13 -ஆவது ஐ.பி.எல் தொடர் வரும் 19 -ஆம் தேதி அமீரகத்தில் தொடங்க இருக்கிறது. முதல் போட்டியில் சென்னை அணி மும்பை அணியுடன் மோதுகிறது. சர்வதேச போட்டிகளில் இருந்து தோனி தன்னுடைய ஓய்வினை அறிவித்த பிறகு, அவர் முதலில் களம் காண இருக்கும் போட்டி என்பதால் அப்போட்டி குறித்தான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கடும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெறும் இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமான வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும், ஐ.பி.எல் வர்ணனையாளருமான கவாஸ்கர் இப்போட்டி குறித்து கருத்துத் தெரிவித்துள்ளார்.
அதில், "இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள திறமையாளர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்த ஐ.பி.எல் சரியான தளமாக உள்ளது. இந்தாண்டும் அதே போல இருக்கும் என்று நம்புகிறேன். சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதும் முதல் போட்டி குறித்தான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. தோனியின் அதிரடியைக் களத்தில் காண அனைவரும் ஆர்வமாக உள்ளனர். உலகின் அதிரடியான மற்றும் பரபரப்பான ஒரு தொடரில் வர்ணனையாளராகப் பணியாற்றுவது வித்தியாசமான அனுபவமாக இருக்கப்போகிறது. ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்களுடன் உற்சாகக் கொண்டாட்டத்தில் இணைவதை எதிர்நோக்கி இருக்கிறேன்" என்றார்.