சர்வதேச கிரிக்கெட் போட்டிகளின் தற்போதைய நிலவரப்படி, உலகின் தலைசிறந்த விக்கெட் கீப்பர் யார் என்று கேட்டால், நிச்சயம் தோனியைத்தான் பலரும் தேர்வு செய்வார்கள். ஸ்டம்புக்குப் பின்னால் இருந்தபடி மின்னல் வேகத்தில் ஸ்டம்பிங் செய்வது, ரன் அவுட் சமயங்களில் சமயோஜிதமாக செயல்படுவது, கீப்பிங் பேட்களைக் கால்களில் கட்டிக்கொண்டு அதிவேகமாக ஓடுவது என மிகச்சிறப்பாக ஆடிவருபவர் அவர்.
ஆனால், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பரான ஆடம் கில்கிறிஸ்ட்டுக்கு விருப்பமான விக்கெட் கீப்பராக தோனி இடம்பெறவில்லை. மாறாக அவர் இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் சாரா டெய்லரைத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறார். தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையே நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டேன் வான் நீகிர்க்கை, லெக்சைட் திசையில் இருந்தபடி ஸ்டம்பிங் ஆக்கியதை அடுத்து அவரை கில்கிறிஸ்ட் பெருமிதப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து பேசியுள்ள ஆடம் கில்கிறிஸ்ட், சில தினங்களுக்கு முன்னர் சாரா டெய்லர்தான் உலகின் தலைசிறந்த விக்கெட் கீப்பர் என்று நான் ட்வீட் இட்டிருந்தேன். ஆணோ - பெண்ணோ என்னைப் பொருத்தவரை உலகின் தலைசிறந்த விக்கெட் கீப்பர் அவர்தான். உலகில் மிகச்சிறப்பாக ஆடக்கூடிய விக்கெட் கீப்பர்கள் பலர் இருந்தாலும் நான் இதைத் துணிச்சலாகவே சொல்கிறேன். ஆஸ்திரேலியாவின் அலைஸா ஹீலி என்பவரும் மிகச்சிறந்தவர்தான் என தனது தேர்வு குறித்து விளக்கியுள்ளார்.