இந்திய ஹாக்கி அணியின் முன்னணி வீரரான சர்தார் சிங் தனது ஓய்வினை அறிவித்துள்ளார்.
இந்திய ஹாக்கி அணியில் கடந்த 12 ஆண்டுகளாக விளையாடி வந்தவர் சர்தார் சிங். 2003-ம் ஆண்டு போலாந்தில் ஜூனியர் அணியில் விளையாடியவர், 2006-ல் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி சார்பில் களமிறங்கினார். 2008-ம் ஆண்டு இந்திய அணி சுல்தான் அஸ்லான் கோப்பையை வெல்ல முக்கியக் காரணமாக இருந்தவர்.
இந்தோனிஷியாவில் நடைபெற்ற ஆசிய ஹாக்கி தொடரின் போது, 2020 டோக்கியோ ஒலிம்பிக் வரை விளையாடுவதற்கான தகுதி தமக்கிருப்பதாக சர்தார் சிங் கூறியிருந்தார். ஆனால், வருகிற செப். 16-ம் தேதி தொடங்கவிருக்கும் தேசிய முகாமுக்கான 25 பேர் கொண்ட பட்டியலில், சர்தார் சிங்கின் பெயர் இடம்பெறவில்லை. இந்நிலையில், சர்தார் சிங் தன் ஓய்வினை அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இதுகுறித்து ஊடகங்கள் வாயிலாக தொடர்புகொண்ட போது, “டெல்லி வந்த பிறகு அதிகாரப்பூர்வமாக இந்த அறிவிப்பை செய்தியாளர்கள் முன் வெளியிடுவேன். இந்திய அணிக்காக போதுமான உழைப்பைக் கொட்டியிருக்கிறேன். தற்போது, என் குடும்பத்தாருடன் தீவிரமாக ஆலோசித்த பின்னே இந்த முடிவை எடுத்திருக்கிறேன். இளம் வீரர்களுக்கு வழிவிடும் விதமாக இந்த முடிவை எடுத்துக் கொள்ளலாம்” என தெரிவித்துள்ளார்.
சர்தார் சிங் அர்ஜூனா மற்றும் பத்ம ஸ்ரீ விருது வழங்கி இந்திய அரசால் கவுரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.