இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் ரோஹித் சர்மா தலைமையிலான அணி டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் வென்று கொடுத்துவிட்டு டி20 உலகக்கோப்பையில் பங்கேற்க ஆஸ்திரேலியா சென்றுவிட்டது.
ஒரு நாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் பங்கேற்க ஷிகர் தவான் தலைமையிலான இளம் அணி தேர்வு செய்யப்பட்டது. முதல் இரு ஒருநாள் போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒன்றில் வெற்றி பெற்று சம நிலையில் உள்ளன. இன்று நடைபெறும் மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் வெல்லும் அணி இரு வெற்றிகளுடன் கோப்பையை கைப்பற்றும்.
ஷிகர் தலைமையிலான இந்திய அணியில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்து வருகின்றனர். மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் ஆட்டத்தால் மட்டுமே இரண்டாவது ஒரு நாள் போட்டியில் வெற்றி சாத்தியமாயிற்று. சஞ்சு சாம்சன் மற்றும் ஸ்ரேயாஷ் ஐயர் நல்ல ஃபார்மில் உள்ளனர். கடந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய இஷான் கிஷன் தனது ஆட்டத்தை இன்றும் வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணியில் பந்துவீச்சாளர்களை பொறுத்த வரையில் சிராஜ், ஷர்துல் தாக்கூர் மற்றும் குல்தீப் யாதவ் ஆறுதல் அளிக்கின்றனர்.
தென் ஆப்பிரிக்க அணியில் ஒருவர் எதிர்பாராமல் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினாலும் அடுத்து வரும் பேட்ஸ்மேன்கள் தங்களது பொறுப்பினை உணர்ந்து நிதானமாக ஆடி ரன்களை சேர்க்கின்றனர். இது அந்த அணிக்கு பெரும் பலம். டாப் ஆர்டர் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஃபார்மில் இருப்பது அந்த அணிக்கு பெரிதும் உதவுகிறது. பந்து வீச்சிலும் நல்ல நிலையிலேயே உள்ளனர்.
கடந்த போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி இன்னும் மெனக்கெட்டு தடுப்பாட்டத்தில் ஈடுபட்டு இருந்தால் ஒரு வேளை வெற்றி பெற்று இருக்கும் என சொல்லப்பட்டது. ஆனால் இந்த கூற்று 10 ஆண்டுகளுக்கு முந்தைய கிரிக்கெட் போட்டிகளில் மட்டுமே எடுபடும். ஏனெனில் இப்பொழுது ஆடும் பேட்ஸ்மேன்கள் தேவைப்படும் பொழுதெல்லாம் பந்தை எல்லைக்கோட்டிற்கு வெளியே அனுப்பும் திறன் பெற்றுள்ளனர். எனவே இரு அணிகளும் பந்து வீச்சில் கவனம் செலுத்தினால் அன்றி எதிரணியின் ரன்களை கட்டுப்படுத்த முடியாது.