எல்லா வீரர்களைப் போலவே இந்திய அணியில் களமிறங்க வேண்டும் என்ற ஆசை எனக்கும் இருக்கிறது என ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 316 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன், அந்த ஃபார்மேட்டில் உலக தரவரிசையில் ஐந்தாவது இடத்தில் இருக்கிறார். ஆனால், சென்றாண்டு ஜூன் மாதத்திற்கு பிறகு, அவர் இந்திய அணிக்கான ஒருநாள் போட்டிகளில் ஒன்றில்கூட இடம்பெறவில்லை. சரியாக ஒருவருடம் கடந்துவிட்ட நிலையில், இந்திய அணிக்கு திரும்புவது தொடர்பாக அஸ்வின் பேசுகையில், என் கிரிக்கெட்டை அணித்தேர்வாளர்கள் எப்படி உணர்கிறார்களோ, அதன்படியே அணியில் நான் தேர்வாவது இருக்கிறது என தெரிவித்துள்ளார்.
மேலும், ‘அணியில் தேர்வாவது என் கையில் இல்லை. மற்ற எந்த வீரரையும் போல, எனக்கும் நீல ஜெர்சியை அணிந்துகொண்டு, இந்தியாவுக்காக உலகக்கோப்பையில் களமிறங்க வேண்டும் என்ற ஆசையிருக்கிறது. எனக்குள் இன்னும் நிறையவே அந்த ஆசை இருக்கிறது. இப்போது உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் கிரிக்கெட்டை என்போக்கில் விளையாடவே விரும்புகிறேன். வாய்ப்பு கொடுக்கப்பட்டால் நிச்சயம் என்னால் முடிந்தளவுக்கு அதைத் தக்கவைத்துக்கொள்ள முயற்சி செய்வேன்’ எனவும் உருக்கமாக பேசியுள்ளார்.