உலகக்கோப்பை போட்டியில் இந்தியாவிடம் தோற்றவுடன் மன அழுத்தத்தின் காரணமாக தற்கொலை செய்து கொள்ளலாம் எனத் தோன்றியதாக பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் தெரிவித்துள்ளார்.
உலகக்கோப்பை தொடரில் கடந்த 16-ம் தேதி ஓல்ட்டிரா போர்டு மைதானத்தில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டக்வொர்த் லூயிஸ் விதிப்படி பாகிஸ்தானை 89 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது. இதன் மூலம் உலகக்கோப்பை போட்டியில் தொடர்ந்து 7-வது முறையாக பாகிஸ்தானை வென்று இந்திய அணி பெருமையை தக்கவைத்துக் கொண்டது.
இந்த சூழலில் பாகிஸ்தான் பயிற்சியாளர் மிக்கி ஆர்த்தர் நேற்று ஊடகங்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், "உலகக்கோப்பை போட்டியில் இந்தியாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் தோற்றபோது எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. எனக்கு அந்த அளவுக்கு அழுத்தங்கள் வந்தன. ஒரு கட்டத்தில் தற்கொலை செய்துகொள்ளலாம் என்றே தோன்றியது. ஊடகத்தினரின் பேச்சுகள், ரசிகர்களின் எதிர்பார்ப்புகள் ஆகியவற்றால் நாங்கள் விரக்தியின் உச்சகட்டத்திற்கே சென்றோம். வேறு வழியின்றி நாங்கள் வெற்றி பெற்றே தீர வேண்டிய நிலைக்குச் சென்று, தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தினோம்" என்று கூறினார். அவரின் இந்த பேச்சு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.