பந்தை சேதப்படுத்திய குற்றத்திற்காக தண்டனை பெற்ற வீரர்களை கிரிமினல்களைப் போல நடத்துவதா என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மேக்ஸ்வெல் கேள்வியெழுப்பியுள்ளார்.
தென் ஆப்பிரிக்காவுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், பந்தை சேதப்படுத்திய குற்றத்திற்காக ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்டீவன் ஸ்மித், டேவிட் வார்னர் மற்றும் கேமரூன் பான்கிராஃப்ட் ஆகியோருக்கு கடுமையான தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மீதமிருந்த ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட அவர்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், ஆஸ்திரேலியாவின் க்ளென் மேக்ஸ்வெல், மாட் ரென்சாவ் மற்றும் ஜோ பர்ன்ஸ் ஆகியோர் தென் ஆப்பிரிக்கா சென்றனர். இருந்தபோதிலும், அந்தப் போட்டியில் ஆஸ்திரேலியாவை 492 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.
இந்நிலையில், பந்தை சேதப்படுத்திய வீரர்களை நடத்திய விதம் மிகவும் மோசமானது என க்ளென் மேக்ஸ்வெல் சமீபத்தில் பேசியுள்ளார். மெல்பர்ன் நகரின் ரேடியோ சென்னிற்கு அவர் அளித்த பேட்டியில், ‘அவர்கள் கிரிமினல்களைப் போல நடத்தப்பட்டார்கள். சொந்த அணியைச் சேர்ந்த ஒருவர் அப்படி நடத்தப்படுவதை, சகவீரர்கள் ஒருபோதும் விரும்பமாட்டார்கள். ஸ்டீவன் ஸ்மித்தை விமானநிலையத்தில் அவர்கள் நடத்தியதைப் பார்த்துவிட்டு, அடுத்த போட்டிக்காக பொலிவுடன் தயாராகும் மனவலிமை சக வீரர்களுக்கு இல்லை என்பதை நான் உணர்ந்தேன்’ என உருக்கமாக பேசினார்.
மேலும், ‘களத்தில் என்னால் முடிந்தவற்றை செய்து, பழைய சுறுசுறுப்பை மீட்டுக் கொண்டுவந்து விடமுடியும் என்ற நினைத்ததிருந்தேன். ஆனால், அது துரதிஷ்டவசமாக முடியாமல் போனது’ எனவும் அவர் தெரிவித்துள்ளார்.