காக நகைகளைச் சேர்த்து தன் கணவருடன் சேர்ந்திருந்தாள். ஒரு நாள் சுந்தரவள்ளியின் கணவர் தொழிலில் முன்னேற்றம் இல்லை, அதனால் சேர்த்து வைத்த நகையைக் கொடுக்கச் சொல்லிக் கேட்டிருக்கிறான். ஆனால், அவள் நகையைத் தர மறுத்திருக்கிறாள். சில நாட்கள் கழித்து ஒரு கல்யாணத்திற்குச் செல்வதற்காக நகையைத் தேடி பார்த்த சுந்தரவள்ளி, நகை காணாமல் போனதால் தன் கணவரிடம் கேட்டிருக்கிறாள். அதற்கு அவர், தன் நண்பர் ஒருவருக்குத் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் பணம் கேட்டார் அதற்காக நகையை அடகு வைத்துவிட்டேன். அவர் பணத்தை திருப்பி கொடுத்ததும் மீட்டுவிடலாம் என்று கூறியிருக்கிறார். இனிமேல் கேட்காமல் இதுபோல் செய்ய வேண்டாம். விரைவில் நகையை மீட்டெடுங்கள் என்று அவள் சொல்லியிருக்கிறாள். ஆனால் பல மாதங்கள் கடந்த பிறகும் நகை வீட்டிற்கு வராததால் சந்தேகத்தில் மீண்டும் காவல்நிலையத்தில் புகார் சுந்தரவள்ளி கொடுத்திருக்கிறாள். போலீசார் அவளது கணவரை மிரட்டி விசாரணை செய்ததில், பிரேமா என்ற பெண்ணிடம் அவர் தொடர்பில் இருந்ததும், அந்த பெண்ணிடம் நகையைக் கொடுத்து வைத்திருந்ததும் தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து போலீசார், பிரேமா வீட்டிற்கு சென்று நகையை மீட்டு சுந்தரவள்ளியிடம் ஒப்படைத்தனர். ஆனால், தன் கணவருடன் சேர்ந்து வாழவேண்டும் என்பதற்காக சுந்தரவள்ளி கணவர் மீது வழக்கு தொடரவேண்டாம் என்று கூறியிருக்கிறாள். சில நாட்களுக்குப் பிறகு, மீண்டும் தொழில் முன்னேற்றத்திற்காக சுந்தரவள்ளியின் கணவர் அவளிடம் நகை கேட்டுள்ளார். தர முடியாது என்று சுந்தரவள்ளி மறுத்து தன் அம்மாவிடம் நகையைக் கொடுத்துவிடுகிறாள். பின்பு நகையைக்கூடத் தர வேண்டாம் உன்னிடம் இருக்கும் இடத்தை விற்றுக்கொடு என்று சுந்தரவள்ளியிடம் அவளது கணவர் கேட்க அதற்கும் மறுப்பு தெரிவித்திருக்கிறாள். இதனால் மிகவும் கோபமடைந்த அவளின் கணவர் விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதையடுத்து சுந்தரவள்ளி நடந்ததைக் கூறி அவருடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று என்னிடம் கூறினாள். அதற்கு நான் இவ்வளவு நடந்த பிறகும் அவருடன் ஏன் வாழ வேண்டும் என்று கேட்டபோது, காதலித்து திருமணம் செய்துகொண்டதால் தன் கணவருடன் வாழ வேண்டும் என்று உறுதியாக இருந்தாள். பின்பு நான் அவருடன் சேர்ந்து வாழ்வதற்காக பெட்டீசன் போட்டேன். அதன் பிறகு, இந்த வழக்கு நான்கு வருடங்களுக்கு மேல் நிலுவையிலிருந்தது. சில நேரங்களில் சுந்தரவள்ளியின் கணவர் வாய்தாவிற்கு வராமல் வழக்கை இழுத்தடித்தார். ஒரு நாள் நீதிமன்றத்தில் அவளின் கணவர், என்னுடைய சொத்தை வைத்துக்கொண்டுதான் மனைவி தன்னை ஏமாற்றுகிறாள். அதனால் என் குழந்தையைக் கொடுக்கச் சொல்லுங்கள் என்று நீதிபதியிடம் கூறினான். 5 வயதிற்குட்பட்ட குழந்தை தாயிடம் இருக்க வேண்டும் என்று சட்டம் இருப்பதால் மாதம் ரூ.4000 குழந்தையைப் பராமரிப்பதற்காக கொடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் அவருக்கு உத்தரவிட்டது. ஆனால், மாதத்திற்கு ரூ.2000 மட்டுமே அவரால் தர முடிந்தது. பின்பு நான் சுந்தரவள்ளி சம்பாத்தியத்தைக் கணக்கு காண்பித்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தேன். அப்போதுதான் அவளின் கணவர் சொன்னது எல்லாம் பொய் என்று நீதிபதிக்குத் தெரியவந்து. சுந்தரவள்ளிக்கு சாதகமாகத் தீர்ப்பு வந்தது. இதையடுத்து நீதிபதி, அவளின் கணவருக்கு சில அறிவுரைகளைக் கூறினார். சில நாட்கள் கழித்து சுந்தரவள்ளியை மார்கெட்டில் பார்த்தபோது, தன் கணவர் முன்பு குழந்தை அப்பா என்று சொல்லும்போது அவர் மனம் மாறிவிடும் என்ற நம்பிக்கையில் அவருடன் வாழ்ந்து வருகிறேன் மிகவும் நன்றி என்றாள்.