மக்கள் கவிஞரும், மாபெரும் புரட்சிகளில் அங்கம் வகித்தவருமான பாப்லோ நெருடாவின் பன்முகத்தன்மையை இதுவரை பார்த்தோம். அவருடைய கவிமுகம், புரட்சிமுகத்தைத் தாண்டி சோவியத் ரஷ்யா உள்ளிட்ட புரட்சிகர நாடுகளின் புரட்சிகர பத்திரிகைகளுக்காக ஏராளமான கட்டுரைகளை அவர் எழுதியிருக்கிறார். பத்திரிகையாளராக அந்தந்த காலகட்டத்தின் முக்கியமான நிகழ்வுகளை அவர் பதிவு செய்திருக்கும் அழகு இன்றைக்கும் பத்திரிகையாளர்களுக்கு பாடமாக அமையும். அத்தகைய கட்டுரைகளை அடுத்தடுத்த நாட்களில் பார்க்கலாம்…
நேற்று கியூபாவிலிருந்து ஹவானா பல்கலைக்கழக மாணவர்கள் என்னைப் பார்க்க வந்திருந்தார்கள். அவர்களிடம் எனது பழைய ஸ்டாலின்கிராடு கவிதையை வாசித்தேன். அந்த இளைஞர்களிடம் எனது கவிதை ஏற்படுத்திய பாதிப்பை நான் கண்டேன். அவர்கள் மத்தியில் ஒரு மின்சார அலை ஊடுருவியது. அவர்களுடைய உற்சாகம் என்னை வந்து தழுவிக்கொண்டது.
கியூபாதான் தங்களுடைய ஸ்டாலின்கிராடு என்று அவர்கள் உணர்ந்தார்கள். லத்தீன் அமெரிக்கா முழுவதையும் அபகரித்த கொடுங்கோன்மை சக்திகளையும், பேராசை, பிற்போக்கு சக்திகளையும் எதிர்த்து போர்புரிந்தது கியூபா.
மாபெரும் தேசபக்த போர் என்று வர்ணிக்கப்படும் இரண்டாம் உலகப் போரில், நாஜிகளை எதிர்த்து சோவியத் மக்கள் நடத்திய போரைப்போல, கியூபா மக்களும் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக சுயநலமற்ற போரை நடத்தினார்கள்.
இன்றைக்கும் அந்த உணர்வுதான் நிலவுகிறது. எனவேதான், அர்ப்பணிப்புமிக்க சோவியத் கதாநாயகர்கள் பற்றிய எனது பழைய கவிதை அந்த இளைஞர்களை உணர்ச்சிவயப்படுத்தியது.
நான் சில நாட்களுக்கு முன்தான் இங்கு வந்தேன். இங்கு நான் கண்ட எல்லாவற்றையும் பின்பற்றினேன். மற்ற லத்தீன் அமெரிக்க நாடுகளைக் காட்டிலும் கியூபா மிகவும் முன்னோக்கி இருக்கிறது.
கியூபாவில் புரட்சிகர சீர்திருத்தங்கள் உற்சாகமாக மேற்கொள்ளப்படுகின்றன. அனைத்து புரட்சிகர மாற்றங்களிலும் கியூபா மக்கள் பங்கெடுக்கிறார்கள். கியூபா முழுவதும் அளவற்ற மகிழ்ச்சியில் திளைக்கிறது.
கியூபா மக்கள் தங்களுடைய சர்வாதிகாரி பாடிஸ்டாவை தூக்கி எறிந்தபிறகுதான் தங்கள் வாழ்க்கை மிக நன்றாக இருப்பதை அறிவார்கள். அமெரிக்காவும், அதன் ராணுவ மையமான பெண்டகனும்தான் தங்களுடைய முக்கிய எதிரி என்பதையும் அவர்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள்.
தங்களுடைய நாட்டை பாதுகாப்பது மட்டுமே தங்களுடைய போராட்டம் என்றும், தங்களுடைய அன்றாட முயற்சிகளை பலனளிக்கும்படி செய்வதும் தங்களுடைய போராட்டத்தின் ஒரு பகுதிதான் என்பதை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள்.
வெல்லமுடியாத பிடல் காஸ்ட்ரோவுக்கு எதிராக மட்டும் தாங்கள் போரிடவில்லை என்பதும் கியூபாவின் நம்பிக்கை மிகுந்த மக்களுக்கு எதிராக போராட வேண்டியிருப்பதை ஏகாதிபத்திய அமெரிக்காவும் உணர்ந்திருக்கிறது.
கியூபாவை தனது பிடிக்குள் கொண்டு வருவதற்காக, கியூபாவின் வீரர்களையும், கவிஞர்களையும், தொழிலாளிகளையும், விவசாயிகளையும், பெண்களையும், குழந்தைகளையும் உணவுக்கு தவிக்கவைத்து நசுக்குகிறது வட அமெரிக்கா.
ஆனால், தனித்து விடப்பட்டிருந்த கியூபா இப்போது பல நாடுகளை நண்பர்களாகக் கொண்டிருக்கிறது. சோவியத் யூனியன் மீது அன்பையும் நேசத்தையும் செலுத்துகிறது. சோவியத் யூனியனின் சகோதரக் கரங்கள் கியூபாவின் ஹவானா துறைமுகத்தில் உணவையும், நட்பையும், அமைதியையும் கொண்டுவந்து இறக்கிக்கொண்டே இருக்கிறது.
கியூபா தனியல்ல,
கியூபா வெற்றிபெறும்,
கியூபா நமது விசுவாசம்!
லிட்டரேச்சர்நயா கெஸட்டா
ஜனவரி 1, 1961
முந்தைய பகுதி:
நோபல் விருதும் மர்மமான மரணமும்...! பத்திரிகையாளர் பாப்லோ நெருடா பகுதி # 4
அடுத்த பகுதி:
ஏகாதிபத்தியம் தோற்றோடும்...! பத்திரிகையாளர் பாப்லோ நெருடா பகுதி-6