Skip to main content

ஆட்டநாயகன் விருது அம்பயருக்கு கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் -சேவாக் காட்டம்!

Published on 21/09/2020 | Edited on 21/09/2020

 

Sehwag

 

டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகள் மோதிய போட்டியில், களத்தில் இருந்த நடுவரின் செயல்பாடு குறித்து இந்திய அணியின் மூத்த வீரர் சேவாக் அதிருப்தி தெரிவித்துள்ளார். 

 

ஐ.பி.எல் போட்டியின் இரண்டாம் நாளான நேற்று, டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகள் துபாய் சர்வதேச மைதானத்தில் மோதின. கடைசி பந்து வரை பரபரப்புடன் நடந்த இப்போட்டியில், 20 ஓவர் முடிவில் இரு அணிகளும் சமநிலை வகித்தன. வெற்றியைத் தீர்மானிக்க நடைபெற்ற சூப்பர் ஓவரில் டெல்லி அணி அபாரமாக வெற்றி பெற்றது.

 

இப்போட்டியில், இரண்டாவது நடுவராக நிதின் மேனன் செயல்பட்டார். அவர் அளித்த ஒரு தவறான முடிவு பஞ்சாப் அணியின் வெற்றி வாய்ப்பையே பறித்துள்ளது. ஆட்டத்தின் 19 -ஆவது ஓவரில் டெல்லி அணி வீரர் ரபடா வீசிய பந்தை அடித்துவிட்டு, பஞ்சாப் அணி வீரர் கிறிஸ் ஜோர்டன் இரண்டு ரன்கள் எடுக்க முயற்சித்தார். அப்போது களத்தில் இருந்த நடுவர் நிதின் மேனன், முதல் ரன்னை முழுமையாக முடிக்கவில்லை என்று கூறி ரன்கள் வழங்க மறுத்தார். பின்பு டீவி ரீஃபிளேயில் பார்க்கும் போது, முறைப்படி கிரிக்கெட் விதிகளுக்கு உட்பட்டு தான் இரண்டாம் ரன்னிற்கு கிறிஸ் ஜோர்டன் முயற்சித்தது தெரியவந்தது. நடுவரின் இந்த முடிவால் பஞ்சாப் அணி ரசிகர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

 

இது குறித்து தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் கருத்துத் தெரிவித்துள்ள சேவாக், "ஆட்ட நாயகன் விருது தேர்வில் எனக்கு உடன்பாடில்லை. முறைப்படி அது நடுவருக்குத்தான் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்" எனப் பதிவிட்டுள்ளார்.. 

 

Ad

 

மேலும் பஞ்சாப் அணியின் உரிமையாளரான பிரீத்தி ஜிந்தா, சேவாக்கின் இப்பதிவை மேற்கோள் காட்டி, "நோய்த்தொற்று அச்சுறுத்தல் நிறைந்த இச்சூழலிலும் மிக ஆர்வமாகக் கிளம்பி வந்தேன். 6 நாட்கள் தனிமை, 5 முறை கரோனா பரிசோதனை எல்லாவற்றையும் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டேன். நடுவரின் இந்த முடிவு அதிருப்தி அளிக்கிறது. இது போன்ற நேரங்களில் உதவாத தொழில்நுட்பம் எதற்கு?. இது வருடாவருடம் தொடரக்கூடாது. பி.சி.சி.ஐ இது குறித்து புது விதியை அமல்படுத்த வேண்டும்" எனப் பதிவிட்டுள்ளார்.