Skip to main content

"வீரர்களின் உடல்மொழி சரியாக இல்லை..." -விராட் கோலி

Published on 28/11/2020 | Edited on 28/11/2020

 

virat kohli

 

 

25 ஓவருக்குப் பின் ஃபீல்டிங் செய்கையில் வீரர்களின் உடல்மொழி சரியாக இல்லை என இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

 

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள், 3 இருபது, 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடரின் முதல் போட்டி நேற்று நடைபெற்றது. இப்போட்டியில், ஆஸ்திரேலிய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனையடுத்து, மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 0-1 என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது.

 

நேற்றைய போட்டியில் இந்திய அணியின் ஃபீல்டிங் படுசொதப்பலாக அமைந்தது. ஸ்டீவ் ஸ்மித் மற்றும் ஆரோன் பின்ச் விக்கெட்டுகளை வீழ்த்தும் வாய்ப்பை இந்திய அணி வீரர்கள் கோட்டைவிட, நிலைத்து நின்று விளையாடிய இரு வீரர்களும் சதமடித்தனர். இந்திய வீரர்கள் நழுவவிட்ட இவ்விரு வாய்ப்புகளும், இந்திய அணியின் தோல்வியில் முக்கிய பங்குவகித்தது.

 

இந்நிலையில், போட்டிக்குப் பின் விராட் கோலி பேசுகையில், "தொடருக்காக தயாராக போதுமான நேரம் இருந்தது. தோல்விக்கு எந்தக் காரணமும் கூறமுடியாது என்று நினைக்கிறேன். நீண்ட நாளுக்குப் பின் ஒருநாள் போட்டியில் விளையாடுகிறோம். முன்னர் விளையாடிய 20 ஓவர் போட்டிகளின் தாக்கம் சிறிது இருந்தது. 25 ஓவருக்குப் பின் ஃபீல்டிங் செய்கையில் வீரர்களின் உடல்மொழி சரியாக இல்லை. சிறந்த பேட்ஸ்மேனுக்கு எதிராக கிடைக்கும் வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தவில்லை என்றால் அதற்கான பலனை அனுபவிக்க வேண்டிவரும்" எனக் கூறினார்.