இந்தியாவில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் கரோனா பரவல், இதுவரை இல்லாத அளவிற்குப் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. விரைவில் தொடங்க இருக்கும் ஐபிஎல் தொடரில், 10 போட்டிகள் மஹாராஷ்ட்ரா மாநிலம் மும்பையின் வான்கடே மைதானத்தில் நடக்கவுள்ளது. இந்த ஐபிஎல் தொடரில், சென்னை அணி தனது முதல் போட்டியில் டெல்லி அணியை வான்கடே மைதானத்தில்தான் சந்திக்கவுள்ளது.
ஏற்கனவே வான்கடே மைதான பராமரிப்பாளர்கள் எட்டு பேர், டெல்லி அணி வீரர் அக்ஸர் படேல் ஆகியோருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் மஹாராஷ்ட்ராவில் இரவு 8 மணிமுதல் காலை 7 மணிவரை இரவுநேர ஊரடங்கும், வார இறுதிநாட்களில் முழு ஊரடங்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. அவை இன்று (05.04.2021) முதல் அமலுக்கு வரவுள்ளன.
இதனால் வான்கடேவில் ஐபிஎல் போட்டிகள் நடக்குமா என சந்தேகம் எழுந்தது. இந்தநிலையில், வான்கடேவில் கிரிக்கெட் போட்டிகள் தொடர்ந்து நடைபெறும் என மும்பை கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அச்சங்கம், மும்பை மாநகராட்சி ஆணையர் தங்களிடம் தொலைபேசியில் பேசியதாகவும், ஊரடங்கு விதிமுறைகள் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என தெரிவித்ததாகவும் கூறியுள்ளது. இதன்மூலம் வான்கடேவில் ஐபிஎல் போட்டிகள் திட்டமிட்டபடி நடைபெறும் என தெரிகிறது.
டெல்லி அணி வீரர் அக்ஸர் படேல் மட்டுமின்றி, பெங்களூர் அணி வீரர் தேவ்தத் படிக்கலுக்கும் கரோனா உறுதியாகிவுள்ளது குறிப்பிடத்தக்கது.