இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி என்றாலே, உலக அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் நிலவுவது வழக்கம். இரண்டு நாடுகளுக்கு இடையிலான பிரச்சனைகள், அதன் ஊடான விவாதங்கள் என அனைத்தையும் முடிச்சுப் போட்டு, விளையாட்டைத் தாண்டியும் உணர்வு சார்ந்த விஷயமாகவே பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், சாம்பியன்ஸ் கோப்பைத் தொடருக்குப் பிறகு, இந்திய அணி ஆசியக் கோப்பை தொடரில்தான் மீண்டும் எதிர்கொண்டன. இந்தத் தொடரில் இரு அணிகளும் மோதிய இரண்டு போட்டிகளிலுமே வென்றது. இந்திய அணியில் சச்சின் தெண்டுல்கரின் ரசிகரான சுதிர் குமார், இந்தியா விளையாடும் எல்லா போட்டிகளிலும் கலந்துகொள்வார். சச்சின் அவருக்கான செலவுகளை ஏற்றுக்கொள்வார். ஆனால், தற்போது சச்சின் லண்டனில் இருப்பதால், இந்தமுறை நடக்கும் ஆசியக் கோப்பை தொடரைக் காணமுடியாதோ என்ற ஏக்கத்தில் இருந்தார் சுதிர்.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சுதிருக்கு, திடீரென அழைப்பு வந்தது. பாகிஸ்தானில் இருந்து அழைத்திருந்த அவரது நண்பர் முகமது பஷீர் ஆசிய கோப்பை தொடரைக் காண வரவில்லையா என்று கேட்டிருக்கிறார். சுதீர் நிலைமை விளக்க, அவரது முழுச் செலவையும் தாமே ஏற்றுக்கொள்வதாக பஷீர் தெரிவித்திருக்கிறார். தற்போது இருவரும் ஒரே அறையில் தங்கியிருந்து முழு தொடரையும் கண்டுகளித்து வருகின்றனர்.
என்னதான் நண்பர்களாக இருந்தாலும், போட்டி தொடங்கிவிட்டால் அவரவர் சொந்த நாடுகளுக்கு ஆதரவளிப்பதும், போட்டி முடிந்த பின்னர் மீண்டும் நட்பு பாராட்டிக் கொள்வதுமாக இவர்கள் பழகிவருகிறார்கள். என்னதான் இரு நாடுகளையும் ஏராளமான காரணங்களைச் சொல்லி பிரித்திருந்தாலும், கிரிக்கெட் அந்த எல்லையைச் சுருக்கி எங்களை நண்பர்களாக்கி இருக்கிறது என்கிறார் பஷீர். 2011-ம் ஆண்டு உலகக்கோப்பையின் போது இந்த இருவரும் சந்தித்து நண்பர்களாகி உள்ளனர். அந்த நட்பு இன்றும் தொடர கிரிக்கெட் காரணமாகி உள்ளது.