மெக்சிகோவைச் சேர்ந்த ஒரு க்ளப் கால்பந்தாட்ட அணியின் பயிற்சியாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் டீகோ மரடோனா.
உலக கால்பந்து விளையாட்டின் ஜாம்பவான்கள் வரிசையில் முக்கியமானவர் டீகோ மரடோனா. அர்ஜெண்டினாவைச் சேர்ந்த இவர், 91 சர்வதேச போட்டிகளில் கலந்துகொண்டு 34 கோல்கள் அடித்துள்ளார். 1986-ஆம் ஆண்டில் அர்ஜெண்டினா அணி உலகக்கோப்பை வெல்வதற்கு மரடோனாதான் காரணமாக இருந்தார். அதன்பிறகு 2010-ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில், அர்ஜெண்டினா அணியை வழிநடத்தும் பொறுப்பில் இருந்தார். ஆனால், அந்தத் தொடரில் அர்ஜெண்டினா அணி காலியிறுதியிலேயே வெளியேறியது.
அதன்பிறகு, ஐக்கிய அமீரகத்தைச் சேர்ந்த அல்-ஃபுஜாரியா என்ற கால்பந்தாட்ட க்ளப் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டு, செயல்பட்டு வந்தார். கடந்த ஏப்ரல் மாதத்துடன் அந்த அணியுடனான ஒப்பந்தம் முடிந்துள்ள நிலையில், மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த க்ளப் அணியான தோரதாஸ் அணியின் பயிற்சியாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அந்த அணியின் தற்போதைய பயிற்சியாளர் ஃப்ரான்சிஸ்கோ கோமேஸ் அணியை வெற்றிக்கு வழிநடத்தவில்லை என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், புதிய பயிற்சியாளர் மரடோனா மீது எதிர்பார்ப்புகள் வலுத்துள்ளன.