ஆஸ்திரேலியாவில் முகாமிட்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள், 3 இருபது ஓவர், 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி வரும் 27-ம் தேதி சிட்னியில் தொடங்குகிறது. கடந்த சுற்றுப்பயணத்தில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரைக் கைப்பற்றி விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வரலாற்று சாதனை படைத்தது. இதனால் எதிர்வரவிருக்கும் தொடர் குறித்து மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இரு அணிகளிலும் சம பலத்துடன் வீரர்கள் நிறைந்திருப்பதால், இத்தொடரில் விறுவிறுப்பிற்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த சுற்றுப்பயணத்தில் இந்திய அணியின் கேப்டனான விராட் கோலிக்கும், ஆஸ்திரேலிய கேப்டனான டிம் பெயினிற்கும் இடையே தொடர் மோதல்கள் வெடித்தன. இந்நிலையில், டிம் பெயின், விராட் கோலியுடனான மோதல் குறித்தும், எதிர்வரவிற்கும் தொடர் குறித்தும் கருத்துத் தெரிவித்துள்ளார்.
அதில் அவர், "விராட் கோலியை நாங்கள் வெறுக்க விரும்புகிறோம். அதே நேரத்தில் ஒரு கிரிக்கெட் ரசிகராக அவர் பேட்டிங் செய்வதைப் பார்க்க விரும்புகிறோம். ஆனால், அவர் கூடுதலான ரன்கள் சேர்ப்பதை நாங்கள் விரும்பவில்லை. இந்தியா, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான தொடர் என்பது அனல் பறக்கக்கூடியது. விராட் கோலி எங்களுக்கு போட்டியான வீரர். கடந்த முறை எனக்கும் அவருக்கும் இடையே வார்த்தை மோதல்கள் இருந்தன. நானும், அவரும் கேப்டன் என்பதால் இது நடக்கவில்லை. அந்த நேரத்தில் யார் களத்தில் இருந்தாலும் இது நடந்திருக்கும். உலகின் சிறந்த வீரர் களத்தில் நிற்கும் போது போட்டியின் தீவிரமே மாறிவிடும். வரவிருக்கும் தொடர் மிகப்பெரியது. மிக ஆவலுடன் இதை எதிர்நோக்கியுள்ளேன். கடந்த முறை அவர்கள் எங்களை வீழ்த்தியுள்ளார்கள். சிறந்த அணியுடன் மோதி தங்களை சோதித்துக்கொள்ளவே, தனி நபராகவும், ஒரு அணியாகவும் விரும்புவோம். அதைத்தான் நாங்கள் செய்கிறோம்" எனக் கூறினார்.