16 ஆவது ஐபிஎல் சீசனின் 49 ஆவது லீக் போட்டி சென்னையில் நடைபெற்றது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்களை இழந்து 139 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக நெஹால் வதேரா 64 ரன்களை எடுத்தார். சிறப்பாக பந்து வீசிய சென்னை அணியில் பதிரானா 3 விக்கெட்களையும் சாஹர், தேஷ்பாண்டே தலா 2 விக்கெட்களை எடுத்தனர். ஜடேஜா 1 விக்கெட்டையும் வீழ்த்தினார்.
140 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய சென்னை அணி 17.4 ஓவர்களில் வெற்றி பெற்றது. கான்வே 44 ரன்களையும் ருதுராஜ் 30 ரன்களையும் துபே 26 ரன்களையும் எடுத்திருந்தனர். சாவ்லா 2 விக்கெட்களையும் ஸ்டப்ஸ் மற்றும் ஆகாஷ் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். ஆட்ட நாயகனாக பதிரானா தேர்வு செய்யப்பட்டார்.
இன்றைய போட்டியில் ரோஹித் சர்மா ரன்கள் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆகி வெளியேறினார். இதன் மூலம் ஐபிஎல் போட்டிகளில் அதிக முறை டக் அவுட் ஆன பேட்டர் என்ற மோசமான சாதனையை ரோஹித் சர்மா படைத்தார். அவர் 16 முறை ரன்கள் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்துள்ளார். தொடர்ந்து சுனில் நரேன், மந்தீப் சிங், தினேஷ் கார்த்திக் தலா 15 முறை ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்துள்ளனர்.
நடப்பு ஐபிஎல் சீசனில் பதிரானா டெத் ஓவர்களில் 16.2 ஓவர்களை வீசியுள்ளார். அதில் 123 ரன்களை மட்டுமே கொடுத்து 10 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். அதில் 45 டாட் பந்துகளும் அடங்கும். நடப்பு தொடரில் டெத் ஓவர்களில் அதிக விக்கெட்களை வீழ்த்தியவர்கள் பட்டியலில் பதிரானா மற்றும் துஷார் தேஷ்பாண்டே தலா 10 விக்கெட்களுடன் முதலிடத்தில் உள்ளனர். ஹர்ஷல் படேல் 9 விக்கெட்களுடன் இரண்டாம் இடத்திலும் அர்ஷ்தீப் சிங் 8 விக்கெட்களுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.
இதுவரை சென்னை அணி மொத்தமாக மும்பையுடன் 36 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளது. அதில் 20 முறை மும்பை அணியும் 16 முறை சென்னை அணியும் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் கடைசி 5 போட்டிகளில் சென்னை 4ல் வெற்றியும் மும்பை ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.