ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பேட்மிட்டன் விளையாட்டில் முதல்முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார் பிவி சிந்து.
அவரது வெற்றிக்கு தொடர்ந்து உறுதுணையாக இருந்துவரும் பயிற்சியாளர் புல்லேலா கோபிசந்த், பிவி சிந்து இந்தமுறை தங்கம் வெல்ல வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். பிவி சிந்து சமீபகாலமாக தொடர்ந்து இறுதிப் போட்டி வரை சென்று வெள்ளிப்பதக்கத்தோடு திரும்பி வரும் நிலையில், கோபிசந்தின் இந்த வேண்டுகோள் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து பேசியுள்ள கோபிசந்த், “சிந்து நேர்த்தியாக விளையாடி இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றுள்ளார். இறுதிப் போட்டி நமக்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன். சிந்துவிடம் தங்கம் வெல்வதற்கான வேகமும், முறையான பயிற்சியின் உடனான பலம் இருக்கிறது. எனவே, இந்தமுறை அவர் வெள்ளிக்கு பதிலாக தங்கம் வெல்ல வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
அதேபோல், வெண்கலப் பதக்கம் வென்ற சாய்னா நேவாலையும் அவர் பாராட்டியுள்ளார். தற்போது சிந்து மற்றும் தாய்வானி டை ஜூ யின் இடையிலான இறுதிப்போட்டி நடைபெற்று வருகிறது. முதல் செட்டில் டை ஜூ வெற்றி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.