அ.ம.மு.க.வின் டி.டி.வி.தினகரன், வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு வேட்பாளரை தன்னிச்சையாக அறிவித்திருப்பது பா.ஜ.க. கூட்டணியில் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது.
2026 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்து 25 எம்.எல்.ஏ.க்களையாவது பெறவேண்டுமென்ற பெரிய கால்குலேஷனோடு அ.தி.மு.க.வை மிரட்டி கூட்டணியில் சேர்ந்திருக்கிறது பா.ஜ.க. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நாங்களும் இருக்கிறோமென்று அ.ம.மு.க. கூறியுள்ளது. இந்நிலையில், மே 1ஆம் தேதி அ.ம.மு.க.வின் மே தினப் பொதுக்கூட்டம், ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரில் நடைபெற்றது. இந்த கூட்டத்தினை அ.ம.மு.க. மா.செ.வும், சோளிங்கர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பார்த்திபன் ஏற்பாடு செய்திருந்தார். இரண்டாயிரம் பேர் கலந்துகொண்டிருந்த கூட்டத்தில் உரையாற்றிய டி.டி.வி.தினகரன், "நமது சோளிங்கர் தொகுதியில் பார்த்திபன் போட்டியிடுவார், அவரை நீங்கள் வெற்றிபெற வைக்க வேண்டும்'' என வேண்டுகோள் வைத்துப் பேசினார். இது அ.ம.மு.க.வை தாண்டி அனைத்து அரசியல் கட்சிகளிலும் பரபரப்பை உருவாக்கியுள்ளன.
இதுகுறித்து அ.ம.மு.க. நிர்வாகிகள் சிலரிடம் பேசிய போது, "அ.ம.மு.க. என்கிற கட்சியை தினகரன் தொடங் கியபோது 18 எம்.எல்.ஏ.க்கள் இவர் பின்னால் அணிவகுத் தார்கள். அவர்கள் அனைவரும் இ.பி.எஸ். அரசால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்கள். சிலர் மீண்டும் அ.தி.மு.க.வுக்கும், தி.மு.க.வுக்கு மாக சென்றார்கள். எம்.எல்.ஏ. பதவியை இழந்த பார்த்திபன் மட்டும் அணி மாறவில்லை. அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜிகூட பார்த்திபனிடம் "தி.மு.க.வுக்கு வந்து விடுங்கள், நல்ல எதிர்காலம் இருக்கும் உங்களுக்கு' என அழைத்தபோது மறுத்துவிட்டார். சின்னம்மா மீதிருந்த விசுவாசம், தினகரன் மீதுள்ள நம்பிக்கையில் அவர் பின்னால் நிற்கிறார். அ.ம.மு.க.வின் ராணிப்பேட்டை மா.செ, மண்டல செயலாளர், தேர்தல் பிரிவு மாநில செய லாளராக்கினார் தினகரன். தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் உள்ளன. அப்படியிருக்க, திட்டமிட்டு அப்படி சொன்னாரா அல்லது கூட்டத்தை பார்த்ததும் மகிழ்ச்சியாகி அறிவித்தாரா எனத்தெரியவில்லை" என்கிறார்கள்.
மா.செ. பார்த்திபன் என்ன நினைக்கிறாரென்று அவரது தரப்பில் விசாரித்தபோது, "2021 தேர்தலில் சோளிங்கர் தொகுதியில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு 13 ஆயிரம் வாக்குகள் மட்டுமே கிடைத்தது. இப்போது இரட்டைஇலை சின்னத்தில் நிற்பதாக இருந்தால் நிற்பார், குக்கர் சின்னம் என்றால் கரையேறுவது சிரமம் என்பதால் யோசிப்பார்'' என்கிறார்கள்.
2026 சட்டமன்றத் தேர்தலில், கூட்டணிக் கட்சிகளின் தொகுதி விவரங்களை முடிவுசெய்யும் இடத்தில் அ.தி.மு.க.வே உள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் அரக்கோணம் தொகுதியில் நின்று தோல்வியை சந்தித்த விஜயனை சோளிங்கரில் நிறுத்த எடப்பாடி ஆலோசித்து வருவதாகக் கூறப்படு கிறது. தினகரனால் பா.ம.க. தலைமை யும் கடுப்பாகியுள்ளது. 2016 சட்ட மன்றத் தேர்தலில் அங்கு தனித்தே 55 ஆயிரம் வாக்குகளை வாங்கியுள்ளோம். அப்படியிருக்க அவர் எப்படி வேட்பாளரை அறிவிக்கலாம் என்று கேட்கிறார்கள்.
-கிங்