Skip to main content

அனுபவம் விலைக்கு வாங்க முடியாதது! - ஆப்கானிஸ்தான் வீரர்களுக்கு தினேஷ் கார்த்திக் அறிவுரை

Published on 13/06/2018 | Edited on 13/06/2018

அனுபவம் விலைக்கு வாங்க முடியாதது என்பதை சி.எஸ்.கே. அணியைப் பார்த்து ஆப்கானிஸ்தான் வீரர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என இந்திய அணியின் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். 
 

Dinesh

 

 

 

டெஸ்ட் கிரிக்கெட் அந்தஸ்தைப் பெற்றதும் ஆப்கானிஸ்தான் தனது முதல் டெஸ்ட் போட்டியை இந்திய அணியுடன் விளையாடுகிறது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த போட்டி நாளை பெங்களூருவில் வைத்து நடைபெறுகிறது. இந்நிலையில், தங்கள் அணியின் சுழற்பந்து வீச்சாளர்களான ரஷித் கான், முஜீப் உர் ரஹமான் மற்றும் முகம்மது நபி ஆகியோர் இந்திய அணிக்கு மிகுந்த சவாலாக இருப்பார்கள் என அந்த அணியின் கேப்டன் தெரிவித்துள்ளார். 
 

இதுகுறித்து பேசிய இந்திய அணியின் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக், ‘அன்றாடம் கஷ்டங்களால் நிறைந்த வாழ்க்கை வாழும் ஆப்கானிஸ்தான் மக்கள் கிரிக்கெட் விளையாடி, சர்வதேச போட்டிகளில் கலந்துகொள்கிறார்கள் என்பதே பெருமைப்பட வேண்டிய விஷயம். அவர்கள் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ஆப்கானிஸ்தான் அணி சிறப்பாக விளையாடி வெற்றிபெற்றிருக்கலாம். ஆனால், டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணியின் வீரர்கள் அனுபவம் மிகுந்தவர்கள். ஆப்கானிஸ்தான் வீரர்கள் அனைவரது போட்டிகளையும் கூட்டி, இந்திய வீரர் குல்தீப் யாதவ்வுடன் ஒப்பிட்டால், அவரை விட சில போட்டிகள்தான் அதிகம் விளையாடி இருப்பார்கள். குல்தீப்பின் அனுபவமே அபரிமிதமானதாக இருக்கும்’ என தெரிவித்தார்.
 

csk

 

 

 

மேலும் பேசிய அவர், ‘அனுபவத்தின் விலை மகத்தானது. அதை விலைக்கு வாங்கமுடியாது. அதைக் கற்றுக்கொள்ள சி.எஸ்.கே. அணியைப் பாருங்கள். 30 வயதுக்கு மேற்பட்ட வீரர்களாக இருப்பதாக கிண்டலடிக்கப்பட்ட அந்த அணிதான், ஐ.பி.எல். சீசனில் வெற்றிக்கோப்பையைத் தட்டிச்சென்றது. அதேயளவுக்கு அனுபவம் மிகுந்ததுதான் இந்திய அணி’ என கூறியுள்ளார்.