Skip to main content

20 ஓவர் உலகக் கோப்பை இந்தியாவிலிருந்து மாற்றமா? - பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா விளக்கம்!

Published on 26/06/2021 | Edited on 26/06/2021

 

jay shah

 

2021ஆம் ஆண்டிற்கான இருபது ஓவர் உலகக்கோப்பை இந்தியாவில் நடைபெற இருந்த நிலையில், கரோனா பரவல் காரணமாக அதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த ஆண்டிற்கான இருபது ஓவர் உலகக் கோப்பையை இந்தியாவில் நடத்துவது குறித்து முடிவெடுக்க சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் கூட்டம் இம்மாத தொடக்கத்தில் நடைபெற்றது.

 

இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் கங்குலி, 20 ஓவர் உலகக்கோப்பை தொடரை இந்தியாவிலேயே நடத்த முடியுமா என்பதைத் தெரிவிக்கக் கால அவகாசம் கோரினார். இதனைத் தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், 20 ஓவர் உலகக்கோப்பையை இந்தியாவிலேயே நடத்த முடியுமா என்பது குறித்து முடிவெடுக்க இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு இம்மாதம் 28ஆம் தேதிவரை அவகாசம் வழங்கியது.

 

இதற்கிடையே நேற்று (25.06.2021), 2021 இருபது ஓவர் உலகக்கோப்பை இந்தியாவிலிருந்து, ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்படவுள்ளதாகவும், அக்டோபர் 17ஆம் தேதி தொடங்கி, நவம்பர் 14ஆம் தேதிவரை நடைபெறவுள்ளதாகவும் தகவல் வெளியானது.

 

இந்தநிலையில், 20 ஓவர் உலகக்கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்படவுள்ளதா என்பது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியச் செயலாளர் ஜெய் ஷா விளக்கமளித்துள்ளார். இதுதொடர்பாக அவர், "நாட்டில் நிலவும் கரோனா நிலை காரணமாக, இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்ட இருபது ஓவர் உலகக்கோப்பையை, நாம் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றலாம். நாங்கள் நிலைமையை உன்னிப்பாக கண்காணித்துவருகிறோம். வீரர்களின் ஆரோக்கியமும் பாதுகாப்பும் எங்களுக்கு மிக முக்கியமானவை. நாங்கள் விரைவில் இறுதி அழைப்பை எடுப்போம்" என கூறியுள்ளார்.