இந்திய கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்படும் ஐபிஎல் தொடர், உலகம் முழுவதுமுள்ள கிரிக்கெட் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்தநிலையில் விவோ நிறுவனம், 2018 முதல் 2022 ஆம் ஆண்டு வரையிலுமான ஐபிஎல் தொடரின் டைட்டில் ஸ்பான்சருக்கான உரிமையை 2200 கோடிக்கு வாங்கியது. அதனைத்தொடர்ந்து ஐபிஎல் தொடரின் டைட்டில் ஸ்பான்சராக விவோ இருந்து வந்த நிலையில், இந்திய - சீன வீரர்களுக்கிடையே எல்லையில் நடந்த மோதல் காரணமாக, 2020 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் விவோவுக்கு பதிலாக ட்ரீம் 11 ஐபிஎல் தொடருக்கு டைட்டில் ஸ்பான்சராக இருந்தது.
இதன்பின்னர் கடந்த வருடம் ஐபிஎல் தொடருக்கு விவோ மீண்டும் டைட்டில் ஸ்பான்சர் செய்தது. இந்தநிலையில் விவோ நிறுவனம், தனது டைட்டில் ஸ்பான்சர் உரிமை வேறு நிறுவனத்திற்கு வழங்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்தநிலையில் விவோ நிறுவனம் ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சர்ஷிப்பில் இருந்து விலகியுள்ளது.
இதனையடுத்து டாடா குழுமம், ஐபிஎல் தொடருக்கு டைட்டில் ஸ்பான்சர் செய்யவுள்ளது. இன்று நடைபெற்ற பிசிசிஐயின் ஆட்சி குழு கூட்டத்திற்கு பிறகு ஐபிஎல் சேர்மன் பிரிஜேஷ் படேல் இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். டாடா குழுமம் 2023 ஆம் ஆண்டு வரை டைட்டில் ஸ்பான்சராக இருக்கவுள்ளது. எனவே அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு ஐபிஎல் தொடர் டாடா ஐபிஎல் என அழைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.